டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றதிற்குப்பின் அமெரிக்க அரசு முதன்முறையாக முடங்கியுள்ளது. இதனால் அரசு இயந்திரம் தனது இயக்கங்களை முற்றிலும் நிறுத்தி நின்றுவிட்டது. அமெரிக்க மக்கள் டிவிட்டரில் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் தனது காதில் விழுந்துவிடக்கூடாது என்பதாக ட்ரம்ப் தீர்மானம் எடுத்திருக்கிறார். அவர் சொல்வதெல்லாம்,” முதலில் மெக்சிகோவிற்கு சுவர் கட்டுவோம், அதன்பின்பு அரசாங்கத்தை பார்த்துக்கொள்ளலாம்” என்பதுதான். இதெல்லாம் கூட பரவாயில்லை “இதே போல் வருடம் முழுவதும் இருந்தாலும் சுவர் கட்டுவதே முதல் வேலை” என்றதுதான் அமெரிக்கர்களை ஆட்டம்காண வைத்திருக்கிறது.

அப்படி என்ன சுவர்?
மெக்சிகோவில் இருந்து ஏராளமானோர் சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் குடியேறுவதாகவும் இதனால் அமெரிக்கர்களுக்கு கிடைக்கவேண்டிய சலுகைகள் மற்றும் நலப்பணித்திட்டங்கள் போன்றவை குடியேறிகளுக்கு வழங்கப்படுவதாகவும் தேர்தலின் போது குற்றம் சாட்டினார் ட்ரம்ப். இதனைத் தடுக்க இருநாட்டு எல்லையில் சுமார் 1,552 கிலோமீட்டர்களுக்கு சுவர் எழுப்புவதாகவும் வாக்குறுதி அளித்தார்.
பதவியேற்ற பின்னர் இதற்கென 18 பில்லியன் டாலர்களை 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ஏறிக்கடக்க முடியாத, நுழைய முடியாத, உயரமான, பெரிய, அழகான எல்லைத் தடுப்புச் சுவர் கட்டுவதற்கான ஒப்பந்தத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கையெழுத்திட்டார் ட்ரம்ப்.

மூளும் பிரச்சினைகள்
தற்போது அதிபரின் இந்தத் திட்டத்திற்கு காங்கிரஸ் நிதியை அளிக்க மறுக்கிறது. சுவர் கட்டாத வரை நான் எந்த அரசாங்க கோப்புகளிலும் கையெழுத்திட மாட்டேன் என ஒற்றைக்காலில் நிற்கிறார் ட்ரம்ப். அரசாங்க வேலைகள் அப்படியே செயல்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் உள்நாட்டு பாதுகாப்பு, சட்டம், வீட்டு வசதி, விவசாயம், வணிகம் உள்ளிட்ட 9 துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படததால் வேலை நிறுத்தம் துவங்கியுள்ளது.
ஜனநாயக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிபரைச் சந்தித்துப் பேசியபோதும் இதையே விதிமுறைகளைத் தான் முன்வைத்திருக்கிறார். இதனால் இந்த அபாயமான சிக்கல் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்திருக்கின்றனர்.
மாஸ்டர் பிளான்?
அதிபரின் இந்த கட்டுப்பாடுகளுக்குப் பின்னர் ஒரு திட்டம் இருக்கிறது. இந்தப் பிரச்சினையை அதிகப்படுத்துவதன் மூலம் நெருக்கடி நிலைமைக்கு நாடு தள்ளப்படும். அதனைப் பயன்படுத்தி மொத்த அதிகாரத்தையும் கைப்பற்றி சுவர் கட்டிலாம் என்ற எண்ணம் ட்ரம்பிடம் இருக்கிறது. இது மாஸ்டர் பிளான் இல்லை, வறட்டுப்பிடிவாதம் என்கிறார்கள் மக்கள்.

ஏறத்தாழ 8 லட்சம் பணியாளர்களுக்கு ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. துப்புரவாளர்களும் இதில் அடக்கம் என்பதால் அமெரிக்காவின் பூங்காக்கள் அனைத்திலும் குப்பை மழுங்கச் சிரிக்கிறது. அமெரிக்க வரலாற்றில் இம்மாதிரியான அரசு முடக்கம் சகஜம் தான் என்ற போதிலும் இத்தனை தீவிரமாக மக்கள் எதிர்க்கும் போது அமைதிகாக்கும் அதிபரின் மவுனம் என்றென்றும் ஆபத்தானது.