“ ட்ரம்ப் ஒன்று நினைக்க பெய்ஜிங் ஒன்று நினைக்குமாம்”
ஆப்கானிஸ்தானில் வளர்ந்து வரும் தாலிபான்களின் கொட்டத்தை ஒடுக்க, தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து வந்த அமெரிக்கா, அந்த நாட்டிற்கு வழங்கிவந்த நிதியுதவியை நிறுத்திவைத்தது. மேலும் பாகிஸ்தானுக்கு உலக அளவில் நிதிஉதவி கிடைக்காமலும் பார்த்துக்கொண்டது. ஆனால் சீனாவுடன் ட்ரம்ப் நடத்திய வரிவிதிப்பு விளையாட்டின் மூலம் பயனடைந்தது இந்தியா மட்டுமல்ல பாகிஸ்தானும் தான். அமெரிக்காவின் தொடர்ச்சியான நெருக்கடி காரணமாக பாக். தராசு சீனாவின் காந்தக் கல்லால் ஈர்க்கப்பட்டு வருகிறது.

CPEC
உலக அளவில் அமெரிக்காவை எட்டிப்பிடிக்கும் நோக்கத்தில் சீனா கொண்டுவந்த திட்டம்தான் BELT AND ROAD INTIATIVE. அதாவது சொந்த செலவில் பிறநாடுகளின் துறைமுகம் மற்றும் போக்குவரத்துகளில் வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலில் ஈடுபட்டு, அந்நாடுகளுடான வர்த்தகத்தை விரிவுபடுத்திகொள்வதன் மூலம் டாலரின் பரிமாற்றத்தை ஒடுக்கி தமது நாணயமான ரென்மின்பி (Reninbi) யை நிலைநிறுத்த முயன்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானுடன் செய்து கொண்ட ஒப்பந்தம்தான் China Pakistan Economic Corridor. பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் மூலமாக முதன்முறையாக பாகிஸ்தான் ராணுவ பகுதிக்குள் சாலை போட முன்வந்ததுள்ளது சீனா. அதிக கடன்சுமையால் நிலைகுலைந்துள்ள பாகிஸ்தானிற்கு மறைமுக நிதியுதவியை அளித்துவரும் சீனா அங்கு 62 பில்லியன் டாலர் மதிப்புள்ள வளர்ச்சி திட்டத்தை வகுத்துள்ளது.
6 பில்லியன் டாலர் மதிப்புள்ள 8 நவீன ரக நீர்மூழ்கிக் கப்பலை வாங்குவதற்கு 2015 ல் சீனாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது பாகிஸ்தான்.
ஆயுதங்கள்
முதற்கட்டமாக அமெரிக்காவின் ஃபைட்டர் ஜெட்டான F16 க்குப் பதிலாக சீனாவின் JF -17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானிலேயே தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும் சீனாவிடமிருந்து ஸ்டீல்த் ரக விமானம், ரேடார் அமைப்புகள் மற்றும் கப்பலில் பயன்படுத்தப்படும் போர்க்கருவிகள் வாங்கவும் முடிவுசெய்யப்படுள்ளது. ஏற்கனவே 6 பில்லியன் டாலர் மதிப்புள்ள 8 நவீன ரக நீர்மூழ்கிக் கப்பலை வாங்குவதற்கு 2015 ல் சீனாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது பாகிஸ்தான்.
கடல்வழி ஆபத்து
குறிப்பாக அரபிக்கடலில் ஆதிக்கத்தை அதிகரிக்கும் விதமாக பாகிஸ்தானின் Gwadar துறைமுகம் சீனாவால் மேம்படுத்தப்பட்டு வருகிறது. பதிலுக்கு அத்துறைமுகத்துக்கு அருகிலேயே Chinese only colony என்று சீனர்கள் மட்டும் தங்குவதற்கான வீடுகள் கட்டும் திட்டத்தை பாகிஸ்தான் துவங்கியுள்ளது. இத்துறைமுக மேம்பாட்டின் மூலம் இந்தியப் பெருங்கடலை சுற்றி வரும் சீன வர்த்தக கப்பல்கள் நேரடியாக அரபிக்கடலில் இருந்தே செயல்படமுடியும். இதற்காகத்தான் இந்திய எல்லைவழியே 2000 மைல் சாலைஅமைக்கும் பணியை சீனா மேற்கொண்டுள்ளது.

ஏற்கனவே தென் சீனக் கடலை சொந்தம் கொண்டாடி வரும் சீனா சமீபகாலமாக இந்தியப் பெருங்கடலை (IOR) ஐக் குறிவைத்துள்ளது. அதற்கு நல்லது செய்யும் பொருட்டு P75 எனப்படும் புதிய திட்டத்தை இந்தியா 2015 ல் அறிவித்தது. அதன்படி 30 ஆண்டுகளுக்குள் 24 நவீன நீர்மூழ்கிக் கப்பல்களை கப்பல்படையில் இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு படைப்பான அணுசக்தியால் இயங்கும் INS ARIHANT நீர்மூழ்கிக் கப்பல் சோதனைசெய்யப்பட்டது. இக்கப்பல் எந்தவொரு ரேடார் கருவிகளிலும் சிக்காத வண்ணம் கடலுக்கடியில் செயல்படக்கூடியது. இப்படி இந்தியாவும் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து அவ்வப்போது தங்களது பலத்தினை மறைமுகமாக நிறுவி வருகிறது.
அண்டை நாடுகளுக்கு இடையில் இப்படியான உரசல்கள் இருக்கும் பட்சத்தில் முன்னேற்ற நடவடிக்கைகளில் நம்மால் முழுவீச்சில் இயங்க முடியாமல் போகும். அதனைத்தான் சீனாவும் எதிர்பார்க்கிறது.