உலகின் மூத்த ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொண்டு உலக அரங்கில் சர்வாதிகாரப் போக்கில் செல்லும் அமெரிக்காவும் சரி, உலகின் மிகவும் ஒழுக்கமான கம்யூனிஸ சித்தாந்த சர்வாதிகார நாடு என்று சொல்லிக்கொண்டு அதே உலக அரங்கில் ஜனநாயக/பலமுனை வல்லரசுகளை உருவாக்க போராடிவரும் சீனாவும் சரி, 5G தொழில்நுட்பத்தை கைப்பற்றவும், உலகின் மிகப்பெரும் பொருளாதாரா நாடக உருப்பெறும் ஆசையில் வர்த்தக யுத்தம் என்ற பெயரில் நேருக்கு நேர் மல்லுக்கு நிற்கும்போது ஈரானையும் வடகொரியாவையும் ஒருசேர சேர்த்த ஒரு நாடு அமெரிக்காவின் அஸ்திவாரத்தை ஆட்டிக்கொண்டிருக்கிறது. கண்களை கூர்தீட்டிக் கொள்ளுங்கள் நீங்கள் இங்கே வாசிப்பது ராஜ தந்திரமல்ல, இது ரஷ்ய தந்திரம்.

ஆண்டு: 2015,
நாள்: நவம்பர் 24,
இடம்: சிரியா துருக்கி எல்லைப்பகுதி,
“துருக்கியன் மலைத்தொடரையொட்டி” (Turkman Mountain) துருக்கியின் ‘F-16’ விமானமானத்தால் அடையாளமறியா போர் விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டது. கிளர்ச்சிப்படைகளுக்கு எதிராக கூட்டு சேர்ந்து குண்டுபோட்டு கொண்டிருந்த சிரியாவும் ரசியாவும் வெடிச்சத்தம் கேட்டு ஒரு கணம் நின்று மலையோரத்தில் சிதறி விழுந்த பாகங்களை எடுத்துப்பார்த்தவுடன் அங்கிருந்து மாஸ்கோவுக்கு தந்தியடிக்கப்பட்டது. வீழ்த்தப்பட்டது ரசியாவின் அதிநவீன போர் விமானங்களில் ஒன்று. துருக்கிய வான்பரப்பை அத்துமீறி அபகரித்ததாக அதன் மீது குற்றம் சுமத்தப்பட்டது. கடந்த மாதம் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியவுடனேயே போர்முழங்கி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது போர் தொடுக்க உத்தரவிட்டதை யாரும் மறந்திருக்கவில்லை. ஆனால் அப்போது வீழ்த்தப்பட்டது திறம்மிக்க ரஷிய விமானப்படையின் வீரர்கள் பயணித்த அதிநவீன விமானம் ஒன்றை.
போர் திசைமாறுகிறதா? கிளர்ச்சிப்படைகளுக்கு எதிரான யுத்தமொன்று இன்னொரு கவுரவத்தை காப்பாற்ற புதிய பெயரில் இடம்பெயருகிறதா?. இல்லை. அங்கேதான் புதிரான புதினின் திட்டம் பிறக்கிறது. அமெரிக்கா உட்பட பலநாடுகள், துருக்கியின் மீது பதிலடி தாக்குதல் தொடுப்பார் என்றே நினைத்திருக்கக்கூடும். ஆனால் நிதானியான புதின் இன்னொரு போருக்கு இதுவல்ல காலம் என்று சரியாக கணித்திருந்தார். “பொறுத்தார் நேட்டோவை அறுப்பார்”.

