வட கொரிய அதிபர் கிங் ஜோங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆகிய இருவரும் அணுஆயுத ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொள்ள வியட்நாம் நாட்டில் தங்கியிருக்கின்றனர். அந்நாட்டின் தலைநகர் ஹனோயில் இந்த சந்திப்பானது கடந்த செவ்வாய்கிழமையன்று நடைபெற்றது. இதற்காக வட கொரிய அதிபர் 60 மணிநேர ரயில் பயணத்தை மேற்கொண்டார். வட கொரியாவில் இருந்து சுமார் 2,000 மைல் தூரத்தில் இருக்கும் வியட்நாம் நாட்டிற்குச் செல்ல இரண்டரை நாட்களை ரயிலில் கழித்துள்ளார் உன்.

ஒரு நாட்டின் அதிபர் இத்தனை நீண்ட, சிரமமான பயணத்தை ஏன் மேற்கொள்ள வேண்டும்? சிறப்பு விமானம் மூலம் பயணித்திருந்தால் மூன்று மணிநேரத்திற்குள் வியட்நாமை அடைந்திருக்கலாம். ஏன் கிங் சாங் உன் பயணத்திற்கு ரயிலைத் தேர்ந்தெடுத்தார் என்பதில் அவரது வம்ச வரலாறு இருக்கிறது. கிம்மின் தந்தை, தாத்தா என அனைவருமே ரயில் பிரியர்கள் தான். அதை பிரியம் என்று சொல்லிவிட முடியாது. வேண்டுமென்றால் பயம் என்று சொல்லலாம்.
கிம்மின் சிறப்பு ரயிலானது மொத்தம் 21 விதமான குண்டு துளைக்காத தடுப்புச்சுவர்களால் வடிவமைக்கப்பட்டது.
விமான பயம்
கிம்மின் தந்தை கிம் ஜோங் இல் மற்றும் அவரது தாத்தா கிம் இல் சங் ஆகிய இருவருமே விமானப் பயணத்தை பயம் காரணமாக தவிர்த்து வந்தவர்கள். குறிப்பாக 1982 ஆம் ஆண்டு இரண்டு ஜெட் விமானங்கள் நடுவானத்தில் வெடித்துச் சிதறியதில் கலங்கிப்போனார்கள் அதிபர் குடும்பத்தினர். அப்போதைய சோவியத் யுனியனிற்கு விமானம் மூலம் சென்ற கிம் ஜோங் இல் ன் பயணம் செய்தது தான் கடைசியாக வட கொரிய அதிபர் ஒருவர் விமானத்தில் பயணம் செய்ததாகும்.

ஆனால் தற்போதைய அதிபரான கிம் ஜோங் உன் சுவிட்சர்லாந்தில் படிக்கும் போதிருந்தே பலமுறை விமானங்களில் சென்று வந்துள்ளதால் அவருக்கு விமானம் மீதான பயம் குறைவு தான். அதே நேரத்தில் உன் பயணம் செய்திருக்கும் இதே ரயிலை அவரது தந்தை மற்றும் தாத்தா பயன்படுத்தியுள்ளனர். அதற்காக அது பழைய ரயிலும் இல்லை.
ரகசிய ரயில்
கிம்மின் சிறப்பு ரயிலானது மொத்தம் 21 விதமான குண்டு துளைக்காத தடுப்புச்சுவர்களால் வடிவமைக்கப்பட்டது. அதனுள்ளே ஆலோசனை அறை, ஓய்வறை என எல்லா வசதிகளும் இருக்கின்றன. மேலும் கிம் இருக்கும் இந்த ரயிலுக்கு முன், பின் என தலா ஒரு ரயில் பயணிக்கும். தண்டவாளத்தில் ஏதும் விரிசல்கள் இருக்கிறதா? பாதை பாதுகாப்பானதா என முன்னே செல்லும் ரயில் கண்காணிக்கும். பின்பக்க ரயில் அதிபரின் பாதுகாப்பை உறுதிசெய்யும்.

சென்ற முறை அணுஆயுத ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொள்ள சீனாவின் விமானம் ஒன்றில் சிங்கப்பூர் பயணித்தார் உன். இப்போதும் வட கொரியாவின் அதிபர் பயன்பாட்டிற்கென இருந்த சோவியத் யூனியனால் தயாரிக்கப்பட்ட Ilyushin Il-62 விமானத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் இருப்பதால் தான் இந்த ரயில் சிந்தனை. ஹைட்ரஜன் குண்டெல்லாம் தயாரிக்கும் வட கொரியா விமானத் துறையில் இப்படி ஒரு சங்கடத்தை சந்திக்கிறது.