அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகப் போர் பற்றித்தான் இந்த உலகமே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது. சீனப் பொருட்களுக்கு போதிய உரிமம் இல்லாவிட்டால் அமெரிக்க நிறுவனங்கள் அதைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என சமீபத்தில் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு வெளியிட்ட அறிக்கையினால் சீனாவின் மிகப்பெரிய நிறுவனமான ஹுவேய்க்கு (Huawei) பெரும் சிக்கல் வந்துள்ளது.

இனி வர இருக்கும் ஹுவேய் போன்களில் கூகுள் நிறுவனத்தின் செயலி எதுவும் இயங்காது என கூகுள் தெரிவித்துள்ளது. இந்த தடையினால் யூடியுப், கூகுள் மேப்ஸ் போன்ற அதிகம் மக்கள் உபயோகிக்கும் செயலிகளை ஹவாய் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியாமல் போகும்.
அமெரிக்க பொருட்களை வாங்குவதில்லை என சீன மக்கள் கோஷமிட்டதன் விளைவு தான் ஆப்பிள் நிறுவனத்தின் சீனப் பங்கு அதலபாதாளத்தில் விழுந்ததாகும். சீனாவின் இந்த அமெரிக்க பொருள் வெறுப்பிற்கான பதிலடியாகவே ட்ரம்ப் அரசாங்கம் இந்த விஷயத்தைக் கையிலெடுத்துள்ளது. பெருநிறுவனங்களில் சீனாவிடம் இருந்து இறக்குமதியாகும் எந்தப் பொருட்களையும் உபயோகிக்க வேண்டாம் என ஏற்கனவே டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு கேட்டுக் கொண்டது. அரசின் இந்தக் கட்டுப்பாட்டை செயல்படுத்தும் விதமாக கூகுள் இப்படி ஒரு செக் மேட்டை ஹுவேய் நிறுவனத்திற்கு வைத்துள்ளது.
அமெரிக்காவின் இந்த முடிவினை விமர்சிக்கும் விதமாக சீனாவின் பிரபல சமூக வலைத்தளமான வெய்போவில் (சீனாவிற்கான ட்விட்டர்) மக்கள் ட்ரம்பை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தனது ஆண்ட்ராய்டு உரிமத்தை இழந்துவிட்ட ஹுவேய் நிறுவனம் எதிர்காலத்தில் தன்னுடைய மொபைல் போன்களில் கூகுளின் எந்த ஆப் செய்யும் உபயோகிக்க முடியாது. அதேவேளையில் பழைய ஹுவேய் போன்களில் எந்தவித பிரச்சினையும் இன்றி கூகுள் இயங்கும். ஆண்ட்ராய்டின் எந்த அப்டேட்டையும் இனி ஹுவேய் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ள இயலாது.
அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு ஹுவேய் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பின்னடைவைத் தரும் என வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். சீனா மீண்டும் அமெரிக்காவுடன் வர்த்தகத்தை மேற்கொள்ளவேண்டும் என ட்ரம்ப் டிவிட்டரில் தட்டிவிட்டு ஒருவாரம் கூட ஆகவில்லை அதற்குள்ளாக கூகுளிடம் இருந்து இப்படி ஒரு அறிவிப்பு வந்திருக்கிறது. பிள்ளையும் கிள்ளி, தொட்டிலையும் ஒரு சேர ஆட்ட நினைக்கிறார் ட்ரம்ப்.