கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியா தான் இந்த மகத்தான சாதனையைப் படைத்துள்ளது. அந்நாட்டு அதிபர் அபி அஹமத் (Abiy Ahmed) முன்னெடுத்த கிரீன் லெகஸி (Green Legacy) என்னும் இயக்கம் மூலமாக பொது மக்களிடையே மரம் வளர்ப்பதற்கான முக்கியத்துவம் குறித்து பரப்பப்பட்டது. கடந்த திங்களன்று துவங்கிய இந்த மாபெரும் மரக்கன்றுகள் நடும் திருவிழாவில் முதல் ஆறு மணி நேரத்திலேயே 15 கோடி மரங்கள் நடப்பட்டன. ட்விட்டர் மூலம் நாட்டு மக்களுக்கு இதனைத் தெரிவித்த அஹமத், இலக்கு இன்னும் எட்டப்படவில்லை என மக்களை மேலும் உற்சாகப்படுத்த எண்ணிக்கை அடுத்த ஆறு மணி நேரத்திற்குள் இரட்டிப்பிற்கும் அதிகமானது. 12 மணி நேரத்தில் நாடு முழுவதும் 353,633,660 மரக்கன்றுகள் நடப்பட்டிருப்பதாக அந்நாட்டு தொழில்நுட்பத்துறை அமைச்சர் கேடாகன் மேகூரியா (Getahun Mekuria) டிவிட்டரில் அறிவித்தார்.
எண்ணிக்கை அடிப்படையில் இது உலக சாதனையாகும். இதற்கு முன்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் 15 லட்சம் மக்கள் இணைந்து 6.6 கோடி மரக்கன்றுகளை நட்டதே சாதனையாக இருந்தது. எத்தியோப்பியாவின் இந்த மரம் நடும் இயக்கம் இத்தோடு நின்றுவிடவில்லை. பருவ காலமான மே முதல் அக்டோபர் வரை சுமார் 400 கோடி மரக்கன்றுகளை நடுவதை அவர்கள் இலக்காக கொண்டுள்ளதாக அபி அஹமத் தெரிவித்துள்ளார்.
எத்தியோப்பியாவின் தேவை
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் செயல்பட்டுவரும் Farm Africa என்னும் அமைப்பு அங்கிருக்கும் விவசாயிகளின் வறுமையைப் போக்க போராடி வருகிறது. அந்த அமைப்பு மேற்கொண்ட ஆய்வின்படி 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் மொத்த நிலப்பரப்பில் 30 சதவிகிதம் காடுகளைக் கொண்டிருந்த எத்தியோப்பியாவில் தற்போது வெறும் 5 சதவிகிதம் தான் காடுகள் எஞ்சியுள்ளது. இத்தனைக்கும் இங்கே 80 சதவிகித மக்களுக்கு விவசாயம் தான் பிரதான வேலை. இதற்கு மிகமுக்கிய காரணமாக கூறப்படுவது எத்தியோப்பியாவின் நில அமைப்பு.

நாலாபுறமும் நில எல்லையைக் கொண்டுள்ள எத்தியோப்பியாவில் பருவமழை என்பது மிகக்குறைவு. கடற்பரப்பை அருகில் கொண்டிருந்தாலாவது புயல், காற்றழுத்த வேறுபாடு ஆகியவை காரணமாக மழையை எதிர்பார்க்கலாம். அங்கே அதற்கும் வழியில்லை. ஏடன் வளைகுடா பகுதி வரை இதே கதைதான். போதுமான மழை இல்லாததால் மண் அரிப்பு, மண் வளம் குன்றிப்போதல், காடுகள் அழிவு மற்றும் வறட்சி ஆகியவை வழக்கமாகிவிட்டன.
புத்துயிர்பெரும் ஆப்பிரிக்கா
ஆப்பிரிக்காவின் மொத்த நிலப்பரப்பில் 100 மில்லியன் ஹெக்டேர் அளவிற்கு காடுகளை வளர்க்க 20 நாடுகள் கைகோர்த்துள்ளன. இதில் எத்தியோப்பியாவும் அடக்கம். ஏனெனில் பெரும்பாலான மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் மழை என்ற ஒன்று வேண்டுமானால் நிச்சயம் காடுகள் இருந்தால் தான் எனப் புரிந்துகொண்டுவிட்டன. புவியியல் ரீதியாக கடலிலிருந்து வெகுதூரத்தில் இருக்கும் இந்நாடுகளுக்கு காடுகளை விட்டால் வேறு வழியில்லை. அதற்காகத்தான் இப்படியான முயற்சிகள் அங்கே எடுக்கப்பட்டு வருகின்றன.

நம் பூமியில் அழிக்கப்பட்ட காடுகளை மீண்டும் உருவாக்கினாலே மூன்றில் இரண்டு பங்கு கரியமிலவாயுக்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும். ஸ்விஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அழிந்துவரும் காடுகளைக் காப்பாற்றினாலே 205 பில்லியன் டன் கரியமிலவாயுவை நம்மால் ஆக்சிஜனாக மாற்ற முடியும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.