அனைத்துலக மாணவர் தினம் (International Students’ Day) என்பது பன்னாட்டு ரீதியில் மாணவர் முக்கியத்துவத்தை நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் 17 – ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது..
1939 – ஆம் ஆண்டில், இதே நாளில் செக்கோசிலவாக்கியாவின் (Czechoslovakia) தலைநகர் பிராக்கில் (Prague), ஒரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டம் ஹிட்லரின் நாசிப் படைகளினால் நசுக்கப்பட்டது. போராட்டத்தின் முடிவில் 10 மாணவர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர். செக்கொசிலவாக்கியா முழுமையாக நாசிக்களின் ஆக்கிரமிப்புக்குள்ளானது. இந்த நிகழ்வுகளின் ஞாபகார்த்தமாகத் தான் இந்நாள் சர்வதேச மாணவர் தினமாக அறிவிக்கப்பட்டது.
இந்நாள் முதன் முதலில், 1941 – ஆம் ஆண்டு அனைத்துலக மாணவர் அமைப்பினால் லண்டனில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் அப்போது அகதிகளாக இடம்பெயர்ந்த மாணவர்கள் அங்கத்தவர்களாயிருந்தனர். இந்நிகழ்வை ஐக்கிய நாடுகள் அவை அங்கீகரிக்க ஐரோப்பாவின் தேசிய மாணவர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலமாக இந்த மாணவர் அமைப்பு அழுத்தம் கொடுத்தது.
வருங்காலம் இளைஞர்கள் கையில் தான் இருக்கிறது, மாணவர்கள் தான் நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள் என்று நாம் ஓயாமல் கூறி வருகிறோம். அந்த அளவிற்கு மாணவர்கள் நாட்டிற்கு, சமுதாயத்திற்கு முக்கியமானவர்கள். ஆனால், ஒரு நல்ல மாணவனை ஒரு நல்ல பள்ளி தான் உருவாக்க முடியும்.
மாணவர்கள் இப்போது பள்ளியில் கற்றுக் கொள்வதை விட வெளியில் நிறைய கற்றுக் கொள்கின்றனர்.
நல்ல பள்ளி என்பது தூய்மையான வகுப்பறை, பாதுகாப்பான குடிநீர், பயன்படுத்தும் வகையில் அமைந்த கழிப்பறை, நல்ல காற்றோட்டமான தூய்மையான பள்ளி வளாகம் ஆகியவற்றைக் கொண்டதாகும். அதை விட முக்கியம் ஆசிரிய மாணவ நல்லுறவு, மாணவர்கள் சுதந்திரமாக உரையாடும் வகையில் வகுப்பறை அமைதல், குழந்தைகளின் இயல்பான திறன்களை வெளிக் கொணரும் வகையில் அமைந்த நிர்வாகம், கற்றல் உபகரணம், ஆசிரியர் பயன்படுத்தும் புதிய உத்திகள், மாணவர்களின் பன்முக திறன்களை மேம்படுத்தும் செயல்பாடுகள் மற்றும் மாணவர்களிடையே காணப்படும் சமூக மற்றும் ஒழுக்க நடத்தைகள் ஆகியவை ஒரு பள்ளியின் வெற்றிக்கு மட்டுமல்ல ஒரு மாணவனின் வெற்றிக்கும் காரணமாக அமைகின்றன.
பள்ளி அல்லது கல்லூரிகளில் மாணவனின் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணி, ஆசிரிய – மாணவ நல்லுறவே ஆகும். கற்றலுக்கான சூழலில் ஆசிரியரின் பணித்திறனும், ஈடுபாடும் பெரும் பங்கு வகிக்கிறது. ஆசிரியரின் பணித்திறனும் ஈடுப்பாடும் அவ்வாசிரியரின் மனப்பான்மையை ஒட்டியே அமைகிறது. ஆசிரியர் தன் பணி சார்ந்த திறன் மற்றும் திறமையை வளர்த்து கொள்ள, தொழில்முறை பயிற்சிகளும் அதனைச் சார்ந்த செயல்திறனும் முக்கியம். ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் மாணவர் நிலையிலிருந்து நாள்தோறும் தம்மை மேம்படுத்திக் கொள்ளுதல், மாணவர்களின் கற்றலில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
மேலும், மாணவர்கள் இப்போது பள்ளியில் கற்றுக் கொள்வதை விட வெளியில் நிறைய கற்றுக் கொள்கின்றனர். தொழில்நுட்ப வசதி காரணமாக தங்களுக்கு வேண்டியதைத் தாங்களே தேடிப் படிப்பது இப்போது அவர்களுக்கு எளிமையாகி விட்டது. இப்போது பள்ளிகளில் மாற்றங்களுக்கான நேரம். பள்ளியில் உரையாடுவதற்கான சூழல், குறிப்பிட்ட பாடத்தைப் பற்றி அனைவரும் தங்கள் கருத்தைப் பரிமாறுவதற்கான சூழல் ஏற்பட வேண்டும். அப்போது தான் மாணவர்களுக்கும் அது விருப்பத்திற்குரிய ஒன்றாக மாறும்.
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள், ஒரு மாணவன் வேலைக்குச் சென்று நன்றாக சம்பாதிக்க மட்டுமே படிக்க வேண்டும் என்று நினைத்தல் கூடாது. அதே போல மாணவர்கள் கற்றுக் கொள்வதற்காக மட்டுமே படிக்க வேண்டும். விருப்பமானதைத் தேடித் தேடிக் கற்க வேண்டும்.