சொத்து வரி என்றால் என்ன?
சொத்து வரி: தனிநபரின் அல்லது நிறுவனத்தின் சொத்துக்கள் மீது விதிக்கப்படும் வரி. இவ்வரியானது அச்சொத்தின் மீது ஒவ்வொரு வருடமும் விதிக்கப்படும். தங்களுக்கென சொந்தமாக ஒரு வீடோ, நிலமோ இருக்கிறது என்பது ஒரு பெரு மகிழ்ச்சி. ஆனால், வீடு வாங்குவதற்கான செயல்முறை என்பது சற்றே பெரியதாகும். அதிலும் எந்த சட்ட சிக்கலும் இல்லாமல் பதிவு செய்ய வேண்டும். தகுந்த ஆவணங்களை சரி பார்த்து பதிவை முடிப்பது என்பது நாம் மிகவும் விழிப்புடனும் கவனமுடனும் செய்ய வேண்டிய ஒரு விஷயம்.
சட்ட ரீதியாக முடிக்கப்பட வேண்டிய ஆவணங்களில் சொத்து வரி தொடர்பான குறிப்பேடுகளை முடிப்பது மிகப்பெரிய சவால். நீங்கள் விற்பனை பத்திரம் அல்லது கட்டா சான்றிதழ் பற்றி தெரிந்திருக்கக்கூடும். ஆனால் சொத்து வரி ஆவணங்களிலும் பெயர் மாற்றம் செய்வது மிக அவசியம்.
நகராட்சி அலுவலர்களால் பராமரிக்கப்படும் சொத்து வரி பதிவுகளில் உரிமையாளரின் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். அப்படி செய்யப்படாவிட்டால், வரி ரசீதுகள் முந்தைய உரிமையாளர் பெயரிலேயே வழங்கப்படும். வரி செலுத்தாவிட்டால் அதிக அபராதம் மட்டுமின்றி இக்கட்டான சூழ்நிலையையும் உருவாக்கும். மிகவும் முக்கியமாக சொத்துவரி ஆவணங்களில் உங்கள் பெயரை மாற்றிக் கொள்ளும்போது மிகவும் முக்கியமாக நீங்கள் சரிபார்த்துக் கொள்ளவேண்டிவற்றை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
ஒப்புதல் செயல்முறை
அரசு ஆவணங்கள் என்றாலே நமக்கு ஒரு தனிப்பட்ட கவனம் தேவை. நம்மிடம் எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தால், சொத்து வரி ஆவணம் வாங்குவது மிகவும் எளிதானது. பெயர் மாற்றத்திற்கு, கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் முக்கியம்:
- வீட்டுவசதி சங்கத்திடம் இருந்து ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழ்.
- கடைசியாக கட்டிய வரி ரசீது.
- விற்பனை பரிவர்த்தனை பத்திரத்தின் சான்றளிக்கப்பட்ட நகல்.
- பூர்த்தி செய்யப்பட்டு கையொப்பமிட்ட விண்ணப்பம்.
மேற்குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களையும் வருவாய் ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணம் மீதான ஒப்புதல் பெற 15 முதல் 30 நாட்கள் வரை ஆகும்.
சொத்து மாற்றியமைப்பதன் மூலம் அதற்கான சொத்து வரியை புதிய உரிமையாளரிடம் இருந்து அரசு பெற்றுக்கொள்ளும். பரம்பரை சொத்து அல்லது வாங்கப்பட்ட சொத்து எதுவாகினும் சொத்தின் மீதான உரிமையை நிலைநாட்ட இந்த மாற்றியமைத்தல் அவசியம். இந்த முறையில், நீதித்துறை முத்திரையோடு விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். சொத்து பற்றிய விவரங்கள் அடங்கிய இவ்விண்ணப்பத்தை உங்கள் பகுதி தாசில்தாரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த முறை வேறுபட்டாலும், ஆட்சேபனையில்லா சான்றிதழ் (NOC) மிக முக்கியமானது. முந்தைய உரிமையாளர் இறந்துவிட்டால் அதற்கான இறப்பு சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும்.
தவிர்க்க முடியாத ஒரு விஷயம் இந்த வரி. நாம் அரசாங்க மற்றும் சட்ட விதிமுறைகளை கடைபிடித்தால் பின்னாளில் பல சிக்கல்களை தவிர்க்க உதவும். சொத்து என்று வரும் பொழுது அது சார்ந்த சட்ட விவரங்களையும் நுணுக்கங்களையும் கொஞ்சம் தெரிந்து கொள்வது உதவிகரமாக இருக்கும்.
சொத்து வரி செலுத்தும் முறை
- உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகத்தில் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் அமைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சொத்து வரி செலுத்தும் இடங்களில் பணமாகவோ அல்லது பணவிடையாகவோ (Money Order) வரியை செலுத்தலாம்.
- வெளியூர்களிலிலிருந்து அனுப்பப்படும் காசோலைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
- சொத்து வரிக்காகச் செலுத்தும் காசோலைக்குரிய பணம் குறிப்பிட்ட வங்கியில் செலுத்தப்பட்டு தகுந்த பணமின்றி திரும்பினால் திருப்பி அனுப்பப்பட்ட காசோலை ஒன்றிற்கு ரூபாய் ஐம்பது அபராதத் தொகையாக வசூலிக்கப்படும்.
- குறிப்பிட்ட உள்ளாட்சி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டால் ஒழிய வங்கி வாயிலாக எந்தத் தொகையும் செலுத்தக்கூடாது.
- ஒவ்வொரு அரை ஆண்டிற்கும் தனித்தனியாக கேட்பு அறிக்கை அளிக்கப்பட மாட்டாது.