1945, ஆகஸ்ட் 6. எல்லா நாட்களையும் போலவே அன்றும் கிழக்கு வெளுத்திருந்தது ஜப்பானில். மக்கள் வழக்கம் போல அவரவர்களின் வேளைகளில் மூழ்கியிருந்தார்கள். காலை சரியாக 8.15. ஹிரோஷிமா நகரத்தை வட்டமடித்த அமெரிக்க விமானம், லிட்டில் பாய் (little boy) எனப்படும் அணுகுண்டை வீசிச் சென்றது. அடுத்த வினாடி, கண்ணைக் குருடாக்கும் வெளிச்சம் பரவ, சூரியன் பூமிக்கு வந்திறங்கியது போல் வெப்பநிலை உச்சத்திற்குச் சென்றது. சில நிமிடங்களுக்குள் 80,000 மக்கள் மாண்டு போயினர். எங்கும் மரண ஓலம். 70% கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. 35,000 மக்கள் படுகாயமுற்றனர். காணும் இடமெல்லாம் எரிந்து கருகிய உடல்கள். வார்த்தைகளால் விவரிக்க முடியாப் பேரழிவு. அந்த ஆண்டு இறுதியில் உயிழந்தோர் எண்ணிக்கை 1,40,000 ஆக உயர்ந்திருந்தது.

பல்லாயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்கள். இருந்த போதிலும், மருத்துவமனைப் பற்றாக்குறையால் ஏராளமானோர் சாலைகளில் மடிந்து விழுந்தனர். சாம்பல் மேடுகள் மட்டுமே மிச்சம். மீள முடியா நிலைக்குச் சென்று விட்டதாக உலக நாடுகள் ஜப்பானைக் கருதின. ஆனாலும், உலகத்து மக்களுக்கு சொல்வதற்கு அவர்களிடம் ஒரு செய்தி இருந்தது. சில வருடங்களிலேயே விழுந்து சிதறிய சாம்பல்களிலில் இருந்து, எழுந்து நடந்தது ஜப்பான். அசுரத்தனமான உழைப்பைக் கொட்டினார்கள் மக்கள். அனைவரிடமும் ஒரு வேட்கை இருந்தது. இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை. ஆனால், படைப்பதற்கு ஒரு பொற்காலம் இருக்கிறது என்று தெளிவாக உணர்ந்திருந்தார்கள் ஜப்பானியர்கள். உலக மக்களைத் திரும்பிப் பார்க்க வைப்பதற்கு, அவர்களிடம் அந்தச் செய்தியைக் கொண்டு போய் சேர்ப்பதற்கு ஜப்பானியர்களுக்குத் தெரிந்த ஒரே வழி உழைப்பு!!!
இன்றைக்கு ஹிரோஷிமா நகரம் உலகின் முக்கிய உற்பத்தியாளர்களின் மையமாக விளங்குகிறது. ஜப்பானியர்கள் வென்றிருக்கிறார்கள். அந்தச் செய்தியையும் உலக மக்களிடம் ஓங்கி ஒலிக்கச் செய்திருக்கிறார்கள். இன்னொரு ஹிரோஷிமா வேண்டாம் என்பதே அவர்களின் செய்தி.
படிகளில் படிந்துபோன மனிதனின் சாம்பல்

மேலிருக்கும் புகைப்படத்தைப் பாருங்கள். என்னவென்று தெரிகிறதா? தாக்குதல் நடைபெறுவதற்கு சில வினாடிகளுக்கு முன் வங்கியின் வாசலில் நின்றுகொண்டிருந்த ஒருவர், ஏற்பட்ட கடும் வெப்பத்தினால் அப்படியே உயிருடன் சாம்பலாகக் கரைந்து விட்டார். அவர் உடல் இருந்த இடம் கருப்பாகவும், மற்றைய இடங்கள் வெப்பத்தினால் வெளிர் நிறமாகவும் தெரியக் காரணம் அது தான்.
நூற்றாண்டு நினைவுச்சின்னம்

இந்தக் கட்டிடம் 1915-ல் ஹிரோஷிமாவில் கட்டப்பட்டது ஆகும். குண்டுவீச்சில் எஞ்சிய சில கட்டிடங்களில் இதுவும் ஒன்று. யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக இக்கட்டிடத்தை அறிவித்துள்ளது.

ஜப்பானியர்கள் பல தடைக்கற்களைத் தகர்த்த பின்னரே இவ்விடத்தைப் பிடித்திருக்கிறார்கள். 2045-ல் அமைதி மற்றும் படைப்பாற்றலுக்கான நகரமாக ஹிரோஷிமாவை மாற்ற ஜப்பானிய அரசு முயன்று வருகிறது.
அமைதியை உணர்த்தும் அருங்காட்சியகம்

அணுகுண்டுத் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் பின்னாளில் ஹிரோஷிமா பீஸ் மெமோரியல் மியூசியத்தில் (Hiroshima peace Memorial Museum) பணியில் அமர்த்தப்பட்டார்கள். மேலும், இவர்கள் உலகமெங்கிலும் பயணித்து, அமைதியின் அவசியத்தை வலியுத்தி வருகின்றனர்.
நோபல் பெண்மணி செட்சுகோ தர்லோவ் (setsuko Thurlow)

கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் (Nobel) பரிசானது , சர்வதேச அணு ஆயுத ஒழிப்பு இயக்கமான ICAN (International Campaign to Abolish Nuclear Weapons) னிற்கு வழங்கப்பட்டது. அந்த மேடையில் பேசிய செட்சுகோ தர்லோவ் (setsuko Thurlow), உலக அமைதியின் முக்கியத்துவத்தையும், அணு ஆயுதங்களின் கோரத் தாக்குதல்கள் பற்றியும் எடுத்துரைத்தார். 1945 அணுகுண்டுத் தாக்குதலில் உயிர் பிழைத்த தர்லோவைக்காட்டிலும் வேறு யார் இவற்றைப் பற்றி அதிகம் பேசிவிட முடியும்?
நட்புக்கரம்

2016-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த பாரக் ஒபாமா (Barack Obama) ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பதவியிலிருக்கும் ஒரு அமெரிக்கப் பிரதமர் ஜப்பானுக்குச் சென்றது அதுவே முதல் முறை. அணுகுண்டினால் பாதிக்கப்பட்ட ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களுக்குச் சென்ற ஒபாமா , உயிரிழந்தோரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். ஒபாமாவை ஜப்பானிய அதிபர் ஷின்சோ அபே (Shinzo Abe) விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றது குறிப்பிடத்தக்கது.
நினைவு நாள்

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி உயிரிழந்தோருக்கான நினைவஞ்சலி, ஹிரோஷிமா நகரில் அனுசரிக்கப்படுகிறது. அந்நாளில் காலை 8.15 – க்கு தேவாலய மணிகள் ஒலிக்கப்படும் (தாக்குதல் தொடங்கிய நேரம்). 73 வருடங்கள் கடந்தும் ஜப்பான் குண்டுவெடிப்பு உலக அளவில் பேசப்படும் ஒன்றாக , பேச வேண்டிய ஒன்றாக உள்ளது. செட்சுகோ கூறியது போல், இன்னொரு ஹிரோஷிமா உருவாக வேண்டாம். நாம் அனைவரும் கைகோர்த்துச் சகோதரத்தையும், அமைதியையும் முன்னெடுப்போம். எதிர்காலம் அன்பிற்கு மட்டுமே அடிமையாய் இருக்கட்டும்.