ஆஸ்திரேலியா தங்களது நாட்டின் 116 வயதான தேசியக்கொடியை, நகலெடுத்து வைத்திருப்பதாக நியூசிலாந்து நாட்டின் தற்காலிக பிரதம மந்திரி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஆஸ்திரேலியர்கள் தங்களுக்கென ஒரு புதிய வடிவமைப்பிலான கொடியை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
நியூசிலாந்து நாட்டின் பிரதமரான ஜெசிந்தா ஆர்டென் (Jacinda Ardern) மகப்பேறு விடுப்பில் சென்றிருப்பதால், அவருக்கு பதில், தற்காலிக பிரதமராக இருக்கிறார் வின்ஸ்டன் பீட்டர்ஸ் (Winston Peters). இவர் அரசு ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “நாங்கள் தான் முதலில் அந்தக் கொடியை பயன்படுத்தத் தொடங்கினோம் என்ற உண்மையை மதித்து, ஆஸ்திரேலியா தங்கள் கொடியை மாற்றிக் கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியா, குற்றச்செயல்களில் ஈடுபட்ட நியூசிலாந்தியர்கள் அவர்கள் நாட்டிற்கே திருப்பி அனுப்பப் படுவார்கள் என்று அறிவித்தது. இது இந்த இரண்டு அண்டை நாட்டினரிடையே விரிசலை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இந்தக் கொடி விவகாரம் சர்வதேச விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இருந்தாலும், உண்மையில் அங்கு என்ன தான் நடக்கிறது என்று தெரிந்து கொள்வோம்.
உண்மையில் கொடியை முதலில் பயன்படுத்தியது யார்?
சந்தேகத்திற்கு இடமின்றி நியூசிலாந்து தான் இந்த வடிவமைப்பை முதலில் பயன்படுத்தத் தொடங்கியது. நீல நிறப்பின்னணியில், யூனியன் ஜேக் மற்றும் விண்மீன்களுடன் கூடிய, தென் குறுக்கு விண்மீன் கூட்டத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் கொடியை, 1902-ம் வருடம் நியூசிலாந்து பயன்படுத்தத் தொடங்கியது. ஆனால், 1901-ம் ஆண்டு வரை ஒரு கொடியை வைத்திருந்தாலும், 1954-ம் ஆண்டு வரை ஆஸ்திரேலியா அதிகாரபூர்வமாக தனக்கென ஒரு கொடியை ஏற்றுக் கொள்ளவில்லை.
அதே சமயம், ஒரே மாதிரித் தோற்றமளித்தாலும் இந்த இரண்டு நாடுகளின் கொடிகளும் ஒன்று இல்லை.

நியூசிலாந்து கொடியில், தென் குறுக்கு விண்மீன் கூட்டங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் ஐந்து முனை கொண்ட சிவப்பு விண்மீன்கள் இடம் பெற்றுள்ளன. மாறாக, ஆஸ்திரேலியா கொடியில், 7 முனைகளைக் கொண்ட நான்கு வெள்ளை விண்மீன்கள் இடம் பெற்றுள்ளன. இதில் 6 முனைகள், ஆஸ்திரேலியாவின் 6 மாநிலங்களையும், ஒரு முனை அதன் பிராந்தியத்தையும் குறிக்கிறது.
ஐந்து முனைகளைக் கொண்ட, ஐந்தாவது விண்மீன் மட்டுமே விண்மீன் கூட்டங்களைக் குறிக்கிறது.
புரியவில்லை எனில், கீழே இருக்கும் படத்தின் நடுவே இருக்கும் வெள்ளை கோட்டை இட -வலமாக இழுத்துப் பார்த்து வேறுபாட்டை அறிந்துகொள்ளுங்கள்.
நியூஸிலாந்து – ஆஸ்திரேலியா கொடிகள் வேறுபாடு இதுதான்
[twenty20 img1=”4633″ img2=”4640″ width=”100%” offset=”0.5″]படத்தின் நடுவே தெரியும் வெள்ளை கோட்டை இட-வலமாக இழுக்கவும். முழுவதும் இடதுபுறம் இழுத்தால் தெரிவது, நியூஸிலாந்து கொடி. வலதுபுறம் முழுதாக இழுத்தால் தெரிவது ஆஸ்திரேலியா கொடி.
