ஆதிவாசிகளாக வாழ்ந்த மனித இனம் இன்று மிகப்பெரிய வளர்ச்சிகளைக் கண்டிருக்கிறது. புதிய புதிய கண்டுபிடிப்புகளால் மனித வாழ்வு பல உயரங்களை எட்டிப் பிடித்திருக்கிறது. அறிவியல், பண்பாடு, சமூகக் கட்டமைப்பு என வாழ்வில் பல மாற்றங்கள் வந்துவிட்ட இந்த 21 – ஆம் நூற்றாண்டிலும் அடிமைகளின் விற்பனை நடக்கிறது என்றால் நம்புவீர்களா?
உண்மை தான். ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வறுமையின் காரணமாக வெளியேறும் பலர் அடிமைகளாக்கப்படுகிறார்கள். பணத்திற்காக இப்படி விற்கப்படும் மனிதர்களில் பலரும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தான். லிபியாவில் அடிமைகளை வாங்குவதெற்கென தனிச் சந்தைகளே உள்ளன.

வறுமையின் கோரம்
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, செனகல், அல்ஜீரியா ஆகியவற்றில் வறுமை தலை விரித்தாடுகிறது. குடும்பச் சுமையின் காரணமாகப் பல குழந்தைகள் தங்களின் பெற்றோர்களின் அனுமதியின் படியே வேலையில் அமர்த்தப்படுகிறார்கள். பெரும்பாலும் இத்தகைய குழந்தைகள் உயர் வகுப்பினரின் வீடுகளில் உதவியாட்களாக சேர்க்கப்படுகின்றனர். ஒருநாளைக்கு சராசரியாக 15 மணி நேர வேலை. ஒரு வேளை உணவு மட்டுமே இவர்களுக்கு வழங்கப்படுகிறது. அத்தகைய வீட்டு உரிமையாளர்கள் வேலை செய்ய இயலாத குழந்தைகளைக் கண்மூடித்தனமானத் தாக்குகின்றனர். இப்படிப் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் சம்பத்தப்பட்டவர்களைப் பற்றிப் புகார் அளித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

மேலும், சில உரிமையாளர்கள் வெளிநாடுகளில் உள்ள உறவினர் வீடுகளில் வேலைக்கு அனுப்புவதாக பெற்றோரிடம் வாக்களித்து விட்டு அக்குழந்தைகளை விற்று விடுகின்றனர். முன் பணமாக பெற்றோர்களிடம் பெரும் தொகை வழங்கப்பட்டு விடும். இப்படிப் பெற்றோரை விட்டுப் பிரியும் குழந்தைகள் திரும்பி வருவதேயில்லை. மத்தியக் கிழக்கு நாடுகளின் எங்கோ ஓரிடத்தில் ஆயுள் முழுவதும் உழைக்கும் அடிமையாகவே மாறிப் போகிறார்கள் அம்மழலைகள்.
அகதிகள் பிரச்சனை
வட மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து, வருடத்திற்கு 2 லட்சம் மக்கள் அகதிகளாக ஐரோப்பாவிற்குப் பயணிக்கிறார்கள். நைஜீரியா, சாட், அல்ஜீரியா, மவுரிட்டானியா, செனகல் எனப் பல நாட்டு மக்களும் வறுமையின் காரணமாகப் புலம் பெயர்ந்து வருகின்றனர். இப்படி அகதிகளாக வருவோர் லிபியாவைக் கடந்து மத்தியத் தரைக்கடல் வழியாக ஐரோப்பாவை அடைகிறார்கள்.

லிபியாவிலிருந்து எண்ணற்ற படகுகள் அகதிகளைத் திருட்டுத்தனமாக ஐரோப்பாவிற்கு அழைத்துச் செல்கின்றன. இதற்கெனக் கணிசமான தொகையைக் கட்டணமாக வசூலிக்கிறார்கள் படகுகளின் உரிமையாளர்கள். எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத சாதாரண ரப்பர் படகுகள் இவை. இப்படிப் பாதுகாப்பில்லாத பயணங்களால் பல படகுகள் கடலுக்குள் கவிழ்ந்து போகின்றன. சமீபத்தில் மத்தியக்கடலில் பயணித்துக்கொண்டிருந்த ரப்பர் படகு கவிழ்ந்ததால் 100 அகதிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
அகதிகள் சந்தை
படகில் பயணிக்கக் காத்திருக்கும் மக்களிடையே தரகர்களால் பேரம் பேசப்படுகிறது. லிபியாவில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லிப் பலரை அழைத்துச் செல்கின்றனர். இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் நேரிடையாக அகதிகள் ஏலம் விடும் தனியார் விடுதிகளை அடைவார்கள். ஓவ்வொரு வாரமும் அங்கு மனிதர்கள் ஏலம் விடப்படுவார்கள். இதில் பெண்களும் அடக்கம் என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை.
மனிதர்களை ஏலத்தில் எடுப்பவர்கள் தங்களின் தேவை முடிந்ததும் அதிக விலைக்கு அவர்களை விற்று விடுவார்கள். இப்படி உலகம் முழுவதிலுமிருந்து ஆட்கள் லிபியாவில் கூடுகிறார்கள். இவற்றைக் கட்டுப்படுத்த அங்கு நிலையான ஆட்சி இல்லாததும் இந்தக் கொடூரம் நிகழ முக்கியக் காரணம்.

மரிக்கும் மானுடம்
அகதிகளை ஏற்கப் பல நாடுகளும் தயக்கம் காட்டுவதாலும் இப்பிரச்சினைகள் வருவதாக ஐ.நா தெரிவிக்கிறது. குடியேறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஏராளமானோர் இத்தகைய தரகர்களின் பிடியில் சிக்கிக் கொள்கின்றனர். இப்படி அகதிகளாக வரும் பெண்கள் பலர் விபச்சாரத்திற்குத் தள்ளப்படுகின்றனர். கொல்லப்படும் அகதிகளைப் பற்றி வெளியுலகத்திற்கு எவ்விதத் தகவலும் தெரிய வராது. இன்றும் வறுமையின் துயர் தாங்க இயலாமல் பலர் இப்படிப் பயணித்துக்கொண்டே தான் இருக்கின்றனர். வேலைக்குச் சென்ற குழந்தைகளின் நிலவரம் தெரியாமல் கண்ணீர் வடிக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை ஆப்பிரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.