சர்வாதிகாரி என்ற வார்த்தையைப் படித்த உடனே முதலில் ஹிட்லர், முசோலினி, இடி அமீன் போன்ற பெயர்கள் தான் நினைவுக்கு வரும். அவர்கள் மக்களுக்கு இழைத்த கொடுமைகளும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எடுத்த நடவடிக்கைகளும் வரலாற்றின் பக்கங்களில் இன்றும் தீரா இரத்த வாடையைக் கொண்டுள்ளன. ஆனால் இவர்களையெல்லாம் ஒன்றாக சேர்ந்து செய்த கலவை ஒருவர் இருக்கிறார். சர்வாதிகாரம் என்றெல்லாம் அன்னாருடைய “சேவையை” சுருக்கிவிட முடியாது. அவர் “அதுக்கெல்லாம் மேல”.

வம்பான கொரியா
வட கொரியாவின் வரலாறு என்று ஆரம்பித்தால் இந்தக் கட்டுரை முடிய குறைந்த பட்சம் ஓராண்டு ஆகும். அதனால் நாம் வட கொரியாவின் சர்வாதிகாரிகள் என்று ஆரம்பிக்கலாம். ஆனால் அங்கும் பிரச்சனை இருக்கிறது. ஒருங்கிணைந்த கொரியாவை ரஷியாவும், அமெரிக்காவும் ஆளுக்கொரு பக்கம் இழுத்ததினால் கிழிந்துபோன வரைபடத்தின் வட பகுதி வட கொரியாவானது. தென் பகுதி தென்கொரியாவானது. அப்போதுதான் வட கொரியாவின் தலைவராகப் பதவியேற்றார் கிம் இல் சங் (Kim Il Sung) அதன்பின்பு பதவிக்கு வந்தவர் அவருடைய மகனான கிம் ஜாங் இல் (Kim Jong Il). அதன்பின் அவருடைய மகன், அதாவது தற்போதைய வட கொரிய அதிபரான கிம் ஜாங் உன் (Kim Jong Un) பதவிக்கு வந்தார். கொரியர்களின் முகம் போலவே அவர்களுடைய பெயர்களும் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தும்.
வாசகர்கள் குழம்ப வேண்டாம். நீங்கள் மேலே சந்தித்த மும்மூர்த்திகள் யாரையும் சர்வாதிகாரி என்று குறிப்பிடலாம். ஏனென்றால் அந்த பிரகஸ்பதிகள் அப்படித்தான். பெயர் மட்டும் தான் வெவ்வேறானவை. ஆட்சிமுறை எல்லாம் ஒன்றுதான். சர்வாதிகாரம் தான். அதிபரின் வார்த்தையே சட்டம். பிடித்திருந்தால் கட்டித்தழுவும் இவர்கள், எந்த நேரத்திலும் அணுகுண்டை பாக்கெட்டுக்குள் போட்டுவிடும் ஆபத்தானவர்கள். அதனால் நாமும் சற்று மரியாதையாகவே அழைப்போம். எதற்கு வம்பு?
கிம் ஜாங் உன்
கிம் வம்சத்தில் பிறந்ததிலேயே மிகவும் ஆபத்தானவர் என்றால் அது தற்போதைய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தான். ஹைட்ரஜன் குண்டுகள் தயாரிப்பு, ஜப்பான் கடலில் ஏவுகணை சோதனை, நீர்மூழ்கிக்கப்பல்களில் அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்துதல் என இப்பிறவி எடுத்ததே ராணுவத்திற்கு பணிபுரியவே என்பது போல இயங்குபவர் உன். உலகில் ஏராளமான நாடுகளில் ஜனநாயகம் என்னும் சொல் புழக்கத்தில் இருப்பது அவருக்குத் தெரிந்திருக்குமா? என்பது தான் தெரியவில்லை.

அரச குடும்பத்தைச் சேர்ந்த எந்தத் தகவலும் வெளியே கடுகளவு கசியாது. இவ்வளவு ஏன்? உன் பிறந்த வருடம் கூட இன்னும் மர்மமாகவே உள்ளது. ஏதேதோ ஆதாரங்களைக் காட்டி அமெரிக்கா அவருடைய பிறந்தநாள் ஜனவரி 8, 1984 தான் என அடம்பிடிக்கிறது. அவருக்கு திருமணம் நடந்ததா என ஆராய தென்கொரியா தீவிர புலனாய்வு நடவடிக்கை ஒன்றையே நிகழ்த்தியது. அதுவும் எந்த ஆண்டு நடந்தது என்பது பற்றி சரியான தகவல் இல்லை. வெகு ஆண்டுகளுக்குப் பிறகே பொதுவெளிக்கு மனைவியை அழைத்துவந்தார் உன். அடுத்த மர்மம் அவருக்கு எத்தனை குழந்தைகள் என்பது. இரண்டு குழந்தைகள் இருப்பதாகத் தான் நம்பப்படுகிறது.
அணுகுண்டுகள்
வட கொரியாவிற்கு அணுகுண்டு தயாரிப்பதெல்லாம் மிளகாய் பஜ்ஜி செய்வது போலத்தான். உன் பதவிக்கு வந்த பின்னர் இரண்டு முறை அணுகுண்டு சோதனை நடத்தப்படிருக்கிறது. அதற்கு முன்பே மூன்று குண்டுகளை அந்த நாடு பார்த்திருக்கிறது. ஐநா கட்டுப்பாடு, உலக நாடுகள் கண்டனம், பொருளாதாரத் தடை என எது நடந்தாலும் தான் உண்டு, தன் ஹைட்ரஜன் குண்டு உண்டு என இருப்பவர் உன். ட்ரம்ப் பதவியேற்றதிற்குப் பின்னர் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் மறுபடியும் வேதாளம் முருங்கைமரம் ஏறியிருக்கிறது.
இதற்கிடையில் ஜப்பானிய கடற்பரப்பில் நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து ஏவுகணையை ஏவும் தொழில்நுட்பத்தை சோதனை செய்துபார்த்தது வட கொரியா. சிவனே என இருந்த ஜப்பானை சண்டைக்கு அழைக்கும் இந்த குணம் உன்னிற்கு பரம்பரை ஜீனிலேயே இருக்கிறது.

