கடந்த ஞாயிற்றுக்கிழமை எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு கிளம்பிய போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் (ET302) புறப்பட்ட 6 நிமிடத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் 8 இந்தியர்கள் உட்பட மொத்தம் 157 பேர் உயிரிழந்தார்கள். இதனிடையே செவ்வாய்கிழமை விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு ஆராய்ச்சிக்கு அனுப்பபட்டது.

கடந்த ஐந்து மாதத்தில் 737 மேக்ஸ்-8 ரக விமானம் விபத்திற்கு உள்ளாவது இது இரண்டாம் முறையாகும். இதனால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் இந்த ரக விமானத்தினை இயக்கத் தடை விதித்திருக்கிறது.
முதல் சிக்கல்
எத்தியோப்பிய விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே விமான இயக்கத்தில் சிக்கல் இருப்பதாய் கண்காணிப்பு அறைக்கு தகவல் அளித்துள்ளார் விமானி. இதனால் விமான நிலையத்திற்கு உடனடியாகத் திரும்பும்படி அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். விமானம் திரும்பும்போது தான் விபத்து ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னதாக 189 பேரை பலிகொண்ட இந்தோனேஷியா விமானமும் இந்த 737 மேக்ஸ்-8 ரகத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு விபத்திலும் ஒருவர் கூட உயிர்பிழைக்கவில்லை.
போயிங் விமானம்
அமெரிக்காவின் சிகாகோ நகரைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் போயிங் நிறுவனத்தின் படைப்புத்தான் 737 மேக்ஸ்-8. இன்று உலகம் முழுவதும் 371 போயிங் விமானங்கள் இயக்கக்கூடிய நிலையில் இருக்கின்றன. ஆரம்பம் முதலே இந்த ரக விமானத்தில் பாதுகாப்பு குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும் அதற்கு அந்நிறுவனம் மறுப்புத் தெரிவித்து வந்தது.
பறக்கத் தடை
இந்தோனேஷியாவைத் தொடர்ந்து எத்தியோப்பியாவிலும் வெடித்துச் சிதறிய இந்த 737 மேக்ஸ்-8 ரக விமானத்தை இந்தியா உட்பட பல நாடுகள் பறப்பதற்குத் தடை விதித்திருகின்றன. முதல் கட்ட ஆய்வில் விபத்துக்குள்ளான இரண்டு விமானங்களுமே ஒரே மாதிரியான சிக்கலைச் சந்தித்ததாகவும், அதிலிருந்து விடுபடுவதற்குள் வெடிப்பு நிகழ்ந்திருப்பதாகவும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக தனது 737 மேக்ஸ்-8 ரக விமான இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்தகட்ட ஆய்வில் விபத்திற்கான முழு காரணமும் கண்டறியப்படலாம்.