காலனியாதிக்கம் உலகம் முழுவதும் பல நாடுகளின் வரலாற்றை மாற்றி அமைத்திருக்கின்றன. செல்வச்செழிப்பில் மிதந்த நகரங்களை ஒரே “கல்ப்பில்” காலி செய்த பெருமை அப்போதைய ஐரோப்பிய நாடுகளியே சேரும். கிடைத்ததை எல்லாம் வாரிச்சுருட்டி தங்களது நாட்டிற்கு அனுப்பி தங்களது நாட்டுப்பற்றை அதிகாரிகள் நிரூபித்துக்கொண்டிருந்த காலம் அவை. கிழக்கு சீனப் பகுதிகளில் பிரான்ஸ், ஆப்பிரிக்க நாடுகளில் ஜெர்மனி என ஆளுக்கு ஒரு நாடு எனப்பிடித்துக்கொண்டாலும் இங்கிலாந்து தான் தனது அகோர பசிக்காக இன்னும் வரலாற்றில் நினைவுகூரப்படுகிறது.

தனது காலனியாதிக்கத்திற்கு கீழ் இருக்கும் நாடுகளில் உள்ள வளங்களை அசுர வேகத்தில் உறிஞ்சிக்கொண்டிருந்தன ஐரோப்பிய நாடுகள். எது கிடைத்தாலும் அபேஸ் தான். அப்படி நமீபியாவில் வழி காட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த நடுகல் ஒன்றை ஜெர்மனி ராணுவம் திருடிச்சென்றிருக்கிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அது இப்பொது நமீபியாவிற்கே வழங்கப்பட இருக்கிறது.
மைல்கல்
போர்ச்சுக்கீசிய அதிகாரியான டியாகோ காவோ (Diogo Cão) நமீபியாவில் இருந்தபோது அவருக்கு ஒரு சிக்கல் வந்திருக்கிறது. கடற்புரத்தில் சாலைகள் இல்லாததால் நமீபியாவில் சிரமப்பட்டுக்கொண்டிருந்த போர்ச்சுக்கீசிய மக்களின் துயர்துடைக்க காவோவின் சிந்தனையில் உதித்தது தான் இந்த ஐடியா. முக்கிய இடங்களில் கற்சிலைகளை அடையாளம் காண்பதற்காக ஊன்றினர். வரைபடத்திலும் அச்சிலைகளின் உருவங்களை வரைந்து விடுவர். அப்படித்தான் அந்த சிலுவையிட்ட சிலை நமீபிய கடற்கரையில் நிலைபெற்றது. காலங்கள் மாற அந்த நாட்டின் அதிகாரம் கைமாற ஆரம்பித்தது. இப்படி ஜெர்மனி தனது ஆதிக்கத்தை அங்கே நிறுவியது. ஜெர்மானிய அதிகாரிகளால் கொள்ளைகள் அமோகமாக நடந்துகொண்டிருந்த காலமான 1893 ஆம் ஆண்டில் கடற்கரை ஓரம் இருந்த இந்த கல்லை பெயர்த்து ஜெர்மனிக்கு எடுத்துச்சென்றிருக்கிறார்கள்.
அங்கே போன சிலை பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் அருங்காட்சியகத்தில் கொண்டுபோய் அதை ஒப்படைத்துவிட்டனர். அடுத்த 50 வருடத்தில் ஆராய்ச்சியாளர்கள் உண்மையை வரலாற்றிலிருந்து மீட்டெடுத்திருக்கின்றனர். ஆனால் பண்டைய வரைபடங்கள் பலவற்றில் இந்த சிலை குறிக்கப்பட்டிருக்கிறது. மேலும் நமீபியாவில் போர்ச்சுகீசியரின் ஆதிக்கத்திற்கான மிக முக்கிய சான்றாக அந்த சிலை பார்க்கப்படுகிறது.

ஊர் திரும்பும் சிலை
ஜெர்மனியின் தகவல் தொடர்பு மற்றும் கலாச்சார அமைச்சராக இருக்கும் மோனிகா க்ரட்டர்ஸ் (Monica Gruetters) இந்த சிலையோடு நமீபியாவிற்கு அரசு முறைப்பயனத்தை மேற்கொள்ள இருக்கிறார். அப்போது இந்த சிலை அந்த அரசிடம் ஒப்படைக்கப்படும் என ஜெர்மனியின் வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது. பார்ப்பதற்கு வேடிக்கையாக தோன்றினாலும் இதற்கு ஜெர்மனி சொல்லும் காரணம் உண்மையிலேயே அசரடிக்கிறது. இதுகுறித்து பேசிய க்ரட்டர்ஸ்,” ஜெர்மனியின் காலனி ஆதிக்க வரலாற்றில் பல நினைவுச்சின்னங்கள் பல்வேறு நாடுகளிலிருந்து எடுத்துவரப்பட்டிருக்கின்றன. அதனை மீண்டும் அந்ததந்த நாடுகளிடமே ஒப்படைப்பதன் மூலம் பழங்கால கசப்புகளை களைய ஜெர்மனி புதுமுயற்சிகளை எடுக்கும் என்றார். அதேபோல பிரான்ஸ் அதிபர் மக்ரோனியும் ஆப்பிரிக்க நாடான பெனின் குடியரசுக்கு சொந்தமான 23 கலைப்படைப்புகள் அவர்களிடமே திரும்பி ஒப்படைக்கப்படும் என அறிவித்திருக்கிறார்.