நேற்று ஆர்டிக் கடலை ஒட்டியுள்ள நார்வேயின் இங்கோயா என்னும் இடத்தில் மீனவர்கள் வித்தியாசமான திமிங்கலம் ஒன்றினைக் கண்டிருக்கிறார்கள். கழுத்திலிருந்து துடுப்பு பகுதி வரையிலான பகுதியில் கோப்ரா வகை கேமராவை மாட்டும் பெல்ட்டோடு அந்த திமிங்கலம் சுற்றித்திருந்திருக்கிறது. இதுகுறித்து உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நார்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்திருக்கின்றனர்.
ரஷியாவின் முர்மான்ஸ்க் கப்பற்படை அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 425 கிலோமீட்டர் தூரத்தில் தான் இந்த திமிங்கலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இது ரஷியாவின் சதி வேலையாக இருக்கும் என நார்வே குற்றம்சாட்டுகிறது.
எப்படி இது சாத்தியம்?
80 களின் இறுதியில் ரஷியா அதிக நினைவாற்றல் மற்றும் கூர்மையான கண்பார்வை கொண்ட டால்பின்களை பாதுகாப்பு பணிகளுக்காக பயிற்சி அளிக்கும் திட்டத்தை ரஷியா செயல்படுத்தி வந்தது. அடுத்த பத்து ஆண்டுகளில் இது முற்றலுமாக நிறுத்தப்பட்டது. ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு முர்மான்ஸ்க் நகரத்தில் உள்ள கடல்வாழ் உயிரியல் ஆராய்ச்சியகத்தின் துணையோடு திமிங்கலம் மற்றும் நீர் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக 18,000 பவுண்டுகளை அந்நாடு செலவழித்தது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக இம்மாதிரியான பயிற்சிகளில் பெலுகா வகைத் திமிங்கலம் தான் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் தாயகம் ஆர்டிக் பெருங்கடல் ஆகும். மிகுந்த அறிவாற்றல் கொண்ட இந்த திமிங்கலத்தை கடலுக்கடியில் வெடிபொருட்கள் இருக்கிறதா? என்பதைக் கண்டறிய ரஷியா பயன்படுத்திவந்தது. அவ்வாறு பழக்கப்படுத்தப்பட்ட திமிங்கலத்தில் ஒன்றுதான் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக நார்வே பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பனிப்போர் காலத்தில் அமெரிக்காவும் இதேபோல் டால்பின்களுக்கு பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.
மறுக்கும் ரஷியா
நார்வேயின் இந்த குற்றச்சாட்டிற்கு ரஷியா தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. மேலும் திமிங்கலம் கடல்வாழ் சுற்றுச்சூழலில் முக்கிய பங்காற்றுபவையாக இருக்கிறது. தனிப்பட்ட ஆதாயங்களுக்காக இப்படி கடவாழ் விலங்குகளை பயன்படுத்துவது எதிர்காலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.