இரண்டே முக்கால் ஆண்டுகள் விவாதித்தும் தீர்வு எட்டப்படாத நிலையில் இதோ வந்துவிட்டது பிரெக்ஸிட்டின் எண்டு கார்டு. டிசம்பர் இறுதிக்கு சென்னை அலறுவது போல இந்த மார்ச் ‘29’ க்கு பிரிட்டன் பாராளுமன்றம் பதறுகிறது. காலணி ஆதிக்கத்தால் கைப்பற்றிய நாடுகளுடைய சாபம்தான் இப்படி யூகேவை பாடாய்ப்படுத்துகிறதோ….

ஐரோப்பிய யூனியனின் வரலாறு பற்றியும் யுகே என்றால் என்ன? என்பது பற்றியும் ஒன்றியத்தோடு யுகேவின் விரிசல் பற்றியும் நமது எழுத்தாணியில் ஏற்கனவே பார்த்திருந்தோம். தொடர்ந்து இங்கே ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக யு.கே மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையேயான சிக்கலைக் காணலாம். விலகல் விதிப்படி, ஒரு நாடு ஐ.ஒன்றியத்தில் இருந்து விலகுவதானால், அதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தரப்படும். அந்த கால வரையறைக்குள் “விலகும் நாடானது, ஒன்றியத்துடன் தனது எதிர்கால உறவைத் தீர்மானிக்கும்படியான திட்ட வரையரையை தாக்கல் செய்ய வேண்டும்”. அது ஒன்றியத்தையும் திருப்திபடுத்த வேண்டும்”. அதனால்தான் யுகேவிற்கு இந்த மார்ச் 29 மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது..
டீலா இல்ல.. நோடீலா?
இரண்டு வாரத்திற்கும் குறைவான நாட்களே உள்ளன. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற. ஆனால், தாக்கல் செய்த இரண்டு முறையும் தெரசா அம்மையாரின் ‘டீல்’, நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. அடுத்தது என்ன? இதெல்லாம் ஒரு டீலா? என்று பொருமும் எம்.பி.க்கள் (உட்கட்சியிலேயே), இதைவிடவா ஒரு டீல் வேண்டும்? (எதிர்கட்சி எம்.பிக்களின் ஆதரவும் உண்டு) எனும் பாய்ந்துவரும் எம்.பி.க்களுக்கு மத்தியில் “டீலெல்லாம் பின்னாடி பாக்கலாம். உட்கட்சி ஆதரவே இல்லாத டீலுக்கு தெரசா மே முதலில் பதவிலக வேண்டும்” என நச்சரிக்கும் எதிர்கட்சிகள் வேறு. அப்படி என்னதான் நடக்கிறது பிரெக்ஸிட் பஞ்சாயத்தில்? ஒரு அலசு அலசி விடுவோமா?
மூன்று முடிச்சுக்கள்
ஐரோப்பியத்தில் இருந்து விவாகரத்துப் பெறுவது இவ்வளவு கடினமென்று நினைத்திருந்தால் பிரிட்டன் ஆரம்பத்திலேயே விலகியிருக்கும். ஆக, பிரிட்டன் விவாகரத்துப் பெற வேண்டுமெனில் முதலில் £39 பில்லியன் யூரோக்களை ஒன்றியத்திற்கு பல தவணைகளில் வழங்க வேண்டும். இதற்கு இரண்டு தரப்புமே சமாதானம்தான். இரண்டாவதாக, யு.கே மற்றும் ஐரோப்பியத்திற்குள் இடம் மாறியுள்ள குடிமக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் சட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். மூன்றாவதாக வடக்கு அயர்லாந்து மற்றும் ஐரோப்பிய அயர்லாந்துக் (republic of Ireland) கிடையேயான எல்லைப் பிரச்சினையை தீர்ப்பது.

அயர்லாந்து
வடக்கு அயர்லாந்து பிரிட்டனின் Protestant மக்கள் வாழும் பகுதி. Republic of Ireland என்பது கத்தோலிக்க திருச்சபை மக்கள் வாழும் பகுதி. Protestant மக்கள் யுகேவுடன் இணைய விரும்புகின்றனர். ஆனால் கத்தோலிக்கர்கள் ஒன்றினைந்த அயர்லாந்தை (United Ireland) விரும்பவது மட்டுமல்லாமல் ஐரோப்பியத்தோடு இணைந்திருப்பதையே விரும்புகின்றனர். என்றாலும் இந்த இரண்டு பிரிவு வாழும் அயர்லாந்து, சட்டரீதியாகவோ இயற்பியல் ரீதியாகவோ இரண்டு தனி நாடுகளாக பிரிக்கப்படவில்லை.
லைட்டாவா…டைட்டாவா..!
