காலை அலுவலகத்திற்குப் போகிறீர்கள். எப்பொழுதும் போலவே சரியான நேரத்திற்கு நுழைகிறீர்கள். ஆனால் உங்கள் மேலதிகாரி நீங்கள் ஒரு மணி நேரம் லேட் என்றால் எப்படியிருக்கும்? உடனே கடிகாரத்தைப் பார்ப்பீர்கள். முட்கள் செக்கு மாட்டைப் போல் சரியாகத் தான் சுற்றி வந்து கொண்டிருக்கும். “நேற்றைய நேரத்தை விட இன்றைய நேரம் ஒருமணி நேரம் முன்பாகத் துவங்கி விட்டது” என்று அதிகாரி சொல்லும் பட்சத்தில் அது தான் உங்களின் கடைசி அலுவலக நாளாக இருக்கும். புரியவில்லையா ? இதையே தான் ஐரோப்பிய மக்களும் சொல்கிறார்கள். விஷயம் அவ்வளவு கடினமானது அல்ல. சுலபமாகச் சொல்லிவிடலாம்.

மாறும் நேரம்
ஐரோப்பாவைப் பொறுத்தவரை பெரும்பாலும் குளிர்காலம் தான். 5 சட்டை போட்டால் தான் அந்தக் குளிரிலிருந்து தப்பிக்க முடியும். வானம் சதாகாலமும் இருண்டே கிடக்கும். பகல் நேரம் குறைவு என்பதால் போதிய வெளிச்சம் இருக்காது. இதனால் பல தொழிற்சாலைகளின் உற்பத்தி பாதிக்கப்படும். ஐரோப்பாவின் தினசரி இயங்கும் எல்லா நிறுவனங்களும் இந்த பாதிப்பை குளிர்காலத்தில் சந்தித்தே ஆகவேண்டும். இதனால் தான் Day Light Saving Time என்பதைக் கடைபிடித்து வருகிறார்கள்.

குளிர்காலம் முடிந்து கோடைகாலம் துவங்கும் போது கிடைக்கும் சூரிய வெளிச்சத்தினை அதிகளவில் பயன்படுத்திடவே இத்திட்டம் வகுக்கப்பட்டது. அதாவது கோடைகாலத்தின் போது கடிகாரத்தை ஒருமணி நேரம் முன்பாக வைத்துக் கொள்வார்கள். குளிர்காலத்தின் 5 மணியாக இருக்கும் கடிகாரத்தை கோடைகாலம் வந்தவுடன் 4 என மாற்றிக் கொள்வார்கள். இதனால் உற்பத்தி, மனித வேலையின் திறன் ஆகியவை அதிகரித்தாலும் மக்கள் பல சமயங்களில் குழம்பிப் போய்விடுகின்றனர். குளிர்காலத்தில் நேரமானது குறைக்கப்படும்.
எப்போது துவங்கியது ?
இந்தக் கால மாற்றம் முதலாம் உலகப் போரின் போதே ஐரோப்பிய ஒன்றியங்களில் அமலுக்கு வந்து விட்டது. ஆனாலும் பல தேசங்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இத்திட்டத்தைக் கைவிட்ட பின்னரும், ஐரோப்பிய நாடுகள் இன்றும் இதனைக் கடைப்பிடித்து வருகின்றன.
தொடரும் பிரச்சனைகள்
இந்தக் கால மாற்றமானது ஐரோப்பிய நாடுகளில் ஒரே மாதிரியாகவும் இருப்பதில்லை. அது தான் பெரிய தலைவலியும் கூட. மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் கிரீன்விச் சராசரி நேரம் (Greenwich Mean Time) பின்பற்றப்படுகிறது. ஆனால், மத்திய ஐரோப்பிய தேசங்களில் கிரீன்வீச் நேரத்தை விட ஒருமணி நேரம் முன்பாகவும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இரண்டு மணி நேரம் முன்பாகவும் காலமானது பின்பற்றப்படுகிறது.

பூமியின் சுழற்சியினால் ஏற்படும் கால மாற்றத்தைப் பொறுத்தே இவையும் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும், பொதுமக்களுக்கு இது பெரும் இடையூறாக இருந்து வருகிறது. ரயில் நேரங்கள், உணவு விடுதிகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் மக்களுக்குப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
நிறுத்தப்படுமா கடிகாரம்?
அடுத்த ஆண்டு ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுகிறது. அதன் பின் நிலைமை இன்னும் மோசமாகும். ஏற்கனவே இது தொடர்பாக நடந்த கருத்துக்கணிப்பில் 84% ஐரோப்பிய மக்கள் இம்முறையை எதிர்த்திருக்கிறார்கள். பிரிட்டன் இந்த முறையை நீக்குவது குறித்து வாயைத் திறப்பதே இல்லை. ஒரு வேளை இத்திட்டத்தினை தொடரும் எண்ணம் அந்நாட்டிற்கு இருந்தால் பல குளறுபடிகள் உருவாகும். ஏனெனில், பிரிட்டனின் ஆளுமையின் கீழ் இருக்கும் வட அயர்லாந்து ஒரு மணி நேரம் முன்பாக இயங்கும். ஐரோப்பிய யூனியனில் இருக்கும் அயர்லாந்து கிரீன்வீச் நேரத்தில் இயங்கும். இது மக்களை இன்னும் குழப்பும் என்பதில் சந்தேகமில்லை.