ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. அவற்றுள் முதன்மையானது ஈரானிய கச்சா எண்ணெய்க்கு விதிக்கப்பட்ட தடை. வடகொரியாவைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா காட்டும் கருணைக்கு அப்படி என்ன காரணம்? அந்த அணுசக்தி ஒப்பந்தம் என்றால் என்ன?

Middle East Monitor
பொருளாதாரத் தடை
1979 ஆம் ஆண்டு நடந்த ஈரானியப் புரட்சிக்கு பிறகு ஈரான் தனது அணுசக்தி ஆற்றலை பெருக்கிக்கொள்ள முடிவு செய்தது. இங்கே ஈரானியப் புரட்சி என்பது அமெரிக்காவால் ஆமோதிக்கப்பட்ட முகமது ரிசா பஹ்லவி என்பவரின் சர்வாதிகார ஆட்சியை அகற்றுவது ஆகும். 1979 க்கு முன்புவரை ஈரானின் அணுசக்தி வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது அமெரிக்காதான். ஆனாலும் 1979 ஆண்டு ஈரானில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்ட ஈரான் இளைஞர்கள், 444 நாட்கள் அங்கிருந்த அதிகாரிகளையும் ராணுவ வீரர்களையும் சிறைவைத்தனர். அமெரிக்க ராணுவத்திற்கு மிகப்பெரும் அவமானத்தை தேடிக்கொடுத்த அச்சம்பவத்திற்கு பிறகு ஈரானில் ஏற்ப்பட்ட ஆட்சி மாற்றம் அமெரிக்கா – ஈரான் விரிசலுக்கு வித்திட்டது. அப்போது அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்த ரொனால்ட் ரீகன் ஈரானுக்கு அணுசக்தி தொண்டு புரிவதை முற்றிலும் நிறுத்திக்கொண்டார். அமெரிக்கா பிற நாடுகளையும் அவ்வாறே நடக்கப் பணித்தது. பின்னர் 1984 ஆம் ஆண்டின் ஒருநாளில் சீனாவின் உதவியுடன் இஷாபன் எனுமிடத்தில் அணுக்கரு ஆராய்ச்சி நிலையத்தை ஈரான் நிறுவியது. ஈரானின் அணுசக்தித் துறையில் தொடர்ந்து ஏற்பட்ட வளர்ச்சியை கண்டு, எங்கே ஈரான் அணு ஆயுதம் தயாரித்து விடுமோ என்று அஞ்சிய அமெரிக்கா 2000 ஆவது ஆண்டில், ஈரானின் அணுசக்தி வளர்ச்சிக்கு உதவி செய்யக்கூடாது என்று பிற நாடுகள் மீது தடை விதித்தது. அப்போதும் அசராத ஈரான் மேலும் சில இடங்களில் அணுஉலையை உருவாக்க ஆரம்பித்தது. தாங்கள் ஆயுதம் தயாரிக்கவில்லை என்றும், ஆராய்ச்சிக்காகவும், ஆற்றலுக்காகவும் மட்டுமே அணுக்கரு உலையை அமைப்பதாக தெரிவித்தது. ஈரானின் அணு உலையைச் சுற்றியுள்ள இடங்களில் செறிவூட்டப்பட்ட யுரேனியம்235 (27%) அதிக அளவில் இருப்பதாக சர்வதேச அணுசக்தி கழகம் (IAEA) ஆராய்ச்சி செய்து வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து, 2007-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை ஈரான் மீது முழுப் பொருளாதார தடையை விதித்தது. சுதாரித்துக்கொண்ட ஈரான் Qom எனும் மாகாணத்தில் தான் ரகசியமாக நிறுவியுள்ள அணுஉலையை பார்வையிட IAEA விற்கும் அழைப்பு விடுத்தது. பயந்து போன அமெரிக்கா உட்பட்ட வல்லரசு நாடுகள் ஈரானை பேச்சுவார்த்தைக்கு அழைத்தன.

நிபந்தனைகள்
சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனிய ஆகிய நாடுகளுடன் 2015 ஆம் ஆண்டு, அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா வழிநடத்த ஈரானுடன் ஒப்பந்தம் ஒன்று இறுதியானது. அதுவே ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் அல்லது Joint comprehensive plan of action (JCPOA) எனப்படுகிறது.
- அதன்படி ஈரான் தன்னிடம் உள்ள அனைத்து அணுஆயுத மூலங்களையும் அழித்துவிட வேண்டும், யுரேனியம் ஹெக்ஸாஃபுளூரைடாக மாற்றிவிட வேண்டும் அல்லது பிற நாடுகளுக்கு விற்றுவிட வேண்டும் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற ஆராய்ச்சியில் ஈடுபடவே கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. பதிலுக்கு ஈரானில் மேற்கூறிய நாடுகள் முதலீடு செய்யத் துவங்கும்.