இந்த பிரெக்ஸிட் டீலென்பது , விவாகரத்திற்குப் பின்னர் ஒன்றியம் மற்றும் யுகேவிற்கு இடையேயான உறவை நிர்ணயிப்பது. அதில் ஒன்றுதான் வர்த்தகம். இந்த டீலுக்கு இரண்டு பிரிவு ஆதரவாளர்கள் உண்டு. அதாவது, ஒன்றியத்தோடு எந்த உறவும் வேண்டாம். எப்படியாவது விலகினால் சரி எனும் “Hard Brexit”. மற்றது விதிகளை மதித்து குணமாக செல்லும் “Soft Brexit”. இவற்றை Customes union மற்றும் single market விவகாரம் என்றும் சொல்லலாம். இந்த சிக்கல் தான் இரு தரப்பினருக்கும் எந்த முடிவையும் எட்டவிடாது எட்டப்பனாக தடுத்துக் கொண்டிருக்கிறது. சரி. அதென்ன Single market மற்றும் Customes union?
Single market
ஐரோப்பிய நாடுகள், தங்களுக்குள் வர்த்தக வேறுபாட்டைப் போக்குவதற்காக இந்த முறையை உருவாக்கி கொண்டன. அதன்படி தங்களுக்குள் வரியில்லா ஏற்றுமதி & இறக்குமதி, வரியற்ற பரிவர்த்தனை, குடிமக்கள் எளிமையாக இடம் பெயர்தல் போன்றவற்றின் மூலம் தங்களுக்குள் எளிமையான வர்த்தகத்தை உறுதிசெய்ய முடிகிறது. உதாரணமாக பிரான்ஸுன் பொருட்களுக்கு யுகேவில் இறக்குமதி வரி விதிக்கப்படுவதில்லை. அதேபோல் சக ஒன்றிய நாடு என்பதானால் பிரான்ஸும் அவ்வாறே நடந்து கொள்கிறது. இதுவும் விவாகரத்து நடைமுறைக்கு வரும்வரை மட்டுமே. இதில் சுவாரசியமாக நார்வே நாடானது ஐரோப்பியத்தில் உறுப்பினரல்ல என்றாலும் அவற்றுடன் தனது எல்லையை பகிர்ந்து கொள்வதால் single மார்க்கெட் அந்தஸ்தை பகிர்ந்து கொள்கிறது.
Customs union
Customs union என்பது single market போன்றே உறுப்பு நாடுகளுக்கிடையேயான எளிமையான வர்த்தக முறையாகும். உறுப்பு நாடுகளுக்கு இடையேயான சிக்கலில்லா வர்த்தகத்தை இது உறுதிப்படுத்துகிறது. அதாவது ஒன்றியம் அல்லாத வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் ஒரே பொதுவான வரிக்கு உட்படுத்தப்பட்டு, உறுப்பு நாடுகள் முழுவதிலும் ஒரே விலைக்கு கிடைக்கும். ஐரோப்பிய உறுப்பினர் அல்லாத நாடுகளும் இந்த customs அந்தஸ்தை பெற முடியும். ஆனால் ஐரோப்பியாவின் அனைத்து பொருட்களுக்கும் இதே வரியற்ற முறையை அவை பின்பற்றினாலன்றி இது சாத்தியம் இல்லை. சில நாடுகள் ஐரோப்பிய உறுப்பினர் அல்லாமலே அவற்றுடைய customs union அந்தஸ்தை பெற்றுள்ளன. எகா துருக்கி. சிக்கல் என்னவென்றால் , ஐரோப்பிய நாடுகள் தாமாகவே எந்தவொரு வெளி நாட்டுடனும் இறக்குமதி தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியாது. ஆனால் இத்தாலி மட்டும் சீனாவுடன் BRI (BELT AND ROAD INTIATIVE) வர்த்தகத்தில் ஈடுபட்டு ஐரோப்பியாவுடன் மல்லுக்கு நிற்கிறது.
மார்க்கெட் மற்றும் யூனியனால் வந்த சங்கடம்
ஐரோப்பாவில் பிரிட்டன் சேருவதற்கே இந்த முறைதான் காரணமென்றாலும் இந்த முறையில் விவாகரத்திற்குப் பின்னர் எந்த முறையை தொடர்வது என்ற சிக்கல் நீடித்து வருகிறது. ஏனெனில் ஐரோப்பிய மக்களின் குடிபெயர்தலை யு.கே விரும்பவில்லை. ஆனால் அதனுடன் சச்சரவற்ற (வரி சிக்கலற்ற) வர்த்தகத்தைத் தொடர விரும்புகிறது. ஆனால் சிங்கிள் மார்கெட் முறையை வேண்டாமென்றால் customs union இல் பங்கு கொள்ள முடியாது என்று ஐரோப்பியம் கூறுகிறது.
