அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஜாக்சன்வில்லி விமான நிலையத்தில் தான் இந்த விபத்து நடைபெற்று இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த விமான நிலையத்தில் தரை இறங்கிய விமானம் ஒன்று வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் ரன்வேயை விட்டு விலகி அருகில் இருந்த ஆற்றின் மீது பயணித்து நின்று இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் கட்டுப்பாட்டு அதிகாரிகள் இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குழப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கியூபா நாட்டிலிருந்து கிளம்பிய போயிங் 737 விமானம் ஜாக்சன்வில்லி விமான நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்பாகவே, கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானியிடம் கிழக்குப் பகுதியிலுள்ள ரன்வேயில் விமானத்தை தரையிறக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் வழக்கமான நாட்களில் நிலையத்தின் மேற்குப் புறத்தில் தான் விமானத்தை தரையிறக்க அனுமதி கிடைக்கும். காற்றின் வேகம் காரணமாக இந்த மாற்று யோசனையை விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் வழங்கியுள்ளனர். விமானத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததே பிரச்சினைக்கு முதன்மை காரணமாக இருக்கலாம் என்கின்றனர் அதிகாரிகள்.
விமானத்தில் இருந்த தகவல் சேமிப்பு கருவியில் பதிந்துள்ள தகவலின்படி விமானம் தரையைத் தொடும் போது அதன் வேகம் 163 நாட் ஆக இருந்திருக்கிறது. ஓடுபாதையில் விமானத்தின் வேகம் 178 நாட்டாக இருந்திருக்கிறது. காற்றின் வேகம் அதிகரித்ததன் காரணமாகவே ரன்வேயையும் தாண்டி விமானம் ஓடியிருக்கிறது. வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும் த்ரஸ்ட் ரிவர்ஸர் பயன்படுத்தப்படாமலேயே இருந்தது தான் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்றின் அடிப்பகுதியில் எவ்வித சேதமும் இன்றி கருப்புப் பெட்டி எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. விமானி அறையில் என்ன மாதிரியான குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது? ஏன் அவர்களால் விமானத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை? தொழில்நுட்பக் கோளாறு எதுவும் இருந்தனவா? அல்லது விமானியின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்தா என்பது குறித்த கேள்விக்கான பதில்கள் சில நாட்களில் தெரியவரும் என்றார் தலைமை பாதுகாப்பு அதிகாரி லாண்ட்ஸ்பெர்க். இந்த எதிர்பாராத விபத்திற்காக விமானத்தில் பயணித்த ஒவ்வொரு பயணிக்கும் 2500 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. விமானத்தில் இருக்கும் முழு எரிபொருளையும் வெளியே எடுத்து அதன் பின்னர்தான் விமானம் ஆற்றில் இருந்து வெளியேற்றப்படும். தற்போது துளையிட்டு எரிபொருள் வெளியேற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது. சோதனைக்குப் பிறகு இந்த விமானத்தை மீண்டும் இயக்கலாம் என்கிறார்கள் அதிகாரிகள்.