கடந்த பிப்ரவரி மாதம் புல்வாமாவில் இந்திய சி.ஆர்.பி.எப் வீரர்களின் மீது தாக்குதல் நடத்திய கெய்ஷ் – இ- முகமது என்னும் தீவிரவாத இயக்கத்தின் தலைவரான மசூத் அசாரை ஐ.நா சர்வதேச தீவிரவாதியாக அறிவித்திருக்கிறது. இந்தியாவின் பல கட்ட வலியுறுத்தல்களுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. இதன்மூலம் மசூத் அசார் உலகின் எந்த நாட்டிற்கும் பயணிக்க முடியாது. அவரது இயக்கத்திற்கான ஆயுத மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உட்பட எதையும் வெளியிலிருந்து வாங்க முடியாது.

யார் இந்த மசூத் அசார்?
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பிறந்த மசூத் அசார் பட்டப்படிப்பை முடித்தவர். அங்கிருக்கும் மதரஸாவில் சிறிதுகாலம் ஆசிரியராக இருந்த அசார் பின்பு தீவரவாத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு ஆப்கானிய போரில் கலந்துகொண்டார். அதற்கடுத்து உலகளவில் தீவிரவாத செயல்களுக்காக நிதி திரட்டி பல நாச வேலைகளுக்கு உறுதுணையாக இருந்தார் அசார்.
கடந்த 1994 ஆம் ஆண்டு தகுந்த ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்குள் ஊடுருவிய அசாரை இந்திய ராணுவம் கைது செய்தது. இதற்கு பதிலடியாக 1999-ம் ஆண்டு நேபாளில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர் லைன்ஸ் விமானத்தை கந்தகாருக்கு கடத்திச் சென்ற தீவிரவாதிகள், இந்திய சிறையில் உள்ள மசூத் அசார் உட்பட 3 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். இதனையேற்று மசூத் அசார் உட்பட 3 தீவிரவாதிகளும் விடுவிக்கப்பட்டனர்.

தப்பிச்சென்ற அசார் ஆப்கான் பகுதியில் தஞ்சம் புகுந்தார். அங்குதான் கெய்ஷ் – இ- முகமது அமைப்பைத் தோற்றுவித்தார். மிகப்பெரிய தீவிரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் இணைந்து 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தினார் அசார்.
உலக நாடுகள் பாகிஸ்தானிற்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அசாரை வீட்டுக்காவலில் வைக்க பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டது. ஆனாலும் 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தொடர்குண்டு வெடிப்புகள் மற்றும் பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டார் மசூத் அசார்.
இந்தியாவின் பதிலடி
புல்வாமா தாக்குதலுக்கான பதிலடியாக இந்தியா கெய்ஷ் – இ- முகமது தீவிரவாத இயக்கத்தின் முகாம்கள் இருந்த பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதனால் தீவிரவாதிகளின் வாழ்விடங்கள் அளிக்கப்பட்டன. இதனையடுத்து மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் தீர்மானம் கொண்டுவந்தன. ஆனாலும் இன்னொரு நிரந்தர உறுப்பினரான சீனா இதனைத் தொடர்ந்து தடுத்துவந்தது.

கடந்த பத்துவருடங்களில் நான்கு முறை அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க சீனா முட்டுக்கட்டை போட்டது. தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தின் மீதான விசாரணையை தள்ளிபோட்டுக்கொண்டே சென்றது.
வீட்டோ அதிகாரம் என்றால் என்ன?
வீட்டோ என்னும் லத்தீன் சொல்லிற்கு தடை செய்கிறேன் என்பது பொருளாகும். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் நிரந்த உறுப்பினராக இருக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் அவையில் கொண்டுவரும் தீர்மானங்களை நிராகரிக்கலாம். இந்த ஐந்து நாடுகளின் நிராகரிக்கும் அதிகாரமே வீட்டோ எனப்படுகிறது.
முன்வந்த சீனா
மசூத் அசாருக்கு நெருக்கடி கொடுக்கும் ஐ.நாவின் தீர்மானத்திற்கு பாராமுகம் காட்டிவந்த சீனா தற்போது உறுப்பு நாடுகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்திருக்கிறது. தீர்மானத்திற்கு சீனா ஒப்புதல் அளித்ததன் காரணமாக ஐ.நா ஒருவழியாக மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்திருக்கிறது.