துருக்கி , அர்ஜெண்டினா போன்ற நாணயங்கள் மோசமான நிலையினை அடைந்ததால் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப் பெற்ற நிலையில் இந்திய ரூபாய் மதிப்பும் 71.72 ரூபாயாகச் சரிந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, கடந்த ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட 10 சதவீதம் வரை சரிந்துள்ள நிலையில் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் இது மிகப் பெரிய தாக்கத்தினை இது ஏற்படுத்தி வருகிறது.
எனவே, இந்த ரூபாய் மதிப்புச் சரிவு சாமானிய மக்களை எப்படி எல்லாம் பாதிக்கும் என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
பெட்ரோல் & டீசல் விலை
ரூபாய் மதிப்பு சரியும் போது நாம் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனை இது தான். அதிக விலை கொடுத்து நாடு கச்சா எண்ணெய் வாங்க வேண்டும். இதனால் சில்லறைச் சந்தையிலும் பெட்ரோல் மற்றும் டீசல் வரலாறு காணாத உச்சத்தினைத் தொட்டுள்ளது. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, லிட்டர் 82.41 ரூபாய் என்றும், டீசல் விலை, லிட்டர் 75.39 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது சாமானிய மக்கள் சுமக்க முடியா சுமை ஆகும்.

ரூபாய் மதிப்பு சரிந்து பெட்ரோல் விலை அதிகரிக்கும் போது நாட்டின் பணவீக்கமும் அதிகரிக்கும். இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் சாலை மார்க்கமாகவே கொண்டு செல்லப்படுகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் போது அத்தியாவசியப் பொருட்கள் விலையும் உயரும். அப்போது பணவீக்கம் அதிகரிக்கும்.
வட்டி விகிதங்கள் உயர்வு
விலைவாசிகள் உயரும் போது, பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்கள் உயர்த்தப்படும். இதனால் நிரந்தர வைப்புத் தொகை போன்ற திட்டங்களின் மீதான லாபங்கள் உயர்ந்தாலும், கடன் வாங்கியவர்களுக்கு வட்டி விகிதம் உயர்வால் சிக்கல் வரும். அண்மையில் எஸ்பிஐ (SBI) தங்களது கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ள நிலையில் பிற வங்கிகளும் வட்டி விகிதத்தினை உயர்த்த வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.
வெளிநாட்டுப் படிப்பு & பயணம்
வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்குச் செய்யப்படும் செலவுகள் அதிகரிக்கும். சென்ற ஆண்டு வரை 6.6 லட்சம் செலவு செய்திருந்தால், இனி 7.1 லட்சம் ரூபாயாகக் கட்டணங்கள் அதிகரிக்கும்.
அதே போன்று வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் போது நாணய மதிப்பு சரிவால் எதிர்பார்த்ததை விடக் கூடுதல் செலவுகள் ஏற்படும்.

பொருளாதாரச் சரிவு
ரூபாய் மதிப்பு உயர்வால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து பொருளாதாரத்திற்குப் பாதிப்பினை ஏற்படுத்தும். 2018-ம் ஆண்டுப் பொருளாதாரக் கணக்கெடுப்பில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 10 டாலர் வரை விலை உயர்ந்தால் 0.2 முதல் 0.3 சதவீதம் வரை பொருளாதாரத்தினைப் பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர். தற்போது 9 டாலர் வரை கச்சா எண்ணெய் விலை நடப்பு ஆண்டில் விலை உயர்ந்துள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையில் முதலீடு செய்துள்ள பணத்தினைத் திரும்பப் பெறுவார்கள். ஒரு நாட்டின் ரூபாய் மதிப்பு சரியும் போது எந்த ஒரு முதலீட்டாளரும் அங்குள்ள சந்தையில் முதலீடு செய்வதை விரும்பமாட்டார்கள்.
அந்நிய செலாவணி
அதே சமயம் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் தாங்கள் சேமித்த பணத்தினை இந்தியாவிற்கு அனுப்பும் போது அவரைச் சார்ந்தவர்களுக்குக் கூடுதல் பணம் கிடைக்கும். அந்நிய செலாவணி உயரும் என்பது ஒரு நன்மை ஆகும்.
இறக்குமதி – ஏற்றுமதி
ரூபாய் மதிப்பு சரியும் போது இறக்குமதி பாதிக்கப்படும் அதே நேரம் ஏற்றுமதி மூலம் வணிகர்கள் அதிக வருவாயினை ஈட்ட முடியும். இது போன்ற ரூபாய் மதிப்பு சரிந்த சூழலில் இந்திய பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.