கண்காணிப்பு மற்றும் தாக்குதலை நிகழ்த்தக்கூடிய ஆளில்லா ராணுவ விமானங்களை சீனா பாகிஸ்தானிற்கு விற்க உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இதற்கான திட்டம் கையெழுத்தானது. மேலும் இந்த விமானங்களை தயாரித்த செங்டு நிறுவனத்துடன் இணைந்து எதிர்காலத்தில் பாகிஸ்தானில் ஆளில்லா விமானம் தயாரிக்க இருப்பதாக அந்த அரசு தெரிவித்துள்ளது. இது இந்திய எல்லைப் பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கும் என பாதுகாப்புத்துறை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

48 விமானங்கள்
கடந்த ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி இந்த 48 விமானங்களும் வாங்கப்பட்டிருக்கின்றன. நகரும் இலக்குகளைத் தாக்குதல், தரை இலக்குகள் மற்றும் கண்காணித்தல் போன்ற சோதனைகளில் வெற்றி பெற்றுள்ளது இந்த விமானங்கள். இவ்விமானங்கள் எந்த காலநிலையையும் சமாளிக்கும் திறன் கொண்டது. பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே நடக்கும் மிகப்பெரிய ராணுவ ஒப்பந்தம் இதுதான். கடந்த வாரம் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த ரஷிய அதிபர் விளாடிமர் புதினுடன் எஸ் 400 ரக ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தற்போது சீனா ஆளில்லா விமானங்களை பாகிஸ்தானிற்கு அனுப்பியிருப்பது இந்தியாவிற்குப் போட்டியாகப் பார்க்கப்படுகிறது.

தொடரும் பிரச்சனைகள்
லஷ்கர் – இ – தொய்பா, ஜெயஷ் – இ – முகமது ஆகிய இயக்கங்களால் கடல்வழி மூலமாக ஆபத்து இருப்பதாக இந்தியப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் மிகப்பெரிய உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டத்தில் 4600 கோடி அமெரிக்க டாலர்களை சீனா முதலீடு செய்தது நினைவிருக்கலாம். நெடுஞ்சாலை, ரயில்பாதை, பாதுகாப்புத் துறைகளில் வளர்ச்சி பெற இத்திட்டம் பெரிதும் உதவும் என அந்த அரசு தெரிவித்தது. புதிதாகப் போடப்பட்டு வரும் சாலைகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஷ்மீர் பகுதியில் வருவதால் மேலும் பிரச்சனைகள் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய அரசு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் இந்த ராணுவ ஒப்பந்தம் எல்லைப்பகுதிகளில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
