மக்கள் புரட்சி என்பது அத்தனை எளிதில் கட்டுப்படுத்தகூடியதில்லை என்பதை வரலாறு ஒவ்வொரு காலகட்டத்திலும் நிரூபித்திருக்கிறது. அணுப்பிளவைப் போல் இதுவொரு தொடர் நிகழ்வு. ஒருமுறை போராட்டம் துவங்கிவிட்டால் இலக்கை அடையாமல் அவை ஒருபோதும் நிற்பதில்லை. கிடைக்கும் சிறு துரும்பையும் அது தனது வளர்ச்சிக்கு, மக்களை ஒரு புள்ளியை நோக்கி திரட்டுவதற்கு பயன்படுத்திக்கொள்ளும். அதுவும் போராட்டத்தில் நவீன சாதனங்கள் கிடைத்துவிட்டால்? மிகப்பெரும் பிரளயமே வெடிக்கும். அத்தகைய ஒரு தருணத்திற்குத்தான் ஹாங்காங் போராட்டம் தயாராகிவருகிறது.

ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபரை தைவான், சீனாவிடம் ஒப்படைக்கும் திட்டம் தொடர்பான மசோதாவை அரசு நடைமுறைப்படுத்த கூடாது என்று வலியுறுத்தி இந்த போராட்டத்தை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். பல நாட்களாக நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தை தலைவர்கள் யாரும் முன்னெடுக்கவில்லை. ஆனாலும் அனைத்து மக்களின் நடவடிக்கைகளிலும் ஒரு ஒத்திசைவு இருக்கிறது. அதற்கு காரணம் டெலிகிராம் என்னும் செயலி தான்.
டெலிகிராம்

அடிப்படையில் டெலிகிராம் குறுஞ்செய்தி அனுப்ப உதவும் செயலியாகும். போராட்டத்தில் கலந்துகொள்ளும் ஏராளமான மக்கள் டெலிகிராம் குரூப் என்னும் வசதி மூலமாக இணைந்துள்ளனர். இதன்மூலம் தகவல் பரிமாற்றம் எளிதாக நடைபெறுகிறது. சங்கேத சொற்கள், குறியீடுகள் மூலமாக போராட்டத்தின் அடுத்தகட்டத்தை மக்களே தீர்மானிக்கிறார்கள். சில டெலிகிராம் குரூப்களில் 70,000 பேர்வரை இருக்கிறார்களாம். மேலும் போராட்ட முடிவுகள் குறித்த நடவடிக்கைகள் ஓட்டெடுப்பின் மூலம் இறுதிசெய்யப்படுகின்றன. உதாரணமாக கடந்த மாதம் 21ஆம் தேதி, சுமார் 4,000 போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை மாலைநேரத்தை கடந்து தொடருவதா அல்லது முடித்துக்கொள்ளலாமா என்பது குறித்து முடிவெடுப்பதற்காக வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.

உணவுப்பொருட்கள் விற்பனை, முதலுதவி போன்ற தேவைகளுக்கும் இந்த செயலி மூலமே தீர்வைத் தேடிக்கொள்கின்றனர் போராட்டக்காரர்கள். ஒவ்வொருநாள் போராட்டத்திற்கும் புதுப்புது சிம்களுடன் களமிறங்கும் இம்மக்கள் அரசின் நடவடிக்கைகளில் சிக்காமல் இருப்பதை உறுதி செய்துகொள்கின்றனர். அதேபோல போராட்டத்தில் இருக்கும்போது ஏடிஎம் கார்டுகளை இவர்கள் உபயோகிப்பதில்லை. தங்களுக்குத் தேவையான பணத்தை முன்கூட்டியே எடுத்துவிடுகின்றனர். டெலிகிராம் போலவே வேறு சில ஆப்களையும் மக்கள் உபயோகிக்கின்றனர்.

போராட்டக்காரர்கள் அனைவரையும் சீன அரசால் கைது செய்யமுடியாது என்றாலும்கூட பிரபலமான சிலரை சிறைபிடித்து கடுமையான தண்டைனைகள் கொடுப்பதன்மூலம் போராட்டத்தை நீர்த்துப்போகச்செய்ய சீனா எத்தனிக்கிறது. ஆனாலும் சுதந்திரத்தாகம் அத்தனை சீக்கிரத்தில் தனியக்கூடியதில்லை. அது சீனாவிற்கு புரியும் வரை ஹாங்காங் மக்களின் இந்த வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் தொடரத்தான் செய்யும்.