அமெரிக்காவிற்குள் அனுமதியின்றி உள்நுழையும் மர்ம நபர்களால் ஏற்படுத்தப்படும் தாக்குதல்களின் காரணமாக இயல்புநிலை அங்கே பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கக் காவல்துறையில் பணிபுரிந்துவந்த ரோனில் ரோன் சிங் என்னும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் வந்த அந்நியரால் தாக்கப்பட்டு உயிழந்திருக்கிறார். அந்த சமூக விரோதியை தடுத்தபோது பலத்த காயமடைந்த சிங் சம்பவ இடத்திலேயே மரணித்தது ஒட்டுமொத்த அமெரிக்காவையும் உலுக்கியிருக்கிறது. இதுகுறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரோனில் ரோன் சிங் அமெரிக்காவின் ஹீரோ என்று உணர்ச்சிபொங்க தெரிவித்துள்ளார்.

ஹீரோ
அமெரிக்காவின் நியூமேன் காவல் துறையில் கார்போரல் பதவியில் இருந்த ரோன் சிங் பிஜி தீவில் பிறந்த இந்தியராவார். கடந்த மாதம் டிசம்பர் 26 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது மர்ம ஆசாமிக்கும் காவல்துறையினருக்கும் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சிங் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருடைய இறுதி ஊர்வலத்தில் தன் ஐந்துமாதக் குழந்தையோடு கலந்துகொண்ட சிங்கின் அனாமிகா சிங்கின் புகைப்படம் அமெரிக்கா முழுவதும் வைரலாகப் பரவியது.
பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ட்ரம்ப், அமெரிக்காவின் நன்மைக்காக தன் உயிரை இழந்திருக்கும் ரோனில் ரோன் சிங் தான் உண்மையான அமெரிக்க ஹீரோ என்று உணர்ச்சிவசப்பட தெரிவித்தார்.

தீராப்பெரும் வலி
அந்த நாட்டைப் பொறுத்தவரை இம்மாதிரிப் பிரச்சனைகள் புதிதல்ல. இதுவரை ஏராளமானோர் இப்படி மர்மமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டிருகிறார்கள். சமீப காலமாக இத்தாக்குதல்கள் அதிகரித்திருப்பது கடும் பாதுகாப்பு குறித்த அச்சங்களை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தடுக்க அரசு பல்வேறு வகைகளில் முயன்றுவருகிறது. ஆனாலும் நிரந்தரத்தீர்வு கிடைத்தபாடில்லை. இதனால் சாமானிய மக்கள் கடும் பயத்தில் இருக்கின்றனர் என ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். மேலும் “இந்த சிக்கலைத் தீர்க்க மெக்சிகோ எல்லையில் எல்லை சுவர் அமைப்பதே ஒரே வழி, அதற்கான நடவடிக்கைளுக்கு அரசு முட்டுக்கட்டை போடுகிறது” என்றார்.

சுவர்
சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் ஊடுருவும் நபர்களைத் தடுக்க பாதுகாப்புச் சுவர் ஒன்றினை அமைக்கவேண்டும் என ட்ரம்ப் காங்கிரசை வலியுறுத்தி வருகிறார். இதற்கான 5 பில்லியன் டாலரை வழங்க காங்கிரஸ் தயக்கம் காட்டுகிறது. இதனால் அரசு நடவடிக்கை எதற்கும் ஒத்துழைப்பு அளிக்க மாட்டேன் என ட்ரம்ப் கடந்த சில வாரங்களுக்கு முன்னால் அறிவித்திருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பணியாளர்களுக்கான ஊதியம் கிடைக்காததால் பலர் வேலைக்குச் செல்லவில்லை.
இப்படி ஒட்டுமொத்த அரசாங்கமும் தன் இயக்கத்தை நிறுத்தியிருக்கிறது. ஒன்பது துறைகள் முடக்கப்பட்டுள்ளன. இருப்பினும் எவ்வித அமைதிப் பேச்சுவார்த்தையும் இதுவரை பலனளிக்கவில்லை. தேவையென்றால் அவசரநிலையை பிரகடனம் செய்து சுவரை அமைப்பேன் என ட்ரம்ப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார். உலக வல்லரசான அமெரிக்கா தன் சொந்த நாட்டு மக்களைக் காப்பாற்றவே திணறி வருகிறது என்பதே நிதர்சன உண்மை.