பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், நீதிக்கான பாகிஸ்தானிய இயக்கத்தின் (பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப்) தலைவருமான இம்ரான் கான் சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை (115) கைப்பற்றி அந்நாட்டின் அதிபராக பதவியேற்க இருக்கிறார்.

பாகிஸ்தான் அதிபர் தேர்தல்
தேர்தல் பிரச்சாரத்தின் போது இம்ரான் கான் இந்தியாவுடனான நட்பை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்வேன் என்றும் நரேந்திர மோடி போல நல்லாட்சி தருவேன் என்றும் கூறி வந்தார். இது இந்திய – பாகிஸ்தானிய மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. வரலாற்றின் பல இடங்களில் கசப்பான அனுபவங்களை சந்தித்திருக்கும் இந்திய – பாகிஸ்தானிய மக்கள் இம்ரான் கானை நம்பிக்கையின் புது ஒளிக்கீற்றாக பார்க்கத் தொடங்கியிருக்கின்றனர்.

கடந்த ஜூலை 25 தேதி, பாகிஸ்தானின் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. பாகிஸ்தானில் உள்ள 342தொகுதிகளில் , 70 தொகுதிகள் பெண்கள்மற்றும் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், மீதமுள்ள 272 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில் இம்ரான் கானின், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி 115 தொகுதிகளைக் கைப்பற்றியது.
இந்தியாவுடனான நட்பை பலப்படுத்த வேண்டும் என ஏற்கனவே பலமுறை மேடைகளில் பேசிய இம்ரான் கான், பிரதமரான பிறகு எவ்விதமான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என இரு நாடுகளும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றன.
பயங்கரவாதத்தை விரும்பாத பாகிஸ்தான் மக்கள்
சுதந்திரத்தின் போது, இந்திய- பாகிஸ்தான் பிரிவினையின் காரணமாக எழுந்த வன்முறை சம்பவங்கள் இரு நாட்டின் மக்களையும் பெருமளவில் பாதித்தன. பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் மனதில் ஆறாத வடுவாக மாறிப் போன வரலாறு அது. அதைத் தொடர்ந்து 1965, 1971,1999 ஆகிய வருடங்களில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர் போர்கள் நடைபெற்றன. இதற்கிடையே எல்லையோர ஊடுருவல், தீவிரவாதிகளின் தாக்குதல் போன்ற விடயங்களால் இந்திய பாகிஸ்தான் உறவு அவ்வப்போது சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானிய மக்களைப் பொறுத்தவரை இந்தியாவுடன் நட்பு கொள்ளவே விரும்புகிறார்கள்.
ஆனால், பாகிஸ்தானிய மக்களைப் பொறுத்தவரை இந்தியாவுடன் நட்பு கொள்ளவே விரும்புகிறார்கள். சென்ற முறை முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரிப் வெற்றி பெற்ற தேர்தலின் போது ,”இந்தியாவுடன் பகைமையை மறந்து நட்பு பாராட்டுவோம் ” என தெரிவித்ததும், அதன் பயனாக அவர் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதும் நாம் அறிந்ததே. இதன் மூலம் இரு நாட்டு மக்களும் நட்புறவையே எதிர்பார்க்கின்றனர் என்பது தெளிவாகிறது.

பிற நாடுகளில், அரசியல் லாபங்களுக்காக பதற்றத்தை விளைவிக்கும் ஆட்சியாளர்களை மக்கள் எப்போதும் நிராகரித்திருக்கிறார்கள். அதைப் போலவே தான் பாகிஸ்தானிலும் இப்போது போர்களை வெறுக்கும் மக்களின் ஆதரவினால் தான் இம்ரான் கான் அதிபராயிருக்கிறார்.
தீவிரவாத இயக்கங்களும் தங்களது வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தியது.
மும்பை குண்டுவெடிப்பை நிகழ்த்திய ஜமாத் உத் தவா உள்ளிட்ட பல தீவிரவாத இயக்கங்களும் தங்களது வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தியது. லாகூரின் அருகே போட்டியிட்ட ஹபீஸ் சயித்தின் மகன் உட்பட தீவிரவாத பின்புலம் கொண்ட ஒருவர் கூட தேர்தலில் வெற்றிபெறவில்லை. இதனால் பாகிஸ்தான் மக்கள் பயங்கரவாதிகளை ஓரங்கட்டியிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
பதவியேற்பு விழாவில் மோடிக்கு அழைப்பு?
கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் முடிந்தவுடன் ஆகஸ்ட் 11 ல் இம்ரான் கான் பதவியேற்பார் என கூறப்படுகிறது. பதவியேற்பு விழாவில் அண்டை நாடுகளின் பிரதமர்களை அழைக்கவிருப்பதாக தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சிக்கு அறிவித்திருந்தது. இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கர், கபில்தேவ் நவ்ஜோத் சிங் சித்து மற்றும் இந்தி திரைப்பட நடிகர்களான அமீர் கான் போன்றோருக்கும் அக்கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2014ல் நடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்காக அப்போதைய பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரிப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புது நம்பிக்கையில் மக்கள்
சுதந்திரம் வாங்கிய காலந்தொட்டு இன்று வரை பல கசப்பான அனுபவங்களை சந்தித்திருக்கும் இந்திய பாகிஸ்தான் மக்கள் தங்கள் நட்பின் புது அத்தியாயம் இம்ரான் கானின் மூலம் எழுதப்படும் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அதற்கு சாட்சியாக இந்தியாவுடன் நட்பை பேணுவதாக வாக்குறுதி அளித்த கட்சிகளையே அம்மக்கள் தேர்தல்களில் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
காஷ்மீர் பிரச்சனை எல்லை தாண்டிய பயங்கரவாதம், தீவிரவாதிகளின் ஊடுருவல்கள் போன்ற விஷயங்களில் இம்ரான் கான் எடுக்கப்போகும் முடிவுகள் என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மிகச்சிறந்த ஆல்ரவுண்டரான இம்ரானின் அரசியல் இன்னிங்ஸ் பற்றிய விவரங்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் தெரிந்துவிடும்.