சகோதரப் பாசம்
கிம் ஜாங் உன் உடைய சகோதரர் மலேசியாவின் விமான நிலையத்தில் ஒருமுறை மயக்கமடைந்து விழுந்தார். அவசரகதியாக மருத்துவ வல்லுனர்கள் ஆராய்ந்ததில் கிம் ஜாங் நாம் (Kim Jong-Nam) என்னும் அதிபரின் சகோதரருக்கு விஷம் அளிக்கப்பட்டது உறுதியானது. மலேசிய அரசு உடனடி விசாரணைக்குழு ஒன்றினை அமைத்தார்கள். இல்லையென்றால் இவரை சமாளிக்க முடியாதே? அதோடு இன்னொரு நாட்டின் அரச அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் தங்களுடைய நாட்டில் மர்மமான முறையில் இறந்துபோவது சர்வதேச பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
விசாரணை முடிவுகள் வந்தபோதுதான் அனைவருக்கும் உன் எவ்வளவு “கருணை உள்ளம்” கொண்டவர் என்பது தெரியவந்தது. கொலைமுயற்சியில் வட கொரியாவின் மேல்மட்ட அதிகாரத்தில் உள்ளவர்கள் சம்பத்தப்பட்டிருந்தார்கள். உன் அரசை அதுவரை விமர்சிக்காமலிருந்த சீனா “எப்பா உன் என்னப்பா இதெல்லாம்” என கோபப்பட்டுக்கொண்டது. அதாவது தங்களுக்கும் இந்த கிறுக்குத்தனங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உலக அரங்கில் நைசாக சொல்லி விலகிக்கொண்டது.
ரத்த சொந்தம்
ஆனால் உன் இதற்கெல்லாம் சளைத்தவரா? அவருடைய நெருங்கிய உறவினர்களுக்கு மரணதண்டனை விதித்த வரலாறெல்லாம் இருக்கிறது. Jang Song-thaek என்னும் கொரிய அரசியலில் மிக முக்கிய புள்ளியாக இருந்தவர் உன் உடைய ரத்த சொந்தம். மேலும் அவருடைய மனைவியும் சதி செய்தார் என்று சொல்லப்பட்டது. ஆட்சிக் கவிழ்ப்பிற்கு முயற்சித்தார்கள் என அவர்களின் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன. உடனடியாக தண்டனையும் நிறைவேற்றப்பட்டது. அப்போது அந்தத் தம்பதிக்கு வயது 66 க்கும் மேலே. வன்மம் அப்போதும் உன்னிற்கு குறையவில்லை. அந்தக் குடும்பத்தில் கடைசி குழந்தை வரை மர்மமான முறையில் இறந்துபோன செய்திகள் வந்த அன்றுதான் திருப்தியடைந்தார்.

அச்சுறுத்தல்
அணு ஆயுதங்களை அழிப்பதாக உறுதியளித்த உன் தற்போது மறுபடி அமெரிக்காவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். ட்ரம்ப் தன் பங்கிற்கு காட்டமான அறிக்கைகளை விட்டுகொண்டிருக்கிறார். மெக்சிகோ சுவர் பிரச்சினையில் காங்கிரசுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருப்பதால் தற்போதைக்கு உன் பக்கம் ட்ரம்ப் தனது கவனத்தினைக் குவிக்க மாட்டார். உலகளாவிய பிரச்சினைகளாக மாறியிருக்கிறது உன்னின் அணு ஆயுத சோதனைகள். ஏனெனில் சுற்றுச்சூழல் மாசுபாடு, காலமாற்றம் போன்ற உலகளாவிய சிக்கல்களுக்கு மத்தியில் உன் மிகப்பெரிய தலைவலி. இப்போது இருக்கும் பெரும் பிரச்சினை என்ன என்றால், உன் எப்போது என்ன செய்வார் என்று பரம்பொருளுக்கு மட்டுமே தெரியும் என்பதுதான். ஆனால் என்றென்றும் உன் ஆபத்தானவர் என்பதை மட்டும் உலகப் பெருந்தலைகள் அனைவரும் உணர்ந்தே இருக்கிறார்கள்.
வட கொரியாவில் ராணுவப் பள்ளியில் படித்த உன் பின்னர் மேற்படிப்பிற்காக சுவிட்சர்லாந்தில் சேர்க்கப்பட்டார். அப்போது அவருடன் படித்தவர்கள், உன் மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவர் என்று சொல்வார்களாம். இதையெல்லாம் ட்ரம்ப் கேள்விப்பட்டால் என்ன செய்வார் பாவம்!!