கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மேல் வலுக்கும் புகார்கள்!

0
57
Justin_Trudeau_Canadian-PM-Political-Timeline-Tamil
Credit: Pinterest

உலகத்தமிழ் மக்களால் மிகவும் நேசிக்கப்படும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வின் ஆட்சி  புயலில் சிக்கிக்கொண்டுள்ளது. அகதிகள், தமிழர்கள் மற்றும் சீக்கியர்கள் மத்தியில் மிகவும் கருணை உள்ளம் கொண்டவராகவும் நேர்மையானவருமாக கருதப்படுபவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. சீனாவின் ஹவாய் நிறுவனத்தின் CEO மெங் வான்ஷோ (Meng Wanzhou) அவர்களை அமெரிக்காவின் அன்புக் கட்டளைக்கு ஏற்ப உடனடியாக கைது செய்ததன் மூலம் “ தானும் ஒரு டாலர் நாட்டைச் சேர்ந்தவன்” தான் என நிருபித்தவர்.

Justin_Trudeau_Canadian-PM-Political-Timeline-Tamil
Credit: Pinterest

அவருடைய லிபரல் கட்சியைச் சேர்ந்தவரும் (Liberal party of Canada), முன்னாள் நீதித்துறை அமைச்சருமான Wilson Raybould (பெண்) அவர்கள்,  பிரதமர் ட்ரூடோ மீது கடும் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். கனாடவின் க்யூபெக் (Quebec) நகரைத் தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனமான Snc- Lavanin நிறுவனத்தை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பாதுகாக்க முயற்சிப்பதாக அவர்மீது புகார் கூறியுள்ளார். இதன் மூலம் தனது அதிகாரத்தின் மூலம் ட்ரூடோ, நீதித்துறையை சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் புரட்சி செய்துவருகின்றனர்.

இந்தியாவிலும் இந்நிறுவனத்தின் லீலைகள் அரங்கேற்றம் ஆகியுள்ளன.

SNC – LAVANIN

அகதிகளை கனடாவிற்கு மிக கண்ணியத்துடன் வரவேற்றும், அவர்களுக்கு நல் வாழ்வும் அளிக்கும் ட்ரூடோ,  இந்த SNC நிறுவனத்தை பாதுகாக்க முயற்சிப்பதன் மூலம் இதுவும் ஒரு அகதிகளின் நிறுவனமோ என்று என்னவேண்டாம். உலகெங்கிலும் பல கிளைகளையுடைய லாவனின், ஒரு பிரபல கட்டுமான மற்றும் பாராமரிப்பு நிறுவனமாகும். ட்ரூடோவின் சொந்தத் தொகுதியான க்யூபெக்கை  தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம், இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து பொறியியல் சார்ந்த கட்டுமான வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறது. இதற்காக அந்தந்த நாடுகளின் அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்து குறிப்பிட்ட ஒப்பந்தத்தை கைப்பற்றிவிடும். பத்மா நதியின் (பங்களாதேஷ்) குறுக்கே, இந்தியாவின் போகிபீல் பாலம் (Bogibeel brigade) போன்று கட்டப்பட்ட இரட்டை அடுக்கு பாலத்தின் மூலம் தனது நேர்மையின்மையை நிரூபித்ததால், உலக வங்கியின் நிதிகொண்டு உருவாகும் கட்டுமானங்களிலிருந்து, உலக வங்கியாலேயே 10 ஆண்டுகள் தடைசெய்யப்பட்டது. அதில் அதன் கிளை நிறுவனங்களும் அடக்கம். இந்தியாவிலும் இந்நிறுவனத்தின் லீலைகள் அரங்கேற்றம் ஆகியுள்ளன. அதுபற்றி கடைசியில் பார்க்கலாம்.

சட்டம் கேட்கும் “ Lavanin”

