இன்கம்டாக்ஸ் ரெய்டு என்பதெல்லாம் திரைப்படங்களில் பிரபலமாக ஹிட்டடிக்கும் சப்ஜெக்ட். வரிசையாக கார்களில் வந்திறங்கி சுவற்றை சுத்தியலால் உடைத்து அதனுள்ளே இருந்து கட்டுக்கட்டாக பணம்/நகை/பத்திரங்களை எடுப்பார்கள். ஒவ்வொரு படத்திலும் இந்த பொருட்கள் இருக்கும் இடம்தான் மாறும். உதா: நீச்சல் தொட்டி, கழிவு நீர்த் தொட்டி, கிணறு, பண்ணை வீடு, காலி சிலிண்டர். எக்ஸட்ரா.

ஆனால் உண்மையில் இப்படித்தான் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகிறார்களா? என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன? பார்ப்போம்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
வருமான வரித்துறை
இந்திய வருமான வரித்துறையானது நிதி அமைச்சக வருவாய்த் துறையின் நேரடி வரிகள் வாரியத்தின் கீழ் இயங்குகிறது. கணக்கெடுத்தல், சோதனை, பறிமுதல் ஆகிய வேலைகளை வருமான வரித்துறை செய்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
ஒரு நிதியாண்டில் ஒரு தனிநபர் ஈட்டிய மொத்த வருவாய்க்கு ஏற்ப வருமான வரி நிர்ணயக்கப்பட்டுள்ளது. வருமானவரி செலுத்துவதில் 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களுக்கும், 80 வயது நிரம்பிய மிக மூத்த குடிமக்களுக்கும் வருமான வரி செலுத்துவதில் சிறிது சலுகை காட்டப்பட்டுள்ளது.

இதில் தவறுபவர்கள் வருமான வரித்துறையால் கண்காணிக்கப்படுவர். தகுந்த நேரத்தில் அவருடைய வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்படும். வருமானத்திற்கு அதிகமாக இருக்கும் பணம்/நகை/சொத்துக்களை வருமான வரித்துறை பறிமுதல் செய்யும்.
எப்படி தகவல் பெறுகிறார்கள்?
பெரும்பாலும் தகவல்கள் வதந்திகள் மூலமாகவே கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக ஒரு தொழிலதிபரின் எதிரி அவரைப்பற்றிய தகவல்களை கண்காணித்து வருவார். தேவைப்படும் நேரத்தில் யார் மூலமாகவாவது வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அந்தத் தகவலை அளிப்பார். இப்படி அக்கம் பக்கம் இருப்போர், எதிரியான உறவுக்காரர்கள் வழியே தகவல்கள் அதிகம் கிடைக்கும்.
அதேபோல் கருப்புப்பணம் பதுக்கி வைத்தல், மோசடி ஆகிவை குறித்து துல்லியமான தகவல் அளிப்பவருக்கு ரூ.1 கோடி வரை வருமான வரித்துறை பரிசு அளிக்கும். தகவல் அளிப்பவர்களின் விவரம். ரகசியமாக வைக்கப்படும். இதுவே வெளிநாடுகளில் இருக்கும் கருப்புப்பணம் பற்றிய தகவல்களை தெரிவித்தால் ரூ.5 கோடி வரை பரிசு அளிக்கப்படும்.
கருப்பு பணத்தை கண்டுபிடிப்பது, வரி ஏய்ப்பை தடுப்பது ஆகியவற்றில் பொது மக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ‘பினாமி பரிமாற்ற தகவல் அளிப்போர் பரிசுத் சட்டம்-2018’ என்பதை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியது.

அதே நேரத்தில் நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து வருமான வரித்துறை தகவல்களைப் பெறுகிறது. மேலும் வங்கிகளிடம் உள்ள தகவல்களின் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
எப்போது ரெய்டு?
ரகசியத் தகவல்களை தெரிவிக்கும் நபர் மூலமாகவோ, மத்திய புலனாய்வுத்துறை மூலமாகவோ ஒரு குறிப்பிட்ட நபரைப்பற்றிய சந்தேகத்திற்கு இடமான தகவல்கள் வரும்போது அவை குறித்து வைக்கப்படும். அன்று முதல் அவருக்கு சனி பகவானின் பார்வை ஆரம்பிக்கும்.
அதிலிருந்து அவர் பற்றிய அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படும். வர்த்தகம், வெளிநாட்டு பயணம் ஏன் அவர் செல்லும் திருமணங்கள் கூட கண்காணிக்கப்படும். சந்தேகம் வலுப்பெறும் பட்சத்தில் முகூர்த்த தேதி குறிக்கப்படும். யாரை சோதனை செய்யப்போகிறோம்? எப்போது என்ற தகவல்களைக் கொண்ட தாளை உறையினுள் போட்டு சீலிட்டு கொடுப்பார் தலைமை வருமான வரித்துறை அதிகாரி. இது சோதனை நடைபெறும் அன்றுதான் நடக்கும்.
அதாவது யார் வீட்டில் சோதனை என்பது தலைமை அதிகாரிக்கு மட்டுமே தெரியும். சோதனை நடைபெறும் அன்றுதான் அந்தத் துறையில் உள்ள மற்ற அதிகாரிகளுக்குத் தெரியவரும்.
சோதனை எப்படி நடக்கும்?
குறிப்பிட்ட நபரை வருமான வரித்துறை நெருங்குகிறது என்றால், அவர் சம்பத்தப்பட்ட அனைத்து அலுவலகங்கள், வீடுகள் அனைத்திலும் ஒரே நேரத்தில் அதிகாரிகள் சோதனையிடுவர். சோதனை நடைபெறும் நேரத்தில் வீட்டை விட்டோ, அலுவலகத்தை விட்டோ யாரும் வெளியில் செல்லக்கூடாது. அதேபோல் உள்ளேயும் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அலைபேசிகள், தொலைபேசி இணைப்புகள் ஆகியவை தற்காலிகமாக துண்டிக்கப்படும். சில நேரங்களில் இந்த சோதனையானது நாட்கணக்கில் நீடிக்கும்.

குற்றம் சாட்டப்பட்ட நபரின் வீடு/அலுவலகம்/தொழிற்சாலை ஆகியவற்றின் அடிப்படையில் வருமான வரித்துறை சார்பில் சோதனையிடச் செல்லும் அதிகாரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
பறிமுதல்
வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட பணம்/நகைகள்/ பத்திரங்களின் நகல்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகம் மூலம் கிடைத்த வருவாய் பற்றிய தகவல்கள் ஆகியவற்றை அறிக்கையாகத் தயாரித்து சம்பத்தபட்டவரிடம் கையெழுத்து வாங்கிக்கொள்வதோடு சோதனை நிறைவுபெறும்.