இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி முன்னேற்றம் குறித்துப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியதால் ‘நவீன இந்தியாவின் சிற்பி’ எனக் கருதப்படுகிறார் இந்தியாவின் முதல் பிரதம மந்திரியான ஜவகர்லால் நேரு. இவரது பிறந்தநாள் தான் நாடு முழுவதும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் நலன் விரும்பி
‘இந்தியாவின் முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது’ என்பதை நன்கு உணர்ந்திருந்தார் நேரு!

இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய மேலாண்மைக் கழகங்கள், தேசிய தொழில்நுட்பக் கழகங்கள், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம போன்ற அரசாங்க உயர் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தினார். இலவசக் கட்டாயக் கல்வித் திட்டத்தை செயல்படுத்தி ஆயிரக்கணக்கான பள்ளிகளைக் கட்டினார்.
குழந்தைகள் மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்தவர் நேரு. அதனால் அவரை குழந்தைகள் செல்லமாக நேரு மாமா என அழைத்தனர். இதனால் அவரின் நினைவாகவும், அவரின் விருப்பத்தின் பெயரிலும் அவரின் பிறந்த நாள் தினம் குழந்தைகள் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டுகிறது.
என்ன முக்கியத்துவம் ?
முன்னர் உலகின் பல நாடுகளில் வெவ்வேறு நாட்களில் குழந்தைகள் தினம் கடைப்பிடித்து வந்தனர்.
அப்படி இருக்க உலக நாடுகள் அனைத்தும் ஒரே நாளில் குழந்தைகளின் பாதுகாப்பையும், நலனையும் மேம்படுத்த ஒரு தினத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக நவம்பர் 20 – ஆம் தேதியைக் குழந்தைகள் தினமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அந்த தேதியைத் தான் குழந்தைகள் தினமாக உலக நாடுகள் கடைப்பிடிக்கின்றன. ஆனால், இந்தியாவில் மட்டும் நேரு பிறந்தநாளான நவம்பர் 14 குழந்தைகள் தினமாகக் கொண்டாடப் படுகிறது.
குழந்தைகள் தினப் பரிசு
காஷ்மீரின் கம்பளத் தொழிற்சாலைகள் முதல் சிவகாசி தீப்பெட்டித் தொழிற்சாலைகள் வரை தொழிலாளர்களாய்ச் சிதிலமடையும் மழலைகளைப் பிடித்து வந்து அவர்கள் கைகளில் பென்சில்களைக் கொடுங்கள் பிறகு கொண்டாடலாம் குழந்தைகள் தினம்.
என்கிறார் ஒரு புதுக் கவிஞர். உண்மை தானே. யுனிசெப் (UNICEF) அறிக்கையின் படி இந்தியாவில் மட்டும் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் 70 மில்லியன் ஆகும். ஒவ்வொரு வருடமும் 5 லட்சம் குழந்தைகள் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகின்றனர். நாடு முழுவதும் 70 ஆயிரம் முதல் 1 லட்சம் குழந்தைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் படுகின்றனர். அவர்களும் குழந்தைகள் தான். குழந்தைகள் தினக் கொண்டாட்டங்கள் அவர்களுக்குமானது தான். வறுமையும், பசியும் குழந்தைகளை அண்ட விடாமல் காத்து. நாடு முழுவதும் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் பாரபட்சமின்றி அடிப்படைக் கல்வியைப் பரிசளிப்பதே இந்தக் குழந்தைகள் தினத்தில் நாடு அவர்களுக்குத் தரும் ஆகச் சிறந்த பரிசாகும். கண்டிப்பாக நேருவும் அதைத் தான் விரும்புவார்.