ஆங்கிலத்தில் Remediation Agreement Law அல்லது Deferred Prosecution Agreement என்பார்கள். அதாவது “லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் தனியார் நிறுவனங்களை, அந்நிறுவனத்தால் ஏற்படும் பெருத்த சேதம், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் குற்றவியல் வழக்குகளிலிருந்து வெறுமனே அபராதம் மட்டும் விதித்து, அந்நிறுவனத்தையும் தொழிலாளர்களையும் காப்பாற்றும் சட்டம் ஆகும்‌. சர்வதேச வழக்குகளாயின் அந்த நிறுவனத்தின் சார்பாக அந்த அரசே நிறுவனத்திற்குப் பதிலாக பங்கேற்கும். க்யூபெக் நகரத்தையே டாலரில் புழங்கவைக்கும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் லாவனினும் ஒன்று. அங்கு மட்டும் 9 ஆயிரத்திற்கும் மேலான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. அவ்வப்போது அந்நிறுவனத்தின் மீது ஏற்படும் களங்கத்திலிருந்து அதனைக் காப்பாற்றவே இத்தகைய சட்டம் அதற்கு தேவைப்படுகிறது. மேலும் இந்த சட்டம் தனியார் நிறுவனங்களால் உலகெங்கிலும் முழங்கப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு தொடர்புடைய லஞ்சப்புகார் வழக்குகள், அதற்கு எதிர்மறை தீர்ப்புகளை  பெற்றுத்தருமாயின் அது க்யூபெக் மக்களை பெரிதும் பாதிக்கும். க்யூபெக் தேர்தல் ட்ரூடோவையும் பாதிக்கும்.

snc-lavalin
Credit: CBC.ca

தர்மமே வெல்லும்

இந்த ஊழல் நிறுவனத்துடன் பல அரசியல்வாதிகளுக்கும் தொடர்புள்ளதை கனாடாவின் தேசிய காவல்துறை (Royal Canadian Mounted Police) கண்டுபிடித்தது. இந்த வழக்குகளிலிருந்து இந்நிறுவனத்தைக் காப்பாற்ற நீதித்துறை அமைச்சருக்கு ட்ரோடோ அழுத்தம் கொடுத்துள்ளார். “10 திற்கும் மேற்பட்ட அழைப்புகள், பத்திற்கும் மேற்பட்ட சந்திப்புகளில் remediation சட்டத்திற்கு ஆதரவு கேட்டு ட்ரூடோவும் பிற அமைச்சர்களும் தனக்கு அழுத்தம் கொடுத்ததாக”  போட்டுக்கொடுத்தார் அம்மையார். இந்த சட்டத்திற்கு கடும் எதிர்கருத்து கொண்டவர் ரேபோல்டு. அதோடு நிலுவையில் இருக்கும் பல வழக்குகளை கேள்விக்குறியாக்க ரேபோல்டு விரும்பவில்லை. எதிர்கட்சிகளுக்கு இதைவிடவா ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்? அவருக்கு எதிராக லஞ்சப்புகார்களும் எழத்தொடங்கியுள்ளன. ட்ரூடோ பதவி விலகவுமாறு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திவருகின்றன. ஆனால் இதுபற்றி வாய்பேசாது மவுனம் காக்கிறார் ட்ரூடோ.

இந்தியாவில் மாநில  கம்யூனிஸ்ட் கட்சி  ஒன்றின் மீதுள்ள பெரும் புகார் இதுவொன்றேயாகும்.

இந்தியாவில் SNC

கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல், செங்குளம், பண்ணியார் நீர்மின் நிலையங்களை புதுப்பிக்க கேரள மாநில மின்வாரியம் லாவனின் நிறுவனத்துடன் 243.74 கோடிக்கு  ஒப்பந்தம்  செய்துகொண்டது. அதுவும் எந்தவித டெண்டர்களும் இல்லாமல் நேரடியாகவே. கட்டுமானம் முடிவடையும்போது அரசுக்கு 374.5 கோடி செலவாகியுள்ளது. இதற்கு கைமாறாக 98.3 கோடி ரூபாயை “மலபார் கேன்சர் ஆராய்ச்சி மருத்துவமனை” க்கு SNC  நிறுவனம் வழங்கும் என்று மின்வாரியத்தோடு ஒப்பந்தமும் போடப்பட்டது. இறுதியில் ரிவர்ஸ் கியர் போட்டு டாட்டா காட்டியது லாவனின். அரசுக்கு ஒப்பந்தத்தொகையை  விடவும் அதிக  செலவு ஏன் ஏற்பட்டது ? என்பதே இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கு எதிரான ஊழல் வழக்காகும். இந்தியாவில் மாநில  கம்யூனிஸ்ட் கட்சி  ஒன்றின் மீதுள்ள பெரும் புகார் இதுவொன்றேயாகும்.

ட்ரூடோவையும் கம்யூனிஸ்டையும் சிக்கலில் மாட்டிவிட்ட லாவனின், அடுத்த டெண்டருக்காக காத்திருக்கிறது.