1953 – ஆம் ஆண்டு கொரிய தீபகற்பம் முழுவதும் போர்மேகங்கள் சூழ்ந்திருந்தன. அமெரிக்காவின் ஆதரவில் தென்கொரியாவும், ரஷியாவின் நிழலில் வடகொரியாவும் போர்க்களம் புகுந்தன. தாக்குதல்கள், அமைதிப் பேச்சுவார்த்தைகள், உடன்படிக்கைகள் எனப் பல பரிமாணங்களைக் கடந்து இன்று இரு நாடுகளும் நட்புக்கரங்களை நீட்ட முன்வந்துள்ளன. அரை நூற்றாண்டுகாலமாய் இருந்த பகை முடிவிற்கு வருகிறது. இதன் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லைப் பகுதியில் போரின்போது புதைத்து வைக்கப்பட்ட 8 லட்சம் கன்னிவெடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரை நூற்றாண்டுப் போர்
இரண்டாம் உலகப்போர் நடந்து தன் அழியாச் சுவடுகளை பதித்து முடிந்திருந்தது. ஒன்றிணைந்த கொரியாவை முதலாம் உலகப்போர் வரை ஜப்பான் ஆண்டு வந்தது. முதல் உலகப்போரில் அமெரிக்காவிடம் ஜப்பான் சரணடைந்தவுடன் சோவியத் யூனியன் கொரியாவைக் கைப்பற்றியது. 1948-ம் ஆண்டு கொரியாவைப் பிரிக்க சோவியத் ஒன்றியமும், அமெரிக்காவும் ஒப்புக்கொண்டன. சோவியத் ஒன்றியம் வட கொரியாவையும், அமெரிக்கா தென் கொரியாவையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டன.
வட கொரியாவில் ஒரு கம்யூனிச சித்தாந்த அரசை நிறுவிய சோவியத் ஒன்றியம், முன்னாள் கொரில்லா படை வீரரான கிம் இல்-சூங்கிடம் (Kim Il-sung) (கிம் ஜாங்-உன்னின் தாத்தா) அதிகாரத்தை ஒப்படைத்தது. தென்கொரியாவில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டு சைங்மேன் ரீ (Syngman Rhee) அந்நாட்டு முதல் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இரண்டு நாட்டிலும் அரசுகளை அமைத்த பின்னர் அமெரிக்காவும், சோவியத் யூனியனும் கொரியாவை விட்டு அகன்றன. வருடம் 1950. முதல் தாக்குதலை வடகொரியா நடத்தியது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இப்போர் நீடித்தது. ஐ.நா வின் நேரிடித் தலையீட்டினால் இப்போர் நிறுத்தம் சாத்தியமானது. ஆனாலும் இரு நாடுகளும் எதிரி நாடுகளானதும் அப்போதுதான்.
வளர்ச்சியும் வீழ்ச்சியும்…
தென்கொரியா பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்ததன் விளைவாக ஆசியக்கண்டத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக உருப்பெற்றது. அதே நேரத்தில் வட கொரியா முதலாளித்துவத்தைத் தீவிரமாகப் பின்பற்றவே பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி அதிகரிக்கத் தொடங்கியது. வாழ்க்கைச் சூழல், கட்டாய கருக்கலைப்பு, வேலைவாய்ப்பின்மை ஆகிய காரணங்களுக்காக வட கொரியாவைத் தொடர்ந்து எச்சரித்து வந்தது ஐ.நா.
நம்பிக்கையின் கீற்று
50 வருடங்களுக்கும் மேலாக நீடித்துவரும் இப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக வட கொரிய அதிபரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கடுத்து வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் தங்களது நாட்டிலுள்ள அணுஆயுதத்தை ஒழிப்பதாக அறிவித்தது நினைவிருக்கலாம். சமீபத்தில் வட கொரிய அதிபரும் தென்கொரிய அதிபரும் சந்தித்தது மாபெரும் நம்பிக்கையினை இருநாட்டு மக்களுக்குமிடையே வளர்த்திருக்கிறது.

8 லட்சம் கன்னி வெடிகள்
இந்த நட்புறவை மேலும் பலப்படுத்தும் விதமாக இருநாட்டு எல்லைகளுக்கு இடையே உள்ள பகுதியில் இருக்கும் கன்னிவெடிகளை அகற்றும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 250 கிலோமீட்டர் நீளமும் 5 கிலோமீட்டர் அகலமும் கொண்ட எல்லையில் 8 லட்சம் கன்னிவெடிகள் இருக்கலாம் என்கிறார்கள் ராணுவத்தினர். எல்லைகளற்ற அப்பகுதியில் உள்ள மின்சாரவேலியும் அகற்றப்பட இருக்கிறது. இனி எல்லைகளை எளிதில் கடக்க சுங்கச்சாவடிகள் அமைக்கப்படும் என இருநாட்டு அரசுகளும் தெரிவிக்கின்றன.

முஸ்தபா முஸ்தபா
ஒருவழியாக 50 வருடத்திற்கும் மேலாக இருந்த மனக்கசப்புகளை இருநாட்டு மக்களும் மறக்கத் தொடங்கிவிட்டனர். சமீபத்தில் நடந்த கருத்துக்கணிப்பில் வடகொரிய மக்கள் எங்களுடைய சகோதர்கள் என்று தென்கொரியாவின் பெரும்பான்மையான மக்கள் கூறியிருக்கின்றனர். தடைகள் விலகிய பிறகு தென்கொரிய மக்களைச் சந்திக்க ஆவலாய் இருப்பதாக வடகொரிய மக்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் ஒரு மாதத்திற்குள் எல்லைகளில் இருக்கும் வெடிகள் அகற்றப்பட்டு பாதுகாப்பான இடமாக அறிவிக்கப்படும். வெகுநாள் கழித்து இரு நாட்டு மக்களும் சந்திக்க இருக்கும் அக்கனத்தினை மொத்த உலகமுமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?