பேருந்து நிலையம் மற்றும் மருத்துவமனை போன்ற இடங்களில் அனுமார் வால் போன்று நீண்டிருக்கும் மக்கள் வரிசையைப் பார்த்து பிரம்மிக்கும் நாம் வாழும் அதே உலகத்தில் தான் ஐரோப்பிய கண்டமும் இருக்கிறது. பரப்பளவு பெரிதெனினும் மக்கட்தொகை மிகவும் குறைவு. குழந்தை பிறப்பு விகிதம் உலகில் வேறெந்த நாடுகளை விடவும் மிகக்குறைவு. இந்த சிக்கலைத் தீர்க்க பல ஐரோப்பிய நாடுகள் முயற்சி எடுத்துவருகின்றன. குழந்தைகள் பெற்றுக்கொள்ள அரசாங்கம் பல சலுகைகளை வழங்குகிறது.

இலவச நிலம்
பழம்பெரும் நாடான இத்தாலி புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. மூன்று குழந்தைகள் பெற்றுக்கொண்டால் இலவச நிலம் அரசின் சார்பில் வழங்கப்படும் என புதிய சட்டம் அங்கே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதற்காக அரசின் கண்காணிப்பில் உள்ள 12 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களை இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கியுள்ளது இத்தாலி.
குறைந்துபோன குழைந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கச் செய்வதன் பொருட்டு இத்தாலி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அந்த நாட்டின் குடிமக்கள் பெரும்பாலும் “லிவிங் டு கெதர்” ஆக வாழ்வதும், குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போடுவதும் தான் இதற்கு முக்கியக்காரணம் ஆகும்.

ரூ.3.50 லட்சம் பரிசு
இது போர்ச்சுக்கல். அந்த நாட்டின் கிராமப்புறங்களில் வாழும் மக்கள் வேலைவாய்ப்பு காரணமாக வெளியூர் மற்றும் வெளிநாடு சென்றுவிடுவதால் பிறப்பு விகிதம் இங்கே 0.9 ஆக இருக்கிறது. இதனை சீர்செய்ய அந்த அரசு, குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் தம்பதியினருக்கு 3.50 லட்சம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது.
ஹங்கேரி
குழந்தை பிறப்பு விகிதத்தைப் பொறுத்தவரை, ஐரோப்பிய நாடுகளிலேயே மிகவும் குறைவான எண்ணிகையை ஹங்கேரி தான் கொண்டுள்ளது. இதனால் கடும் குழப்பத்தில் இருந்த அரசு புதிய சலுகைகளை வாரி வழங்க காத்திருக்கிறது. என்னென்ன அவை?
- நான்கு குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தாயாருக்கு ஆயுள் முழுவதும் வருமானவரி கிடையாது.
- திருமணம் செய்துகொண்டால் மிகக்குறைந்த வட்டியில் 22 லட்சம் ரூபாய் கடனாக வழங்கப்படும். மூன்றாவது குழந்தை பிறந்தவுடன் மீதமுள்ள மொத்தக் கடனும் தள்ளுபடி செய்யப்படும்.
- இரண்டு குழந்தைகளைக் கொண்டோருக்கு வீடுவாங்க கடன் அளிக்கப்படும்.
- முதல் குழந்தைக்கு 2.5 லட்சமும், இரண்டாவது குழந்தைக்கு 10 லட்சமும் அரசின் சார்பில் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். (அதற்கு மேல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 2.5 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.)
- 6.29 லட்சம் வரை கார் வாங்க மானியம் வழங்கப்படும்.
இப்படியான திட்டங்கள் மூலம் ஹங்கேரியின் எதிர்காலம் செழிப்படையும் என அந்நாட்டு அரசு நம்புகிறது.

அதேபோல்
- போலந்தில் திருமணமான பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படுகிறது.
- ஸ்பெயினில் sex tsar என்னும் அமைப்பை அரசாங்கம் உருவாகியிருக்கிறது. குழந்தை பிறப்பு குறித்த சந்தேகங்களைத் தீர்ப்பதற்கான இலவச மையமாக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
- தாய்மார்களுக்கு உணவு, குழந்தைகளுக்கான உடை போன்ற பரிசுப்பெட்டி போலந்து அரசின் சார்பில் 1938 ஆம் ஆண்டிலிருந்து அளிக்கப்பட்டு வருகின்றன.
இப்படி ஐரோப்பாவின் எல்லா நாடுகளும் ஏதோ ஒருவகையில் தம்பதியினருக்கு உதவி வருகின்றன. அவர்களது எண்ணமெல்லாம் தங்கள் நாட்டு எதிர்காலத்தை நம்பிக்கை கொண்டதாக மாற்ற வேண்டும் என்பது மட்டுமே.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று புரிகிறது. ஐரோப்பாவிற்கு குடியேறும் எண்ணமிருந்தால் பிரெக்சிட் – ன் பிறகு செல்லுங்கள். ஏனெனில் அரசியல் ஆகாயம் தற்போது அங்கே சரியில்லை.