இயற்கை தன்னுடைய எல்லா அஸ்திரங்களையும் பிரயோகித்துப் பார்க்கும் இடமாக இருப்பது ஜப்பான் மட்டுமே. புயல், நிலநடுக்கம், சுனாமி என ஜப்பானியர்களின் சோகம் சொல்லிமாளாது. வருடத்திற்கு ஒரு புதிய அழிவினை எதிர்கொள்ளும் அந்த நாடு தற்போது புதிய சிக்கல் ஒன்றினைச் சந்தித்து வருகிறது. அங்கே குழந்தை பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவிற்குக் குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக அரசு சொல்வது என்ன தெரியுமா? இந்த ஆண்டில் நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கை தான்.
பிரச்சினைகளை சமாளிக்க ஷின்சோ அபே தலைமையிலான அரசு 18 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது.
போர் காலம்
இரண்டாம் உலகப்போர் காலத்தின் போது நிகழ்ந்த ஒட்டுமொத்த மரணத்தைக் காட்டிலும் இந்த ஆண்டு (2018) ஏற்பட்ட மரணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாகும். ஆமாம். இந்த ஆண்டு மட்டும் சுமார் 13 லட்சம் மக்கள் இறந்திருக்கிறார்கள். இந்த எண்கள் ஜப்பானின் எதிர்காலத்தைக் கடுமையாக பாதிக்க இருக்கின்றன.

பொதுவாகவே ஜப்பானில் வயதானோரின் எண்ணிக்கை மிக அதிகம். அந்நாட்டின் மொத்த மக்கட்தொகையில் 20% மக்கள் 60 வயதிற்கு மேலானவர்கள். எனவே இயற்கை மரணங்கள் அங்கே அதிகம்.
பிறப்பு விகிதம்
மரணங்களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரிக்க பிறப்புவிகிதம் கடுமையாகச் சரிந்து வருகிறது. 2018 ஆம் ஆண்டு பிறந்த மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை 9,21,000 ஆக இருந்தது. இது 1899 ஆம் ஆண்டில் இருந்த பிறப்பு விகிதத்தை விட குறைவாகும். இதுகுறித்து ஜப்பானிய தொழிலாளர் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சகம்,” ஜப்பானின் பிறப்பு விகிதமானது கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவிற்குக் குறைந்துள்ளது. இதுகுறித்துத் தீவிர நடவடிக்கைகளை எடுக்கும் நேரம் வந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் மட்டுமல்லாது இதற்கு முந்தய ஆண்டிலும் இப்படியான தரவுகள் தான் காணக்கிடைக்கின்றன. வருடத்திற்கு 25,000 வீதம் பிறப்பு விகிதமானது குறைந்து வருகிறது.
மக்கட்தொகை
ஜப்பானின் மக்கட்தொகை (2015 கணக்கெடுப்பின்படி) 124 மில்லியன் ஆகும். குறைந்துவரும் பிறப்பு விகிதம் மற்றும் அதிகரிக்கும் மரணங்களினால் இந்த எண்ணிக்கை 2065 ஆம் ஆண்டில் 36 மில்லியன் குறைந்து 88 மில்லியனாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது அசாதரணமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அரசின் செயல்பாடு
ஜப்பானைச் சூழும் இப்பிரச்சினைகளை சமாளிக்க ஷின்சோ அபே தலைமையிலான அரசு 18 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது. இந்த நிதியின் மூலம் 2060 ஆம் ஆண்டிற்குள் மக்கட்தொகை 100 மில்லியனை விடக் குறையாமல் வைத்துக்கொள்ள பல நடவடிக்கைகளை அரசு எடுக்க இருக்கிறது.

திட்டத்தின் ஒருபகுதியாக 3 – 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பள்ளிச் செலவினை முழுவதுமாக அரசே ஏற்கிறது. மேலும் வருமானம் குறைந்த குடும்பங்களில் உள்ள 2 வயதுக்குட்பட்ட குழைந்தைகளுக்கு சிறப்பு திட்டங்கள் பலவற்றையும் அரசு எடுக்க இருக்கிறது.