இரண்டாம் உலகப் போர் ஓய்ந்த சில ஆண்டுகளில் ரஷ்யாவும் அமெரிக்காவும் வேறு ஒரு போருக்குத் தங்களை தயார் படுத்திக் கொண்டன. ஆழிப்பேரலை போல் மனிதத்தை அடித்துச் சென்ற இரண்டாம் உலக மகாயுத்தத்தின் சுவடுகள் அழியும் முன்னே இந்த இரு நாடுகளும் அதிகார வர்க்கப் போட்டியின் ஆரம்ப பக்கங்களை எழுதத் தொடங்கிவிட்டன.

கொரிய தீபகற்பம் இரண்டாக உடைந்து வடகொரியா தென்கொரியா பிரிந்தது, ஜெர்மனியின் குறுக்கே பெர்லின் சுவர் கட்டப்பட்டது, வியட்நாம் நாட்டின் உள்நாட்டுப் போர் சர்வதேச பிரச்சினையாக மாறியது, ஈரானியப் புரட்சி, வளைகுடா யுத்தம், ஆப்கானிய போர் என அமெரிக்கா – ரஷியா தூண்டுதலால் நிகழ்ந்த கலவரங்களை பட்டியல் போட்டால் படித்து முடிக்க ஒரு வருஷமாவது ஆகும். சோவியத் யூனியன் சிதறு தேங்காய் போல் உடைந்ததற்குப் பின்னால் நிலைமை கொஞ்சம் சீரானது. ஆனால் அமெரிக்கா ரஷ்யா இடையேயான அந்த பனிப்போரின் எச்சம் இன்றும் மனித குலத்திற்கு ஆபத்தை அளிப்பவையாக உள்ளன.

தன்னுடைய அதிகார பலத்தை நிரூபிக்க அமெரிக்கா ஆயுதங்களின் மேல் நம்பிக்கையை குவித்தது. ஆயுதங்கள் என்றால் நாட்டு வெடிகுண்டுகளோ, கண்ணிவெடிகளோ இல்லை. அனைத்தும் அணு ஆயுதங்கள். இவற்றை பரிசோதித்து பார்க்கவே சில தீவுகளை வளைத்துப் போட்டது அமெரிக்கா. அங்கிருந்த மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். தெற்கு பசிபிக் தீவுகளான மார்ஷல், எனிவேடாக் போன்ற தீவுகளில் 1946முதல் 1958 ஆம் ஆண்டு வரை 67 முறை அணுஆயுத சோதனைகளில் ஈடுபட்டது அமெரிக்காவும் பிரான்சும். அப்போது தயாரித்த அணுகுண்டுகளிலேயே மிகவும் மோசமானது பிராவோ ஹைட்ரஜன் குண்டு. 1954 ஆம் ஆண்டு இந்த பிராவோ குண்டு தயாரிக்கப்பட்டது. சாதாரண அணுகுண்டை காட்டிலும் இவை பல மடங்கு சக்தி வாய்ந்தவை. ஹிரோஷிமா மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டை காட்டிலும் இந்த பிராவோ குண்டு ஆயிரம் மடங்கு வலிமையானது. இதனால் உலக நாடுகள் கடும் பீதி அடைந்தன. அமெரிக்காவின் இந்த அணு ஆயுத சோதனையை கைவிட வேண்டும் என கண்டனக்குரல்கள் ஐநா மன்றத்தில் ஒலிக்கவே ஒரு வழியாக அமெரிக்கா அதற்கு ஒப்புக் கொண்டது. தெற்கு பசிபிக்கில் உள்ள ரூனித் தீவில் பெரிய கான்கிரீட்டால் ஆன டோம் ஒன்று கட்டப்பட்டது.

அணுக்கழிவுகள் மற்றும் கதிர்வீச்சு சோதனைகள் நடத்தப்பட்ட இடத்தில் இருந்த மண் மற்றும் சாம்பல் ஆகியவை இதனுள் வைக்கப்பட்டு மூடப்பட்டது. 45 சென்டிமீட்டர் அடர்த்தி கொண்ட இந்த டோம் கடந்த 1970ஆம் காலகட்டத்தில் நிரந்தரமாக மூடப்பட்டது. இதனை இதனை மக்கள் சவப்பெட்டி என்கிறார்கள். எதிர்காலத்தில் இதன் மூலம் எந்தவித ஆபத்தும் வராது என்றிருந்த நிலையில் தற்போது அந்தக் கூற்று பொய்யாகி இருக்கிறது. இந்த சவப்பெட்டியிலிருந்து கதிர்வீச்சுக்கள் பசுபிக் கடலில் கலப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த சவப்பெட்டியில் விரிசல்கள் விட்டு நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே வருகிறது. இது குறித்து கவலை தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் அவை இந்த பிரச்சினையில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் அரசுகள் உடனடியாக தலையிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க முன்வரவேண்டுமென ஐநா தெரிவித்துள்ளது.