இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகள் சாமானிய மக்களுக்கு எப்போதுமே பயம் தரக்கூடிய ஒன்றாகவே இருந்துவருகிறது. அதிலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் தான் நிலைமை இன்னும் மோசமடைந்தது. அப்போது செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மிக அதிக அளவிலான எண்ணிக்கையால் இந்திய வர்த்தகம் கிட்டத்தட்ட படுத்தே விட்டது.

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தவுடன் ஏராளமான கட்டுக்கதைகளும் அதனோடே பிறந்து வந்தன. மைக்ரோ சிப் தான் அதன் உச்சபட்ச சிறந்த கதை. அதே நேரத்தில் புதிய 2000 ரூபாய் நோட்டுகளால் பணத்தினைப் பதுக்குவோர் மட்டுமே நலமாக இருக்க முடியும் எனவும், இதனால் வரி ஏய்ப்பு மற்றும் கருப்புப்பணம் பெருகும் என எதிர்க்கட்சிகளின் சார்பில் கண்டன அறிக்கைகள் விடப்பட்டன.
18.03 லட்சம் கோடிகள்
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி 18.03 லட்சம் கோடியை புழக்கத்தில் விட்டது. இதில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் 37% எனவும், 500 ரூபாய் நோட்டுக்கள் 47% எனவும் தெரிவிக்கப்பட்டது. மற்றைய நோட்டுகள் மீதமுள்ள 16% அளவிற்கு புழக்கம் கண்டன. இந்நிலையில் மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்த இருப்பதாக தி பிரிண்ட் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே பல முக்கிய பிரமுகர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள் அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டு வந்ததன் விளைவாக மத்தியரசு இந்நடவடிக்கையை எடுத்துவருதாகத் தெரிகிறது. மேலும் கடந்த சில மாதங்களாக பணப்பதுக்கல் தொடர்பாக ஏராளமான குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருந்திருக்கிறது. தேர்தல் நெருங்கும் சமயம் என்பதால் இதனை மத்திய அரசு தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள நினைப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. 2000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதில் 500 ருபாய் நோட்டுகள் அதிகமாக அச்சிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது என அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே புத்தாண்டு முதல் 2000 ரூபாய் செல்லாது என்று கிளம்பிய வதந்திகளால் பீதியடைந்திருந்த இந்திய மக்கள் தற்போது 2000 நோட்டுகளின் அச்சடிப்பு நிறுத்தத்தின் மூலமாக இன்னும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இருப்பினும் அரசின் சார்பில் உறுதியான அறிக்கை எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.