9/11 – அமெரிக்காவை உலுக்கிய தீவிரவாதத் தாக்குதல்

0
343

அமெரிக்காவின் நியூயார்க் நகரம். 2001 – ஆம் ஆண்டு, செப்டம்பர் 11 – ஆம் தேதி. எப்போதும் போலவே வழக்கமான ஒரு நாளுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது நகரம். காலை சரியாக 8.46 மணி. அப்போதுதான் அது நிகழ்ந்தது. அமெரிக்காவின் புகழ் மிக்க கட்டிடங்களுள் ஒன்றான உலக வர்த்தக மையத்தின் மீது எங்கிருந்தோ வந்த விமானம் மோதியது. விண்ணை முட்டும் தூசுக் காற்றில் நகரம் இருண்டது. உலகின் வலிமை வாய்ந்த இராணுவமாகப் பார்க்கப்பட்ட அமெரிக்க ராணுவத் தலைமையகத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. விபத்தா? திட்டமிட்ட தாக்குதலா? யார் செய்தார்கள்? என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் முன் சுமார் 3000 பேர் உயிரிழந்திருந்தார்கள். அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய தாக்குதல் அதுதான். அமெரிக்காவின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து சரிந்ததும் அப்போதுதான்.

9/11 attack
Credit: The Times Of Isreal

விமானங்களின் கடத்தல்

அடுத்த நாள் காலை ஒட்டுமொத்த அமெரிக்கக் காவல்துறையும் களத்தில் இறங்கியிருந்தது. அமெரிக்காவின் கறுப்பு நாள் என ஊடகங்கள் சொல்லிக் கொண்டிருந்தன. இம்மாபெரும் தாக்குதல் நடந்ததைப் பற்றிய விசாரணைகள் முடுக்கி விடப்பட்டன. கடத்தப்பட்ட 4 விமானங்களைப் பற்றியும் அதில் பயணம் செய்தவர்களைப் பற்றியும் தீவிரமாகத் தகவல்களை சேகரித்துக் கொண்டிருந்தது புலனாய்வுத்துறை. நான்கு வெவ்வேறு நகரத்திலிருந்து கடத்திவரப்பட்ட 4 விமானங்களைக் கொண்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 19 தீவிரவாதிகள் விமானக் கடத்தலில் ஈடுபட்டிருந்தார்கள்.

அறிந்து தெளிக!
  • பாஸ்டன் விமான நிலையத்திலிருந்து கிளம்பிய விமானம், வர்த்தக மையத்தின் வடக்குக் கோபுரத்தைத் தகர்த்தது.
  • உலக வர்த்தக மையத்தின் தெற்குக் கோபுரமானது லோகன் விமான நிலையத்திலிருந்து கடத்தப்பட்ட விமானத்தால் தகர்க்கப்பட்டது.
  • அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனின் மீது வொ்ஜினியாவிலிருந்து கிளம்பிய விமானம் வந்து மோதியது.
  • தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட நான்காவது விமானம் பென்சில்வேனியாவில் விழுந்து நொறுங்கியது.

கறுப்பு நாள்

உலகின் வல்லரசு நாடு.  என்னும் அமெரிக்காவின் அதிகாரத்தை அசைத்துப் பார்த்திருந்தார் ஒசாமா பின்லேடன் (Osama bin Laden). சுமார் 7000 பேர் படுகாயம் அடைந்திருந்தனர். கை, கால்கள் என உடலின் பல பாகங்கள் சிதைந்த மக்கள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டே இருந்தனர்.  ஆடம்பர வாழ்க்கைக்கு மட்டுமே பழகியிருந்த அமெரிக்க மக்கள், கூட்டம் கூட்டமாக நியூயார்க் நகரத்தை விட்டு வெளியேறினார்கள். அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு விழுந்த பெரிய அடி. சந்தேகமே இல்லாமல் அந்நாள் அமெரிக்கர்களுக்கு கறுப்புநாள் தான்.

9/11
Credit: USA Today

தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிவித்தது  தீவிரவாத இயக்கமான அல்கய்தா. உலகம் அமெரிக்காவை அதிர்ச்சியாய்ப் பார்த்தது. அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் (George W. Bush) நியூயார்க்கின் வீதிகளில் மக்களோடு மக்களாக நின்றிருந்தார். இந்தத் தாக்குதலில் இருந்து அமெரிக்கா வெளிவரும். வரலாறு  படைக்கும் என முழங்கினார்.

9/11 விசாரணைக்குழு

தாக்குதலைப் பற்றிய விசாரணை அறிக்கையை 2004 – ஆம் ஆண்டு சமர்ப்பித்தது 9/11 விசாரணைக்குழு ஆணையம். தீவிரவாத இயக்கமான அல்கயிதாவின் திட்டப்படியே இவை நடந்தது என அறுதியிட்டுக் கூறியது ஆணையம். மேலும் 19 தீவிரவாதிகளின் பட்டியல், அவர்கள் தீவிரவாத இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்ட ஆண்டு முதலிய பல தகவல்களைச் சமர்ப்பித்தது. விமான நிலையப் பாதுகாப்பு வளையங்களைத் தீவிரவாதிகள் கடந்த விதம், எதிர்காலத்தில் பாதுகாப்புத் துறையில் செய்ய வேண்டிய மாற்றங்களையும் பட்டியலிட்டது. தீவிரவாத இயக்கங்களை வேரறுக்க முழு முனைப்புடன் அமெரிக்கா களமிறங்கிய தருணம் அது.

9/11
Credit: Seattle Times

அமெரிக்காவின் பதிலடி

ஆப்கன் யுத்தத்தில் முதலில் பின்லேடனை ஆதரித்த அதே அமெரிக்கா தான் பின்னாளில் அவருக்கு எதிரியாகவும் மாறியது. 9/11 தாக்குதலிற்குப் பிறகு உலகளாவிய தீவிரவாதத்தை வேரறுப்போம் என அமெரிக்கா களம் கண்டது. ஆப்கானிஸ்தான் துளைத்து எடுக்கப்பட்டது. அமெரிக்காவின் பதிலடி எப்படியிருக்கும் என்று உலக நாடுகள் நடுக்கத்தோடு பார்த்தன. இறுதியில் இத்தாக்குதலின் தொடர்ச்சியாக 2011 – ஆம் ஆண்டு ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார்.

9/11
Credit: Getty Images

9/11 ஐப் பொறுத்தவரை பல வதந்திகள் உண்டு. தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து முன் கூட்டியே தெரிந்திருந்தும் அரசியல் லாபங்களுக்காக அமெரிக்கா அதை மறைத்ததாகக் குற்றச்சாட்டுகள் உண்டு. இரட்டைக் கோபுர கட்டிடம் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது என்று சொல்வோரும் உண்டு. ஆனால், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது மட்டுமே நிருபிக்கப்பட்ட உண்மை. இன்றோடு இத்தாக்குதல் நடந்து 17 வருடங்கள் கடந்திருக்கின்றன. அரசோ, தீவிரவாத இயக்கமோ மக்களின் உரிமைகளுக்கு எதிராக எது நின்ற போதிலும் அதை எதிர்த்துக் கடப்பதே மனிதநேயம். அடிப்படைவாதம் எந்த விதத்தில் வந்தாலும் அது முறியடிக்கப்பட வேண்டியதே.