ஆட்சி மாற்றத்திற்கு இந்தியா தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில் சில நாடுகளில் வலிமை வாய்ந்த தலைவர்களாக இருந்த மாமன்னர்களின் நாற்காலிகளை மக்கள் பிடுங்கியிருகிரார்கள். காலம் காலமாக அதிகார மையத்தில் இருந்தவர்கள் தற்போது ஆட்டம் கண்டிருக்கிறார்கள். வருடக்கணக்கில் அதிகாரத்தை தங்களது உள்ளங்கையில் வைத்திருந்தவர்கள் இப்போது மக்களின் அதிகாரத்தால் அகற்றப்பட்டிருக்கிரார்கள்.
துருக்கியில் நடந்துமுடிந்த தேர்தலில் 15 வருடங்களாக ஆட்சியில் இருந்த எர்டோகன் பின்னடைவை சந்தித்திருக்கிறார். இஸ்ரேலின் அதிபராக ஐந்து முறை இருந்த நெதன்யாகு தற்போது வலதுசாரிகளுடன் கூட்டணி வைத்தால்தான் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். தொடர்ந்து 30 ஆண்டுகளாக சூடன் நாட்டு அதிபராக இருந்த ஒமர் அல் பஷீர் இப்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் என்ன?
ஒமர் அல் பஷீர்
1989 ஆம் ஆண்டு ராணுவ அதிகாரியாக இருந்த பஷீர் சிறிய ராணுவப்புரட்சி ஒன்றின் மூலம் சூடானின் ஆட்சியைக் கைப்பற்றினார். அப்போது அதிபர் பதவியில் அமர்ந்தவர். 30 வருடங்கள். சூடானின் வரலாற்றில் அதிகமான உள்நாட்டுப்போர்கள், கலவரங்கள், வான் பிளக்கும் ஆகாய தாக்குதல்கள் அதிகம் நடந்தது பஷீரின் இந்த ஆட்சியில் தான்.
Credit: Daily Guide
கலவரங்களை சுமூகமாக முடிக்கத் தெரியாவிட்டாலும், எரியும் பிரச்சினையில் எண்ணெய் ஊற்றுவதில் அன்னார் அற்புத சக்தி படைத்தவர். 2005 ஆம் ஆண்டு நாட்டின் தெற்குப் பகுதியில் துவங்கிய போராட்டத்தினை இவர் கையாண்ட விதம் உலக அளவில் எதிர்ப்பலைகளை உண்டாக்கியது. ஒரு வழியாக 2011 ஆம் வருடம் தெற்கு சூடான் தனியாகப் பிரிந்தது. ஆனாலும் வேலைவாய்ப்பு, வறுமை, அடிப்படை வசதிகள் குறைபாடு ஆகியவை காரணமாக மக்கள் புரட்சி வெடித்தது. இதனைக் கடுமையாக எதிர்த்துவந்த பஷீரின் ராணுவம் திடீர் பல்டி அடித்து அதிபரை கைது செய்துவிட்டது. இப்போது பஷீர் சிறையில் இருக்கிறார். நாடு முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே தேர்தல் நடத்தப்படும் என ராணுவம் தெரிவித்திருக்கிறது.
ராணுவத்தின் கைகளில் ஒரு நாடு சிக்கினால் என்னவெல்லாம் ஆகும் என்பதற்கு மத்திய கிழக்கில் பல பயங்கரமான உதாரணங்கள் இருக்கிறது. என்னவாகப்போகிறது சூடான்? மக்களாட்சி வருமா? இல்லை இது சர்வாதிகாரத்தின் முதல்படியா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
துருக்கியில் சறுக்கிய எர்டோகன்
துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல், அங்காரா ஆகிய முக்கிய தொழில்துறை நகரங்களுக்கான உள்ளாட்சித்தேர்தலில் அதிபர் எர்டோகனின் கட்சி பலத்த பின்னடைவை சந்தித்துள்ளது. யாருமே எதிர்பார்க்காத வகையில் எதிர்கட்சிகள் இதில் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளன. துருக்கியில் எதிர்க்கட்சிகள் வெற்றிபெறுவது தமிழகத்தில் பகுஜன் சமாஜ்வாதி ஆட்சிக்கு வருகிற கதைதான்.