- மேற்கூறிய நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச அணுசக்தி கழகம் ஆகிய இரண்டும் ஈரானுக்கு உள்நுழைந்து எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சோதனை செய்து கொள்ளலாம் ராணுவத்தளங்கள் தவிர்த்து.
ஈரான் வைத்திருந்த/இழந்த அணுசக்தி
அணுவாயுதம் தயாரிப்பதற்கு 97% செறிவூட்டப்பட்ட ( Enriched -U235) யுரேனியம்-235 தேவைப்படுகிறது. பொதுவாக யுரேனியம் தனிமத்தில் இரண்டு விதமான ஐசோடோப்புகள் காணப்படும். அவையாவன யுரேனியம் 235 மற்றும் யுரேனியம் 238. இதில் 235ஐ மட்டும் தனியாக பிரித்து எடுப்பதே செறிவூட்டப்படுதல் எனப்படும். 20% செறிவூட்டப்பட்ட யுரேனியம்-235 ஆனது மருத்துவ துறையில் கேன்சர் நோய்க்கு எதிராக பயன்படும். ஒப்பந்தத்திற்கு முன்பு வரை சுமார் 150 டன் வரையிலான யுரேனியம் மூலப் பொருட்கள் ஈரானிடம் இருந்தன. மற்றும் அவற்றை செறிவூட்டப் பயன்படும் centrifuge எனும் கருவிகள் சுமார் 20,000 எண்ணிக்கையில் இருந்தன.
- ஒப்பந்தத்தின் அடிப்படையில் பழைய ரக அல்லது செயல்திறன் குறைந்த centrifuge கள் சுமார் 6000 த்திற்கும் குறைவாக மட்டுமே வைத்திருக்கவேண்டும். எனவே Natanz and Fordow என்னுமிடங்களில் உள்ள 5060 centrifuges களைத் தவிர பிறவற்றை ஏற்றுமதி செய்ய ஈரான் ஒப்புக் கொண்டது.
- 3.67% கீழ் மட்டுமே யுரேனியத்தை ஈரான் செறிவுட்டம் செய்ய வேண்டும். அந்த அளவு u235 ஆனது அணுமின் நிலையத்திற்கு எரிபொருளாக போதுமானது. அதுவும் 300கிலோவிற்கு மேல் ஒரு கிராம் கூட சேமிக்கக்கூடாது.
- அணுக்கழிவுகளான புளூட்டோனியத்தை ஈரான் நிச்சயம் நாட்டைவிட்டு வெளியேற்றிவிட வேண்டும். அணுமின் உலையில் நடைபெறும் அணுக்கரு பிளவின் போது கிடைப்பவை தான் இந்த புளூட்டோனியமும் கடின நீரும். இரண்டுமே அதிக ஆபத்துக் கொண்டமையாதலால் அவையும் ஆயுதமாக்ககூடியவையே.
- அராக்-கில் உள்ள heavy water reactor ஐ ஈரான் இயக்கக்கூடாது. அவ்வாறு இயக்கும்பட்சத்தில் அவை ஆயுதம் தயாரிக்கும் வகையில் இயக்கக்கூடாது.
- ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள ரியாக்டர்களை ஆராய்ச்சி நிலையமாகவோ அல்லது ரியாக்டரில் கடினமான கான்கிரீட் கலவைகளை செலுத்தியோ அவற்றை ஆயுதமாக பயன்படுத்த முடியாமல் போகச் செய்யவேண்டும்.
இவ்வளவு கட்டுப்பாடுகளும் ஒத்துழைப்பு தந்த பின்னர், ஈரானின் மீது விதிக்கப்பட்ட தடைகள் படிப்படியாக அகற்றப்பட்டன. பின்னர் அவ்வப்போது IAEA அதிகாரிகள் ஈரானுக்குச் சென்று, சோதனைகள் மேற்கெண்டு ஈரானுக்கு நன்னடத்தை பத்திரம் அளித்தனர். அதிபர் பாரக் ஒபாமா இந்த பேச்சுவார்த்தையை தன் வாழ்நாள் வெற்றியாக அறிவித்தார். ஈரான், ரஷ்யாவிடம் தன் அணுசக்தி உபகரணங்களையும், யுரேனியம் மூலப்பொருட்களையும் விற்கத் துவங்கியது. தடைகள் நீங்கிய பின்னர் 28 நாடுகளில் உறைந்திருந்த ஈரானுக்கு சொந்தமான 100பில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்க டாலர்களை ஈரான் வங்கிகள் கையாளத்துவங்கின. மேலும் ஐரோப்பிய நிறுவனங்கள் பல ஈரான் சந்தையில் முதலீடுகளும் செய்யத் துவங்கின.

வந்ததே ஆபத்து!