ஆண்டு : 2019,
நாள் : ஜூலை 12,
துருக்கியின் ராணுவத்திற்கு அன்று புதுவரவு. ஆயுத்தச்சந்தையில் புதியதும் நவீனமானதுமான மற்றும் துருக்கி ஆர்டர் கொடுத்திருந்த “S-400” எனும் எதிர்ப்பு ஏவுகணைகளின் முதல் இறக்குமதி. சந்தேகமே வேண்டாம் ரஷியாவிடமிருந்தேதான். நான்கு வருடங்களுக்கு முன்னர் போருக்கு வெகு அருகாமையில் நின்ற நாடுகள் தற்போது ஆயுதங்களை பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு முன்னேறிய காரணம் என்ன?
வாஷிங்க்டன்-அங்காரா-மாஸ்கோ
அமெரிக்காவின் தலைமையில் செயல்படும் நேட்டோ கூட்டமைப்பு ராணுவத்துள் வலிமைமிக்க ஒன்றான துருக்கி, தலைவன் அமெரிக்காவையே விரோதித்துக் கொண்டு அதன் பரம எதிரியான ரசியாவிடமிருந்து ஆயுதம் வாங்குவதன் நோக்கம்தான் என்ன? இன்கிர்லிக் விமானத்தளத்தின் ஒருபகுதியை அமெரிக்காவிற்கு ஒதுக்கி கொடுத்துள்ள துருக்கி இப்போது அடித்த திடீர் பல்டிக்கு காரணம் அமெரிக்காவின் ஏடாகூடமான யுக்தியும் அதன் அதி அற்புத அதிகப்பிரசங்கி அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் தான். மத்திய ஆசியா, தெற்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா ஆகியவை சந்திக்கும் முக்கியமான புவியியல் செல்வாக்கை கொண்டுள்ளது துருக்கி. அதாவது இருபெரும் வல்லமைகளுக்கும் மையத்தில் உள்ள எல்லைகொடுதான் துருக்கி. இப்போது ரைடு செல்வது ரஷியா என்றால் பொருத்தமாய் இருக்கும்.
5G தொழில் நுட்பத்தில் முன்னோடியாக திகழவும் மென்பொருள் மற்றும் தொழில்நுட்பத்தில் தன்னை எப்போதும் போல முன்னிருத்திக்கொள்ளவும் வளர்ந்துவரும் நாடுகளை மிதித்து நசுக்கிகொண்டிருக்கும் அமெரிக்கா, சீனாவையும் விட்டுவைக்கவில்லை. சீனாவின் மென்பொருள் வளர்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றம் கண்டு அஞ்சிய அமெரிக்கா அதனை ஒரு உளவுபார்க்கும் நாடகத்தை சித்தரிக்க முயல்கிறது. அதே யுக்தியைதான் ரசியாவின் “S-400″க்கும் பயன்படுத்தியது. அது ஒரு ரகசியம் திருடும் எந்திரம் என்றும் அதனை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு தங்களுடைய, ரேடார் கருவிகளிலிருந்து தப்பிக்கும் அதிநவீன போர்விமனமான F-35 உட்பட வேறு பல நவீன போர்த்தடவாளங்களை விற்க மாட்டோம் என்றும், S-400ஐ கொள்முதல் செய்தால் காட்சா (CAATSA- countering americas advesaries through sanctions act) சட்டத்தின் மூலம் அந்நாடுகளின் மீது வர்த்தக தடைவிதிக்கபோவதாகவும் அமெரிக்கா மிரட்டி வந்தது.

இந்த உருட்டல்களுக்கு அஞ்சபோவதில்லை என்பது போல ஒப்பந்தம் போட்டு இதோ மாஸ்கோவிலிருந்து பெட்டியும் இறங்கியாகிவிட்டது. உண்மையில் ட்ரம்ப் நிர்வாகம் அங்காராமீது தடை விதித்தாலும் ஆச்சரியம் கொள்வதற்கில்லை. ஏற்கனவே துருக்கி விமானப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதை அமெரிக்கா நிறுத்திவிட்டது ஆனால், நேட்டோ நாடுகளிக்கிடையேயான விரிசலை கட்சிதமாக பயன்படுத்திய புதின் அவற்றில் ஒரு நாட்டின் வான்பரப்பை, அந்த நாட்டை தன் ஆயுதம் கொண்டு காக்கவைத்தது என்பது மிகவும் உன்னிப்பாக கவனிக்கவேண்டிய விஷயம். ஏனெனில் இதுவரை எந்த ஒரு நாடும் நேட்டோ விதிமுறைகளை பிடிவாதமாக மீறியதில்லை. புதின் மத்திய கிழக்கின் பிரச்சனைகளை சரிகட்டப்பார்க்கிறாரா? அல்லது அந்த தகிப்பில் குளிர்காய இருக்கிறாரா? அதற்கு நாம் சிரியப் போர் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த நூற்றாண்டின் மாபெரும் சோகத்தைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.