இம்ரான் கானின் அமைதி முடிவிற்குக் காரணம் இதுதான்!

Date:

பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய போர் விமானி அபிநந்தன் இன்று விடுதலை செய்யப்படுகிறார். நேற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது இதற்கான அறிவிப்பை வெளியிட்டார் அந்நாட்டு அதிபர் இம்ரான் கான். அமைதி மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் அபிநந்தனை விடுவிப்பதாக அவர் தெரிவித்திருந்தார். அவரது இந்த முடிவிற்குப் பின்னால் மோடியின் ராஜதந்திரம், போரில் தோல்வி பெறுவோம் என்ற பயம், அணுஆயுதம், பொருளாதாரத் தடை என ஆயிரம் காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இம்ரான் கான் தான் தற்போதைக்கு பாகிஸ்தானின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம். மக்கள் அவர்மீது வைத்திருக்கும் அதே அளவு நம்பிக்கையை, அவரும் நாட்டின்மீது வைத்திருக்கிறார். அதை முன்னிட்டே இந்த முடிவிற்கு அவர் வந்திருக்கிறார்.

abinanthan2பாகிஸ்தான்

அடிப்படைவாதிகள் அதிகம் இருக்கும் நாடுகளில் மதத்தின் பெயரால் தீவிரவாதச் செயல்கள் தவிர்க்க முடியாததாகின்றன. இதற்கு மத்திய கிழக்கு முழுவதும் சான்றுகள் கொட்டிக்கிடக்கின்றன. ஏனெனில் அடிப்படைவாதம் ஒற்றையாகவே சிந்திக்கும். பிறருடைய கருத்து, பிறருடைய மதம், பிறருடைய வாழ்வு குறித்தெல்லாம் கவலைப்படுவது இல்லை. இதுதான் பாகிஸ்தானின் பிரச்சினையும்.

அடிப்படைவாதிகளை எதிர்த்து அங்கே அரசியல் செய்வதென்பது ஆகாத காரியம். அதனால் தான் உலகளாவிய தீவிரவாத இயக்கங்கள் அங்கே கடைவிரித்திருக்கின்றன. அரசியலமைப்பு, அரசின் கொள்கைகள் என அனைத்திலும் அடிப்படிவாதத்தை ஏற்றுக்கொண்ட நாட்டில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுமோ அதேதான் பாகிஸ்தானிலும் நடைபெற்றிருக்கிறது.

70 ஆண்டுகளாக ஆட்சியை, அரசை தக்கவைக்கும் நோக்கத்தோடு தீவிரவாதிகளை ஆதரித்த பாகிஸ்தானின் அதிபர்கள் கேள்விகேட்க முடியாத அளவிற்கு அந்த இயக்கங்கள் அங்கே வேரூன்றிவிட்டன. அப்படியே யாராவது அவர்களை எதிர்த்தால் பூட்டோவின் கதிதான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஐந்தில் வளைப்பதை விட்டுவிட்டு 70 ல் தடுமாறுகிறது பாகிஸ்தான்.

சிக்கலுக்கான காரணம்

இந்தியாவோடு நட்புறவு என்று சொல்லிய அனைவரையும் அதிபர் பதவியில் அமர்த்தி அழகுபார்த்திருக்கிறார்கள் அம்மக்கள். ஆனால் அவர்களிடம் பதவி வந்தவுடன் வேதாளம் முருங்கைமரம் ஏறும். மீண்டும் தாக்குதல். பதற்றம். அடுத்த தேர்தல். இதுதான் அங்கே நடைமுறை. சிறந்த உதாரணம் நவாஸ் ஷெரீப்.

ஒருவேளை உண்மையாகவே அமைதி விரும்பியாக இருப்பதாகத் தெரிந்தால் அந்நாட்டில் ராணுவம் என ஒன்று இருக்கிறதல்லவா? அது ஆட்சியைப் பிடித்துக்கொள்ளும். அங்கே ராணுவமும், தீவிரவாத இயக்கங்களும் ஒன்றுவிட்ட அண்ணன் தம்பிகள். எனவே அங்கே அதிபர் என்பவர் ஒரே நேரத்தில் இருவேறு வேகத்தில் ஓடும் குதிரையின் மேல் பயணிப்பவராகவே இருந்திருக்கிறார்.

