இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து வருகிறது. இன்றுமட்டுமல்ல வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் வழிநெடுக இந்தப் பிரச்சினை நாட்டை உலுக்கியுள்ளது. தற்போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் ஏற்படும் தடுமாற்றங்கள், புதிய முதலீடு, வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் சிறப்புத் திட்டங்கள் என அனைத்தும் இந்தியாவை இந்த நிலையில் நிறுத்தி இருக்கிறது.

மாபெரும் கணக்கெடுப்பு
இந்திய கணக்கெடுப்பு வாரியம் 2017 ஆம் ஆண்டு ஜூலை முதல் ஜூன் 2018 ஆம் ஆண்டு வரை நடத்திய கணக்கெடுப்பின்படி இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை கணிசமாக உயர்ந்துள்ளது. அந்த அறிக்கையின்படி இந்தியாவில் இருக்கும் சராசரி வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.1 சதவிகிதம் ஆகும். கடந்த 1972 -73 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தான் இவ்வளவு பெரிய துயரத்தை இந்தியா சந்தித்ததாகவும் இதனால் இந்திய எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
1.1 கோடி பேர்
இந்திய பொருளாதார மற்றும் வளர்ச்சியைக் கண்காணித்துவரும் அரசு சாரா நிறுவனங்கள் பலவற்றின் தகவலின்படி இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் வேலையை இழந்தவர்களின் எண்ணிக்கை 1.1 கோடி. பிசினஸ் ஸ்டாண்டர்ட் (Business Standard) நிறுவனம் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை நகரங்களில் 7.8 சதவிகிதமாகவும், கிராமங்களில் 5.3 சதவிகிதமாகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. தேசிய புள்ளியல் துறை அளித்திருக்கும் தகவலின்படி, இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிகள் இம்மாதிரியான மிகப்பெரிய சிக்கல்களை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கத்தின் நேரடி விளைவுகள் தான் இவை. ஏனெனில் பல சிறு மற்றும் குறு தொழில்கள் சுத்தமாக மூடப்பட்டன. அதற்கான விலையைத்தான் தற்போது நாம் கொடுக்க வேண்டியதிருக்கிறது. இந்தியாவின் வானில் அரசியல் மேகம் சூழ்ந்துள்ளதால் அடுத்த அதிரடி அறிவிப்புகள் வர இருக்கின்றன. ஆனால் யாருக்காக இந்தத்திட்டம் எல்லாம்? இதுவரை வந்த திட்டங்கள் எல்லாம் எப்படி பயன் அளித்திருக்கின்றன? என்று பார்த்தால் மிஞ்சுவது சுழியம் தான்.