எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே..!!

0
53

சுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தை, ஒட்டுமொத்த பூமியின் புரட்சி வார்த்தையாக வரலாற்றின் பக்கங்களில் எல்லாம் எப்போதும் வெளிப்பட்டு இருக்கிறது. அடக்குதலும், அத்துமீறலும் காலம்காலமாக மனிதர்களுக்குள் நிகழ்ந்து வரும் ஒரு வழமை. அடக்க அடக்கத் தான் திமிறி மேல் எழுந்திருக்கிறது மனித இனம். அப்படி நடந்த ஒரு மனித மலர்ச்சி தான் நம் தேசத்தின் சுதந்திரம்.

Credit: Indian Express

இந்தியா இன்று 72-வது சுதந்திரத்தைக் கொண்டாடி வருகிறது. ஆனால், எது நம் சுதந்திரம் என்பதில் தான் மிகப்பெரிய அளவிலான வாதங்களையும், எதிர்வாதங்களையும் நாடு சந்தித்து வருகிறது. இந்திய ஒன்றியம் என்று  அழைக்கப்படும் இந்த தேசத்தை இன்று ஒரே குடையின் கீழ் கொண்டு வர  முயற்சிகள் நடந்து வருகின்றன.

ஆளும் நாடுகள் மாறியிருக்கின்றன. ஆனால், அடிமை சாசனம் மாறவில்லை. 1947-க்கு முன் நிலவிய அதே சூழல் தான் இன்று ‘சுதந்திர இந்தியா’ என்ற பெயரில் நிலவுகிறது. இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமானால் ஆங்கிலேயன் ஆண்ட அதே அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு அதிகார மாற்றம் செய்த பிறகும் இன்றும் அந்த கட்டமைப்பு நீள்கிறது.

மக்களாட்சி என்றும், ஜனநாயக நாடு என்றும் பெயரளவுக்குக் கூறிக் கொண்டாலும் ஆட்சியில் இருக்கும் ஒருவரோ அல்லது ஒரு கட்சியோ தான் ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்திற்கான சட்டதிட்டங்களைத் தீர்மானிக்கிறது.

இதற்குக் காரணம், நமக்கு ஓட்டுப் போட்டு சட்டமன்ற உறுப்பினர்களையோ, நாடாளுமன்ற உறுப்பினர்களையோ தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டும் தான் பெயரளவில் உள்ளது.  ஆனால், யாரை அமைச்சர் ஆக்க வேண்டும், யாரைப் பிரதமர் ஆக்க வேண்டும் என்ற உரிமை நம்மிடம் இல்லை.

இதன் பலனைத் தான் இன்று தென்னிந்தியா அனுபவித்துக் கொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக ஒன்றைச் சொல்லலாம். இந்திய அரசு சமீப காலங்களில் அறிவிக்கும் திட்டங்களின் பெயர்களை கவனித்திருக்கிறீர்களா? பிரதான் மந்திரி ரோஜர் யோஜனா , பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா. இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று யாருக்கேனும் உடனே புரியுமா? பெயருக்கான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவே  பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும் போது, திட்டங்கள் எப்படி நாட்டின் கடைக்கோடி மக்கள் வரை சென்று சேரும்.

அறிந்து தெளிக!
வட இந்தியாவிலிருக்கும் ஒரு குடிமகனுக்கும், தென் கடைக்கோடியில் இருக்கும் குடிமகனுக்கும் அராசங்கத்தின் பக்கத்திருந்து  எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது என்பதற்காகத் தான், அன்றே சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர், இரட்டைத்தலைநகரம் வேண்டும் எனப் பரிந்துரைத்தார். வட இந்தியாவிற்கு டெல்லியும், தென்னிந்தியாவிற்கு ஹைதராபாத்தும் தலைநகராக அமைய வேண்டுமென அவர் விரும்பினார்.

‘ஒரே நாடு ஒரே வரி’ என்று ஜிஎஸ்டி-யை அறிவித்த அரசு, ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்று முழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. முதலில் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையான இடைவெளியைக் குறைப்பது தான் தற்போதைய முக்கியத் தேவையாக இருக்கிறது. அந்த இடைவெளியை நீக்க அரசின் திட்டங்கள், அறிவிப்புகள் என அனைத்தும் தேசத்தின் அனைத்து மொழிகளிலும் வெளியாக வேண்டும்.

“சமூகத்தை ஆளும் கருத்துக்கள் எல்லாம் ஆளும் வர்க்கத்தின் கருத்துக்கள்” – மார்க்ஸ்.

“சமூகத்தை ஆளும் கருத்துக்கள் எல்லாம் ஆளும் வர்க்கத்தின் கருத்துக்கள்” என்பார் மார்க்ஸ். எழுபத்தி இரண்டு ஆண்டுகளில் நாம் மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது. சிங்கப்பூரை இணை வைத்துப் பார்த்தோமானால், இவ்வளவு நீண்ட காலம் என்பது நம் நாட்டின் எல்லையைப் பொறுத்து ஒருவகையில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். அதே சமயம், அமெரிக்கா சுதந்திரம் வாங்கிய 60 ஆண்டுகளில் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கவில்லை என்பதையும் நினைவுறுத்த வேண்டும்.

அறிந்து தெளிக!
1974-ம் ஆண்டு வரை இந்திய மாநிலங்களில், சுதந்திர தினத்தன்று ஆளுநர்கள் தான் கொடியேற்றிக் கொண்டிருந்தனர். ஆனால், டெல்லியில் பிரதமர் கொடியேற்றுவார். அப்போது, முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் தான் மாநிலங்களில் முதல்வர்கள் தான் சுதந்திர தினத்தன்று கொடி ஏற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வெற்றி பெற்றார்.

நமக்கு ஒருநாள் முன்னதாகச் சுதந்திரம் பெற்ற பாகிஸ்தானை நினைத்துப் பார்த்தோமானால், நாம் கொடுத்து வைத்தவர்கள் தான். இந்தியா சுதந்திர நாடுதான், குடியரசுத் தலைவரைக் கூட விமர்சிக்க முடிகிற இந்தியா எங்கே, எப்போது யார் இயந்திரத் துப்பாக்கியுடன் வந்து சுடுவார்கள் என்று நிச்சயமில்லாத பாகிஸ்தான் எங்கே?

பாகிஸ்தானில் 1956 முதல் 1958 வரை மட்டும் ஜனநாயக ஆட்சி அமலிலிருந்தது. அதன்பின் 1972 வரை இராணுவ ஆட்சிதான். பிற்பாடு பல்வேறு கட்சிகள், அரசியல் பழிவாங்கல் படலங்கள் என்று எந்த ஆட்சியாளருக்கும் நாட்டின் வளர்ச்சி பற்றியோ, பொருளாதாரத் தொலைநோக்கு பற்றியோ அதிகம் சிந்திக்க நேரமில்லை.

அந்த அண்டை நாட்டோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் நாம் நன்றாகவே வாழ்ந்து வருகிறோம். ஆனால், சமூகச் சுதந்திரம் என்பது நாட்டின் பல இடங்களில் இன்றும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. நாடு என்பதும், அரசாங்கம் என்பதும் மக்களுக்கான ஒன்றாக அதுவும் அனைத்து மக்களுக்குமான ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே நம் ஒரே நோக்கமாக இருக்கிறது.

சுதந்திரக் காற்றை சுதந்திரமாகவும், பெருமையுடனும் அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைத்து இந்தியச் சகோதர சகோதரிகளுக்கும் சுதந்திர தின விழா நல்வாழ்த்துக்கள்.