எளிதாகச் சொன்னால் இந்தியாவைப் பகைத்துக்கொண்டால் தேர்தலில் மக்கள் பதிலடி தருவார்கள். இந்தியாவோடு நட்புறவு மேற்கொண்டால் தீவிரவாத இயக்கங்களும், ராணுவமும் சும்மா விடாது. இதில் தான் பாகிஸ்தான் அரசியல் வரலாறு தட்டுத்தடுமாறி பயணித்திருக்கிறது.

இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னால் பல சிக்கல்கள் குவிந்து கிடக்கின்றன. போர் என ஒன்றுவரும் பட்சத்தில் நிச்சயம் இந்தியாதான் வெற்றிபெறும். ஏனெனில் இந்தியாவின் ராணுவபலம் அசாதாரணமானது. இன்று இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்தில் ஒரே நாளில் போரை இந்தியா முடிவிற்குக் கொண்டுவந்துவிடும்.

தப்புக் கணக்குப் போடுவதால் ஏற்படும் ஆபத்து அதிகம். குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஆயுதங்கள் உள்ள நாடுகளில், பதற்ற நிலை அதிகரித்தால், நிலைமை கை மீறிப் போகும். நானோ, மோடியோ கூட அந்த நிலையில் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, அமர்ந்து பேசுவதன் மூலம் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ளவேண்டும் –  இம்ரான் கான்

கடந்த 70 வருடங்களில் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களால் கடும் வீழ்ச்சியினை மட்டுமே சந்தித்திருக்கிறது. உட்கட்டமைப்பு, பொருளாதாரம், ஏற்றுமதி, இறக்குமதி என எதிலும் அந்நாட்டு இந்தியாவோடு போட்டிபோட முடியாது. நாலா புறமும் கடன் சுமை வேறு. இதெல்லாம் இம்ரானுக்கும் தெரிந்திருக்கும். தெரிந்திருக்கிறது.

imran khan
Credit: India Today

அவருடைய இந்த அமைதி முடிவு இரண்டு விஷங்களை முன்வைக்கிறது. ஒன்று தீவிரவாதிகளால் அல்லது தீவிரவாதத்தால் நம்மால் பெரும் பயனை அடையமுடியாது. அடுத்தது வளர்ச்சி. வேலைவாய்ப்பின்மை, மருத்துவ பற்றாக்குறை என அதளபாதாளத்தில் தொங்கும் பாகிஸ்தானின் முன்னேற்றத்தை சீராக்க முயற்சிக்கிறார் இம்ரான்.

உலக நாடுகள் பலவற்றோடும் பாகிஸ்தான் பல ஒப்பந்தங்களை நிறுவிவருகிறது. இந்நிலையில் இந்தியாவுடனான போர் பாகிஸ்தானின் இமேஜை காலி செய்துவிடும். ஏனெனில் இந்தியாவைப் பகைத்துக்கொள்ள எந்த நாடும் விரும்பாது. இப்படி ஒரு சூழ்நிலையில் எப்படி காய் நகர்த்தினால் பாகிஸ்தானைப் பற்றிய நல்லெண்ணம் ஏற்படுமோ? அப்படி அரசியல் காய்களை கச்சிதமாக நகர்த்தியிருக்கிறார் இம்ரான். இதுவரை பாகிஸ்தானின் அதிபர்களாக இருந்த அனைவரும் சறுக்கிய இடத்தில் இம்ரான் நிமிர்ந்திருக்கிறார்.

குற்றச்சாட்டுக்கள்

இம்ரானின் இந்த நடவடிக்கையால் முழுவதும் அமைதி ஏற்பட வாய்ப்பில்லைதான். இப்பிரச்சினையில் நிரந்தரத்தீர்வு என்பது தீவிரவாத இயக்கங்களுக்கு அளிக்கும் ஆதரவை அந்நாடு மொத்தமாக நிறுத்துவதுதான். அதேபோல் எல்லைதாண்டிய பயங்கரவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இதையெல்லாம் துப்பாக்கி முனைகளால் ஒருபோதும் செய்யமுடியாது. சமகால வரலாற்றில் பேச்சுவார்த்தைகள் தான் சிக்கலான பல விஷயங்களுக்குத் தீர்வுகளைத் தந்திருக்கின்றன. அதேசமயம் இம்மாதிரியான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளுக்கு நாம் வரவேற்பு அளித்தே ஆகவேண்டும். எனில் போர் என்பது ஒருபோதும் தீர்வைத் தராது. அவற்றால் எப்போதும் முற்றுப்புள்ளியை வழங்க இயலாது. இதற்கு மனிதகுல வரலாறு முழுவதும் சான்றுகள் இருக்கின்றன.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!