எடுத்துக்காட்டாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு, பிரிட்டன் 10 சதவிகித வரி விதிக்கிறது என்று வையுங்கள். இந்தியாவின் தேயிலைகளுக்கு பிரான்ஸில் 2 சதவிகித வரி என்றும் கொள்ளுங்கள். எனவே நமது தேயிலையை பிரான்ஸுக்கு அனுப்பி அங்கிருந்து பிரிட்டனுக்கு அனுப்புவதன் மூலம் நாம் லாபம் அடையலாம். இதுதான் இங்கு சிக்கலாக நிற்கிறது. ஐரோப்பிய ஒன்றியமோ customs அந்தஸ்தை யுகே பெற்றுக்கொண்டால், தங்களது பொருட்களை யுகே, அதிக வரி விதித்து பிற நாடுகளில் விற்க முடியும் என்று கூறி மறுத்து வருகிறது. மேலும், வடக்கு அயர்லாந்து யுகேவுடன் பிரிந்து விட்டால் மற்றொரு அயர்லாந்தில் இருந்து எந்த முறையில் சரக்குகள் வடக்கில் உள்நுழையும். ஒரு பகுதியில் வேறு வரியும் மறு பகுதியில் வேறு வரியும் இருப்பது மக்களை குழப்புவதோடு பொருளாதாரத்தையும் சேதப்படுத்தி விடதா?
சிக்கலான Backstop யோசனை..
தெரசா அம்மையாரின் யோசனைப்படி, தொழில்நுட்பங்களின் உதவியால் எல்லைகளை வகுத்துக்கொள்ளலாம். மற்றொரு யோசனைப்படி ஐரோப்பியத்துடன் சிக்கலற்ற முறையில் கஸ்டம்ஸ் யூனியன் மற்றும் சில சிங்கிள் மார்கெட் முறைகளைப் பங்கிட்டுக் கொள்ளலாம் என்பது. ஆனால் எந்த எல்லைப்பிரிப்பும் அயர்லாந்தின் பிரிவினைக்கு வழிவகுத்து வன்முறைக்கு வித்திட்டு விடும் என்பது அயர்லாந்து மக்களின் கருத்து. மேலும் சிங்கிள் மார்க்கெட் மற்றும் கஸ்டம்ஸ் யூனியன் விதிமுறைகள் உடைக்கப்படுவதும் சுலபப்படுத்துவதும் அதன் தனித்தன்மையை கேள்விக்குறியாக்கும் என்பது ஒன்றியத்தின் கூற்று.
ஐரோப்பாவின் யோசனைப்படி, யுகே தற்போது பிரிந்து செல்லலாம். ஆனால் அயர்லாந்து சிக்கல் முறையாக தீர்க்கப்படும்வரை அல்லது மாற்றுத் திட்டம் நடைமுறைக்கு வரும் வரை அது ஐரோப்பிய ஒன்றியத்தின் Customes மற்றும் single market விதியில் இயங்கட்டும் என்பதாம். இதற்கு பிரிட்டனோ , வடக்கு அயர்லாந்து தங்களுக்கு சொந்தம் எனவும் அதிலிருந்து வேறு வழியில் வர்த்தகம் செய்வது யுகே கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்கிறது. வடக்கு அயர்லாந்தில் ஐரோப்பிய யூனியன், தனது முழு வர்த்தக அதிகாரத்தை செலுத்துவதே backstop எனப்படும். இதற்குதான் தெரசா அம்மையாரின் டீலில் நிரந்தர தீர்வு இல்லை என்கின்றனர் பிரிட்டன் எம்பிக்கள்.

தெரசா அம்மையாரின் டீலில் இதுதான் இடியாப்பச் சிக்கல். கொஞ்சம் சறுக்கினாலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் வடக்கு அயர்லாந்து சென்றுவிடும். குறிப்பிட்ட கால வரையறைக்குள் எந்தவித டீலும் எட்டப்படாவிடினும் வடக்கானது ஐரோப்பியத்துக்கே. அல்லது முழு பிரிட்டனும் ஐரோப்பிய வரி வலையில் சிக்கிக்கொள்ளக்கூடும். இந்நிலையில் தெரசா அம்மையாரின் மாற்றப்பட்ட டீலில் மூன்றாவது முறையாக அடுத்த சனிக்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதிலும் தோல்வியெனில் பிரெக்ஸிட் தேதி ஒத்திவைக்க வாக்கெடுப்பு நடத்தப்படும். அவ்வாறு ஒத்திவைக்கப்பட்டால், மே மாதம் நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத் தேர்தலில் வேண்டா வெறுப்பாக பங்கு பெற வேண்டிய நெருக்கடி பிரிட்டனுக்கு நேரிடும். ஒத்திவைக்கும் காலம் அதிகமில்லையெனில் 80,000 பக்கங்கள் கொண்ட டீலினை குறுகிய காலத்தில் மறு பரிசீலனை செய்தாக வேண்டும்.
என்ன செய்யப்போகிறார் தெரசா மே? என்னவாகப்போகிறது பிரிட்டன்? பொறுத்திருந்து பார்ப்போம்.