ஈரானுடன் P5+1 நாடுகள் என்றழைக்கப்பட்ட அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா, யு.கே மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகள் செய்துகொண்ட இந்த ஒப்பந்தத்தை சவூதி அரேபியாவும் இஸ்ரேலும் ஏற்றுக்கொள்ள மறுத்தன. ஏனெனில் ஈரான் ஷியாக்களின் நாடு. இஸ்ரேல் ஈரானின் பரமெதிரி. ஈரானை ஒருபோதும் நம்பக்கூடாது என்றே அவை தற்போது வரை பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால் தொடர் சோதனைகளில், ஈரான் ஒப்பந்தத்தை மதித்து நடப்பது நிரூபணமானது. அப்போதுதான் ட்ரம்ப் அதிபர் பதவியில் ஏறி அமர்ந்தார். பிரச்சாரத்தின் போதே ஈரானுடனான ஒப்பந்தத்தை விமர்சித்தும் ஒபாமாவை இகழ்ந்தும் அது பேசி வந்தார் ட்ரம்ப். அறிவியலுக்கும் ஆண்டவனுக்கும் அப்பாற்பட்டு அவர் அதிபரானதால் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.. ஆனால் கடைசி வரை ஒப்பந்தத்தை நிராகரிக்க அவருக்கு ஆதாரங்கள் கிடைக்கவே இல்லை. இதனை எதிர்த்த இரண்டு அமெரிக்க அதிகாரிகளை நீக்கிவிட்டு ஆமாஞ்சாமி போடும் pompeo வையும் Bolton ஐயும் அவர்களிடத்தில் அமரவைத்து அழகுபார்த்தார் ட்ரம்ப்.
கழுவிக் கடாசிய ரோஹௌனி
உண்மையில் மத்திய கிழக்கு நாடுகளில் அணுஉலையிலிருந்து மின்சாரம் தயாரித்த முதல் நாடு ஈரான் தான். இறுதிவரை ஒப்பந்தத்தை மதித்து செயல்பட்ட ஈரான் தனது அனைத்து அணுஉலைகளையும் IAEA மேற்ப்பார்வையிட அனுமதியளித்தது. ஐக்கிய நாடுகள் சபையில் 2017 ஆம் ஆண்டு பேசிய ஈரான் அதிபர் ரோஹௌனி “ இந்த மாபெரும் அமைதி ஒப்பந்தத்தை உலக அரசியலுக்கு புதிதாய் வந்த வரட்டு அரசியல்வாதி ஒருவர் அழிக்க நினைப்பது மிகப்பெரும் அவமானம்” என்றே கூறிவிட்டார்.
தடை! தடை! தடை!
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க சில மாதங்களே எஞ்சியிருந்த போது, (செறிவூட்டப் தேவைப்படும் காலம்) பல ஆண்டுகள் தொடர்ந்த பேச்சுவார்த்தையில் அமைதி ஏற்பட்ட நிலையில் இறுதியில் 2018 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா புதிய பேச்சுவார்த்தைக்கு ஈரானை அழைத்தது. ஏனெனில், ஈரான் ஏவுகணை சோதனைகள் செய்து வந்தது அணு ஆயுதம் அனுப்பவா? என்று ட்ரம்புக்கு சந்தேகம் எழுந்ததிருந்தது.
ஈரான் மறுக்கவே அனைத்து விதமான பொருளாதார தடைகளையும் அதன் மீது விதித்தது ட்ரம்ப் தலைமையிலான அரசு. ட்ரம்பின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரான்ஸ், யுகே போன்ற ஐரோப்பிய நாடுகள் நேரடியாக தங்கள் பணத்திலேயே வர்த்தகத்தைத் தொடர முடிவு செய்தன. ஆனால் மருத்துவம், விவசாயம், இரும்பு, உணவுப் பொருட்களுக்கு மட்டுமே இத்தகைய வர்த்தகம் ஏற்புடையது. பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ட்ரம்பிற்கு எழுதிய கடிதத்தில் ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகளை பேசிக் தீர்க்க அழைத்திருந்தார். ஆனால் அதிபர் பதவியில் குஜாலில் இருந்தவர் மாட்டவே மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.

60 நாட்கள் கெடு
அமெரிக்காவின் பொருளாதார தடையை மதிப்பிழக்கச்செய்யும் தகுதியும் வல்லாதிக்கமும் ஐரோப்பிய யூனியனிடம் மட்டுமே உள்ளது. எனவே ஒப்பந்தத்தில் தொடர்புடைய மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை விட்ட ஈரான் இன்னும் 60 நாட்களில் பொருளாதாரத் தடையை தகர்க்கும் திட்டத்தை முடிவு செய்ய P5+1 ன் நாடுகளுக்கு கெடு விதித்துள்ளது. செவனேனு இருந்த ஈரானை சீண்டி, தற்போது அந்நாடு மீண்டும் யுரேனியத்தை செறிவூட்ட போவதாக அறிவித்துள்ளது. பதிலுக்கு தனது போர்க்கப்பல்களை, அமெரிக்கா வளைகுடா நாடுகளைச் சுற்றி நிறுவியுள்ளது.
தொடர்ந்து தனது சிறுபிள்ளைத்தனத்தை காட்டிவரும் ட்ரம்பின் திட்டம்தான் என்ன என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.
good