“அண்டை நாடுகள் இடையேயான ஒற்றுமை மற்றும் வளர்ச்சி” இந்த வார்த்தைகள் இல்லாமல் எந்த நாட்டின் வெளியுறவுக் கொள்கையும் வகுக்கப்பட்டதில்லை. ஆனாலும் இன்றைய உலகில் நடக்கும் பெரும்பான்மையான தீவிரவாத/ஒடுக்குமுறை சார்ந்த வன்முறைகள் அண்டை நாடுகளுக்கு இடையே தான் நடைபெறுகின்றன. இந்தியா – பாகிஸ்தான், ஈரான் – ஈராக் இப்படி ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. இதற்கு மேலும் ஒரு உதாரணம் தான் சீனா – ஹாங்காங் பிரச்சினை. சீனாவின் ஒருங்கிணைந்த பகுதிதானே ஹாங்காங் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் எப்படி ஹாங்காங் சீனாவிடம் வந்தது என்பதை புரிந்து கொள்வதன் மூலமாகத்தான் ஹாங்காங்கில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களை புரிந்துகொள்ள முடியும்.

பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஹாங்காங் 1997 ஆம் ஆண்டு சீனாவுடன் இணைக்கப்பட்டது. இங்கிருக்கும் மக்களின் விருப்பத்தையும் மீறி இந்த இணைப்பை சீனா மேற்கொண்டது. அதே நேரத்தில் ஹாங்காங்கிற்குத் தனியாக சட்ட வரையறைகள் வகுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இதன்மூலம் சீன மக்களுக்கு கிடைக்காத ஜனநாயக உரிமை ஹாங்காங் மக்களுக்கு கிடைத்தது. ராஜாங்க விஷயங்களில் தனியாக முடிவெடுக்கும் அதிகாரங்களில் ஹாங்காங்கை சீனா முடக்கப் பார்க்கிறது. மேலும் சீனாவின் மற்ற பகுதிகளைப் போலவே ஹாங்காங்கை நடத்த முயற்சிக்கிறது. இதற்கு மக்கள் கொடுக்கும் எதிர்வினைகள் தான் போராட்டமாக வெடிக்கின்றன.
அம்பெர்லா போராட்டம்
கடந்த 2014 ஆம் ஆண்டு சீன அரசு அலுவலகங்களுக்கு முன்னால் ஹாங்காங் மக்கள் திரண்டு போராட்டத்தை நிகழ்த்தினர். பூரண ஜனநாயகத்தை வேண்டி மக்களால் இந்த போராட்டமானது தொடங்கப்பட்டது. சில நாட்களிலேயே பெருமளவு மக்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். ஆனால் இப்போராட்டம் விரைவிலேயே சீன அரசால் ஒடுக்கப்பட்டது. ஆனால் உரிமை வேண்டி நடத்தப்படும் இப்போராட்டங்கள் வெகுஜன மக்களின் தேவைகளை தீர்க்காமல் முடிவுற்றதில்லை. இதையே இம்மக்களும் வழிமொழிந்திருக்கிறார்கள்.

சீனாவிற்கு எதிரான ஹாங்காங் மக்களின் போராட்டம் மீண்டும் இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த திடீர் எழுச்சிக்கு காரணமாய் இருப்பது சீனாவால் கொண்டுவரப்பட்டிருக்கும் புதிய சட்டத்திருத்தம் தான்.
புது சட்டத்திருத்தம்
ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளுடன் பாதுகாப்பு ரீதியில் ஒத்துழைப்பு அளிக்கும் சட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும். அதில் முக்கியமானது குற்றவாளிகளை ஒப்படைக்கும் சட்டம். இந்த சட்டத்தின் மூலம் பல நாடுகளை நட்பு நாடுகளாக மாற்றிக்கொள்ள முடியும். தனது நாட்டில் தேடப்படும் குற்றவாளிகள் நட்பு நாட்டில் இருந்தால் இந்த குற்றவாளிகளை ஒப்படைக்கும் சட்டம் மூலம் சம்பத்தப்பட்ட நாட்டிடம் உதவியை கோரலாம்.
பிரிட்டன், அமெரிக்கா போன்று 20 க்கும் மேற்பட்ட நாடுகளோடு ஹாங்காங் இந்த சட்டத்தின் மூலம் இணைந்துள்ளது. ஆனால் சீனா மற்றும் தைவான் ஆகிய நாடுகளிடம் ஹாங்காங் இணைய மறுத்துவருகிறது. ஆனால் சீனா தற்போது புதிய சட்டதிருத்தம் ஒன்றின் மூலம் சீன/தைவான் குற்றவாளிகளை ஹாங்காங் ஒப்படைக்க வழி செய்திருக்கிறது. இதனால் சீன அரசிற்கு எதிரானவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்று ஹாங்காங் மக்கள் எதிர்ப்பு இந்த சட்ட திருத்தத்திற்கு தெரிவிக்கின்றனர். அதே சமயம் நீதித்துறை முழுவதும் முன்பு போலவே ஹாங்காங்கின் தனிப்பட்ட கட்டுப்பாட்டிலேயே இயங்கும் என சீனா அறிவித்துள்ளது.

20 ஆண்டுகளாக ஹாங்காங்குடன் குற்றவாளிகளை ஒப்படைக்கும் சட்டத்தின் மூலம் இணைய சீனா முயற்சிக்கிறது. ஆனால் ஹாங்காங் அதற்கு பல்வேறு வகையில் முட்டுக்கட்டை இட்டுவருகிறது. சீனாவால் ஹாங்காங்குடன் இணைய முடியாததற்கு காரணம் சீனாவின் பாதுகாப்பு குளறுபடிகள் தான் காரணம். மனிதர்கள் எப்போதுமே சுதந்திரமாக இருக்க விரும்புபவர்கள். அதற்கு மாறாக இயங்கும் எத்தனை பெரிய அரசை எதிர்த்தும் மக்கள் களம் காண்பார்கள் என்கிறது வரலாறு. அந்த வகையில் ஹாங்காங் சமகால மாபெரும் போராட்டம் ஒன்றுக்கு தயாராகி வருகிறது எனலாம்.