அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் காரசாரமான பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார். அமெரிக்க தேர்தலுக்கு சீனா காத்திருப்பதாகவும், அதில் ஜனநாயக கட்சி ஆட்சியை பிடிக்கும் எனவும் சீனா கனவு காண்கிறது. ஆனால் அடுத்த முறையும் தேர்தலில் வெற்றி பெறப்போவது நான்தான். அதனால் இப்போதே வர்த்தக ஒப்பந்தங்களுக்கு சீனா தயார் ஆகவில்லை எனில் எதிர்காலம் அவர்களுக்கு மோசமானதாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார். என்னதான் பிரச்சனை? ட்ரம்பின் இந்த காட்டத்திற்கு என்ன காரணம்? எனத் தெரிந்து கொள்ள கொஞ்சம் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வந்ததிலிருந்தே அமெரிக்கா – சீனா இடையே சலசலப்புகள் வந்து விட்டன. வளர்ந்த நாடுகளான இந்த இரண்டும் ஆண்டுக்கு சுமார் 500 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வர்த்தகத்தை பரிமாறிக்கொள்கின்றன. இறக்குமதியாகும் பொருட்களுக்கு இரு நாடுகளுமே கண்ணைக் கட்டும் அளவிற்கு வரியை விதித்து வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக் கொள்கின்றன. சீனாவிலிருந்து 300 பில்லியன் டாலர் அளவிற்கு பொருட்களை இறக்குமதி செய்யும் அமெரிக்கா அப்பொருட்களுக்கு மிக அதிக வரியை விதித்துள்ளது. அதேபோல சுமார் 200 பில்லியன் டாலர் அளவிற்கு அமெரிக்காவிலிருந்து சரக்குகள் சீனாவிற்கு பயணிக்கின்றன. எங்க கிட்டயும் சீப்பு இருக்கு. நாங்களும் சீவுவோம் என அமெரிக்க பொருட்களுக்கு சீனா அதிக வரியை விதிக்கிறது.
இதனால் உலக அளவிலான பொருளாதாரப் போர் வந்துவிடும் என பெருந்தலைகள் அச்சம் கொண்டனர். இதனைத் தீர்க்க பேச்சு வார்த்தை ஒன்று கடந்த வாரம் நடந்தது. வெள்ளி என்று முடிந்த இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. அதற்கான ட்ரம்பின் பதிலடிதான் இந்த கட்டுரையின் முதல் பாராவில் நீங்கள் படித்தது. அதேசமயம் அமெரிக்காவுடன் நாங்கள் இணக்கம் காட்ட தயாராக இருக்கிறோம் ஆனால் முக்கிய விஷயங்களில் எவ்வித மாற்றமும் செய்வதற்கு சீனா தயாராக இல்லை என சீன அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த வர்த்தகங்கள் பெரும்பாலும் கடல்சார் பரிமாற்றமே. இந்த இரு நாடுகளுக்கு இடையே வருடத்திற்கு 351 லட்சம் கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறுகிறது. அமெரிக்க – சீனா வர்த்தக உறவுகள் பாதிக்கப்படும் பட்சத்தில் எத்தனை கப்பல்கள் கடலில் கவிழும் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்.

இதனைத் தவிர்க்க டொனால்ட் டிரம்ப் சொல்லும் ஆலோசனை இன்னும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஏற்றுமதியாகும் பொருட்களை சீனா அமெரிக்காவிலேயே தயாரிக்க வேண்டும் என்கிறார். இதனை அவரது கட்சியிலேயே பலரும் எதிர்க்கின்றனர். ஏனெனில் சீனாவிடம் இருந்து அமெரிக்கா வாங்கும் பெரும்பான்மை பொருட்கள் விவசாயம் சார்ந்தவை. ஆகவே இந்த சிக்கலில் சீனாவின் கை உயர்ந்தால் அமெரிக்காவின் உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் என்கின்றனர் குடியரசுக் கட்சியின் தாராளமய பொருளாதாரவாதிகள். வரும் வாரங்களில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என இரு நாடுகளும் சார்பிலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்போது இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அல்லது கமா போட்டு காய் நகர்த்த காத்திருப்பது டொனால்ட் ட்ரம்பா அல்லது ஜின்பிங்கா என்பது தெரியவரும்.