Credit: Business Recorder
துருக்கியில் கடந்த 17 வருடங்களாக ஆட்சி புரியும் எர்டோகனின் இந்த நிலைக்கு இரண்டு காரணங்களைச் செல்லலாம். முதலாவது நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை. அங்குள்ள இளைஞர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவதாக அந்த அரசே ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் சிரிய உள்நாட்டுப்போர் விவகாரத்தில் துருக்கியின் செயல்பாடு மக்களிடையே விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
எர்டோகனின் இந்த வீழ்ச்சிக்கு மற்றும் ஒரு காரணம், துருக்கிய தொழில்துறையில் விழுந்த அடி. பல முன்னணி நிறுவனங்கள் துருக்கியை விட்டு வெளியேறுவதில் மும்மரமாக இருக்கின்றன. இது சர்வதேச அளவில் துருக்கியின் பணமான லிராவின் மதிப்பை வீழ்த்தியுள்ளது. நடந்து முடிந்திருப்பது உள்ளாட்சித் தேர்தல் என்ற போதிலும் அடுத்து தேசியத் தேர்தல் வர இருப்பது உலக நாடுகளிடையே எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. இந்த சிக்கல்களைத் தீர்த்து மறுபடியும் எர்டோகனால் ஆட்சியைக் கைப்பற்ற முடியுமா? என்பது சந்தேகம் தான்.
பெஞ்சமின் நெதன்யாகு
உலக அளவில் சமகால அரசியலில் மிகுந்த சக்திவாய்ந்த தலைவராக அறியப்படுபவர் இஸ்ரேலின் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு. 1948 ஆம் ஆண்டு நாடாக உருமாற்றம் பெற்ற இஸ்ரேல் இன்று உலகின் வல்லாதிக்க நாடுகளோடு அனைத்துத் துறையிலும் நெற்றிக்கு நேர் நின்று மோதுகிறது என்றால் அதற்கு நெதன்யாகுவும் ஒரு காரணம்.
Credit: skynews
ஏற்கனவே நான்கு முறை அதிபராக இருந்த பெஞ்சமின் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற தேர்தலிலும் போட்டியிட்டார். இவரது கட்சியான லிகுட்டிற்கும், முன்னாள் ராணுவத் தலைவரான பென்னி கண்ட்ஸின் புளூ மற்றும் வெள்ளைக் கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவியது. தேர்தல் முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. அதில் இரண்டு கட்சிகளுக்குமே பெரும்பான்மை கிடைக்கவில்லை.
கடைசியில் வலதுசாரி மற்றும் மத கட்சிகள் சிலவற்றோடு கூட்டணிக்கு ஒப்புக்கொண்டது லிகுட். இதையடுத்து இஸ்ரேலின் அடுத்த அதிபராகிறார் பெஞ்சமின் நெதன்யாகு. தேசிய அளவில் பெஞ்சமினுக்கு ஆதரவு அதிகம் இருப்பதாகவே அனைவரும் கருதிவந்தனர். ஆனால் மொத்தமுள்ள 120 இடங்களில் லிகுட் மற்றும் வலதுசாரி கட்சிக் கூட்டணி பெற்றது 65 தான். பெஞ்சமினின் தொடர்ச்சியான ஆட்சி மக்களிடையே சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆகவே அதிகாரம் ஒரே இடத்தில் குவிவது நிச்சயம் மக்களுக்கு இருப்பியல் சிக்கல்களைத் தரும். அதிகாரப் பரவல் தான் அரசுக்கும், பொதுமக்களுக்கும் நிரந்தரமான தீர்வினைக் கொடுக்கும் என மறுபடியும் உலகம் உணர்த்தியிருக்கிறது.