மத்திய கிழக்கில் பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போர்கள், வறுமையின் காரணமாக சொந்த நாட்டை விட்டு வெளியேறும் ஏராளமான ஆப்பிரிக்க மக்கள், தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் மக்கள் என வாழ வழியில்லாத ஒவ்வொரு மனிதனையும் கூப்பிய கரங்களுடன் வரவேற்கும் ஒரே நாடு சந்தேகமே இல்லாமல் கனடாதான். லட்சக்கணக்கில் புதுவாழ்வினைத் தேடிவரும் மக்களை அரவணைத்து, அவர்களுக்கான இடத்தையும், உரிமையும் வழங்கி, குடியுரிமையும் வழங்குவதில் கனடாவிற்கு இணையாக இன்னொரு நாட்டைச் சொல்ல முடியாது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற உலக அதிகாரத்தில் கோலோச்சும் நாடுகள் கூடத் தயங்கும் அகதி ஏற்பினை அசாதாரணமான முறையில் நடைமுறைப்படுத்திவரும் கனடா அடுத்த மூன்று வருடத்திற்குள் 10 லட்சம் மக்கள் கனடாவிற்கு வரலாம் என உலக மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

10 லட்சம்
கனடா நாட்டின் குடியுரிமை மற்றும் புலம்பெயர்ந்தோர் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் 2018 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இதன்மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் கனடா மேலும் பத்து லட்சம் மக்களுக்கு ஆதரவளிக்கலாம் என்ற திட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கனடாவின் நாடாளுமன்றம் “ஆதரவற்றோர் யாராக இருந்தாலும், எந்த நாட்டினராக இருந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த நிறத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கனடா அவர்களை வரவேற்கும். வாழவைக்கும்” எனத் தெரிவித்திருக்கிறது.
கருணையின் கரங்கள்
அகதிகளை ஏற்பதில் கனடா காட்டும் தீவிரம் அசாத்தியமானது. 1990 ஆம் ஆண்டுகளுக்குப் பின்பு அந்நாட்டில் அகதிகளாகக் குடியேறியவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்திற்கும் மேலிருக்கும் என 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கட்தொகை கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. இதனால் கனடாவின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 130% உயர்ந்துள்ளது. மேலும் வருவோர்களின் வேலைவாய்ப்பு, குழந்தைகளின் கல்விச் செலவு, சுகாதாரத் திட்டங்கள் என பெரும்பணத்தை இதற்காக அந்நாடு செலவளிக்கிறது.

2017 ஆம் ஆண்டு மட்டும் கனடாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை, கடந்த மூன்று ஆண்டுகளில் வந்தவர்களின் எண்ணிகையை விட 6% அதிகம். இருப்பினும் ஒருவரைக்கூட கனடா திருப்பி அனுப்புவதேயில்லை. புலம்பெயர்ந்த மக்களில் 9௦% பேருக்கு ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. கல்வித்துறையில் அவர்களுக்கு கணிசமான இடத்தை ஒதுக்கி அதன்மூலம் வேலைவாய்ப்பினைப் பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
புலம்பெயர்ந்தோருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதன்மூலம் அவர்களுடைய வாழ்க்கைக்கான உத்திரவாதத்தை அரசு அளிக்கிறது. மேலும் நாட்டின் தொழில் வளர்ச்சியில் சரிவு ஏற்படாமலும் அரசு சமாளிக்கிறது. மேலும் குடும்பத்தினை இழந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான Family reunification திட்டத்தினால் ஏராளமான மக்கள் மறந்துபோன மகிழ்ச்சியை கண்ணீர் அரக்கனிடமிருந்து திரும்பப் பெற்றிருக்கிறார்கள்.
2016 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி புலம்பெயர்ந்த மக்களில் பாதிக்கும் அதிகமானோர் இளங்கலை படித்தவர்கள். இதனை அரசு தொழில் மற்றும் வர்த்தக விரிவாக்க வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டது. இதனால் மேற்கொண்டு வரும் மக்களை ஏற்பதில் சிரமம் இருக்காது என அந்நாடு தெரிவித்திருந்தது.

நல்வாழ்வுத்துறை அமைச்சகம்
கனடா நாட்டின் குடியுரிமை மற்றும் புலம்பெயர்ந்தோர் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அஹமது ஹுசைன் (Ahmed Hussen) சோமாலியா நாட்டில் இருந்து வறுமையின் காரணமாக கனடாவிற்குப் புலம்பெயர்ந்தவர் ஆவார். அவர் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் விவாதங்கள் நடத்தப்பட்டு, 2020 ஆம் ஆண்டில் 360,000 மக்களையும், 2021 ஆம் ஆண்டில் 370,000 மக்களையும் அந்நாட்டு ஏற்றுக்கொள்ளும் என அறிவித்திருக்கிறது. இதற்கு அந்நாட்டு பூர்வகுடிமக்கள் அளிக்கும் வரவேற்பு தான் இன்னும் இந்த பூமியில் அன்பினை மலரச்செய்ய ஓரிடம் இருக்கிறது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
சொந்தநாட்டை விட்டு வெளியேறி, அவமானப்படுத்தப்பட்டு, துயரிலும், பசியிலும் உழலும் லட்சக்கணக்கான மக்களின் கால்கள் கனடாவை நோக்கியே பயணிக்கின்றன. எத்தனை மக்கள் வந்தாலும் அன்பின் பெருங்கைகளால் கட்டி அணைக்கும் கனடா உலகத்து நாடுகளுக்கு முன்மாதிரி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