எப்படி கொடிகள் ஒரே மாதிரியான வடிவமைப்பைப் பெற்றன ?
கேப்டன் ஜேம்ஸ் குக் (James Cook) ஆஸ்திரேலியாவில், பிரிட்டிஷ் காலனியை அறிவித்தபோது, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவை பிரிட்டிஷ் கடற்படை பயன்படுத்திய நீல கொடியை அடிப்படையாகக் கொண்ட, ஒரு கொடியை பகிர்ந்து கொண்டன.
1901-ம் ஆண்டுக்கு முன்பு நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவின் காலனியாகக் கருதப்பட்டது. அதன் பெயர் ஆஸ்திரேலிய அரசியலமைப்பில் கூட இடம் பெற்றிருந்தது. 1890 – களில், காலனிகளுக்கு இடையேயான “கூட்டமைப்பு” மற்றும் ஒரு பொதுநலவாரிய அமைப்பை உருவாக்குவதற்கான விவாதங்கள் நடைபெற்றன.
ஃபிஜி (Fiji) மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள், ஆரம்பத்தில் அந்த கலந்துரையாடல்களில் ஒரு பகுதியாக இருந்தன. ஆனால் அவை கூட்டமைப்பில் சேர விரும்பவில்லை.

இந்த தேசியக்கொடி சர்ச்சை இதற்கு முன்னரே இருந்ததா ?
2016-ம் ஆண்டில், நியூசிலாந்து, அதன் கொடியின் மறுவடிவமைப்பு சம்பந்தமாக ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தி அதன் மூலம் சிக்கல்களை தெளிவு படுத்த முயன்றது. ஆனால் பீட்டர்ஸ், அந்த மாற்று வடிவமைப்புத் திட்டத்தை எதிர்த்ததோடு, கொடியை மாற்ற வேண்டுமானால், அதை ஆஸ்திரேலியா தான் செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
இறுதியில், குடிமக்களும் நடப்பிலிருக்கும் கொடியை ஆதரித்தே வாக்களித்தனர்.
வேறு எந்த நாடுகள் ஒரே மாதிரியான கொடியைக் கொண்டிருக்கின்றன?
சாட் (Chad) மற்றும் ருமேனியா (Romania), இந்தோனேசியா (Indonesia) மற்றும் மொனாக்கோ (Monaco), அயர்லாந்து (Ireland) மற்றும் ஐவரி கோஸ்ட் (Ivory Coast), லக்சம்பர்க் (Luxembourg) மற்றும் நெதர்லாந்து (Netherlands) ஆகிய நாடுகள் ஒன்று போலத் தோற்றமளிக்கும் கொடிகளைக் கொண்டிருக்கின்றன. இதேபோன்ற வடிவொத்த கொடிகளுடன் ஏராளமான நாடுகள் உள்ளன.
நியூசிலாந்து ஏன் கோபமாக இருக்கிறது?
தங்கள் கொடியை, ஆஸ்திரேலியாவுடன் மக்கள் குழப்பிக் கொண்டது போதும் என்று நியூசிலாந்து நினைக்கிறது. நியூசிலாந்து மக்கள் இதனால் தங்களுக்கென்று ஒரு தனித்த அடையாளம் கிடைக்காமல் வருந்துவதாக அந்நாடு நினைக்கிறது.
டம்ளர் (Tumblr) மற்றும் ரெட்டிட் (Reddit) ஆகிய சமூக வலைத்தளங்களின் உலக வரைபடங்களில் கூட, நியூசிலாந்து காணக் கிடைக்கவில்லை.
இவை அனைத்திற்கும் மேலாக, 2016-ம் ஆண்டு கசக்கஸ்தான் நாட்டில் சுங்க அதிகாரிகளின் விசாரணையில் சிக்கிய நியூசிலாந்து குடிமகன் ஒருவரை, அந்த அதிகாரிகள் நியூசிலாந்து என்ற நாட்டின் குடிமகனாக ஏற்க மறுத்து விட்டனர். உலகத்தின் பார்வையில் நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் ஒரு மாநிலமாகவே கருதப்பட்டு வருகிறது.