[சட்டம் தெளிவோம்]: அத்தியாயம் 10 – காவல் நிலையத்தில் புகார் கொடுத்தல்

Date:

சட்டத்தில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் சாதாரண பொதுமக்களின் வாழ்வில் அன்றாடம் குறுக்கிடும் சட்டங்கள் கிரிமினல் சட்டம் என்று கூறப்படும் குற்றவியல் சட்டங்களும், சிவில் சட்டம் என்று கூறப்படும் உரிமையியல் சட்டங்களுமே! சிவில் சட்டப் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்குத் தேவையான கால அவகாசம் ஓரளவுக்காவது வழங்கப்படுகிறது. ஆனால், குற்றவியல் சட்டப்பிரச்சனைகளை எதிர்கொள்வதற்குப் பெரும்பாலான நேரங்களில் கால அவகாசம் இருக்காது. இந்த சிவில் மற்றும் கிரிமினல் குற்றங்களைப் பற்றி நாம் சென்ற அத்தியாயங்களிலேயே பார்த்தோம்.

ஒரு குற்ற நிகழ்வில் நாம் பாதிக்கப்படலாம். அப்போது அந்த குற்ற நிகழ்வை ஏற்படுத்தியவர் மீது புகார் அளிப்பது எப்படி? அந்தப் புகாரை நிரூபிப்பது எப்படி? குற்றவாளிக்குத் தண்டனை வாங்கித் தருவது எப்படி? நமது இழப்பிற்கான இழப்பீட்டைப் பெறுவது எப்படி? போன்ற பல்வேறு கேள்விகளுக்கான விடைகள் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

imagesஅதேபோல ஒரு குற்ற நிகழ்வில் நாமும் உண்மையாகவோ, பொய்யாகவோ குற்றம் சாட்டப்படலாம். அவ்வாறு நம்மீது குற்றவியல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் போது நமக்கான கடமைகள் என்ன? உரிமைகள் என்ன? என்பன போன்ற பல கேள்விகள் உள்ளன. பிரச்சனைகள் வந்து நம் வீட்டுக் கதவை தட்டிய பின்னர் அதற்கான தீர்வைத் தேடுவதை விட பிரச்சனைகளைத் தவிர்த்து வாழ்வதே புத்திசாலித்தனமானது. அதையும் மீறி பிரச்சனைகள் வந்துவிட்டால் அதை எதிர்கொள்வதற்கான திறனை நாம் பெற வேண்டும்.

புகார் பதிவு செய்யும் நபர் வசிக்குமிடம், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள எதிரி வசிக்குமிடம், குற்றச் சம்பவம் நடந்த இடம் ஆகிய ஏதாவது ஒரு இடத்தில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.

ஒரு குற்ற நிகழ்வு குறித்து காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படும் புகார் தான் அந்தக் குற்ற நிகழ்வு குறித்த விசாரணையின் துவக்கப் புள்ளியாகும்.

காவல் நிலையத்தில் புகார்

சட்டரீதியாக ஒரு குற்ற நிகழ்வு குறித்து எவ்வகையிலாவது தகவல் அறியும் காவல்துறை அதிகாரி ஒருவர், அந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால், நடைமுறையில் கொலை போன்ற கொடுங்குற்றங்களைத் தவிர மற்ற குற்ற நிகழ்வுகளில் தாமாகவே முன்வந்து நடவடிக்கை மேற்கொள்ளக் காவல்துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டுவது இல்லை.

எனவே, குறிப்பிட்ட ஒரு குற்ற நிகழ்வால் பாதிக்கப்படும் ஒருவர் அல்லது அவர் சார்பில் வேறொருவர் அந்த குற்ற நிகழ்வு குறித்த புகாரை காவல்நிலையத்தில் பதிவு செய்யலாம்.

புகார் பதிவு செய்யும் நபர் வசிக்குமிடம், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள எதிரி வசிக்குமிடம், குற்றச் சம்பவம் நடந்த இடம் ஆகிய ஏதாவது ஒரு இடத்தில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.

புகாரில் குறிப்பிட வேண்டிய தகவல்கள்

புகார் மனுவில், மனுதாரரின் பெயர், வயது, தந்தையார் அல்லது கணவர் பெயர், முழு முகவரி, தொடர்புக்கான தொலைபேசி எண் ஆகியவை முழுமையாக தரப்பட வேண்டும். பின்னர் புகார் மனுவை எந்த காவல்நிலையத்தி்ல் பதிவு செய்கிறோமோ அந்த காவல்நிலைய அதிகாரியை பெறுநராக குறிப்பிட வேண்டும். காவல் நிலையத்தில் பல படி நிலைகளில் அதிகாரிகள் இருந்தாலும், குற்ற நிகழ்வுகளில் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை ஆய்வாளர் அல்லது துணை ஆய்வாளர் மட்டுமே அந்த புகாரைப் பரிசீலித்து முதல் தகவல் அறிக்கை தயாரிக்க முடியும். (ஒரு வேளை காவல்துறை ஆய்வாளர் அந்தப் புகாரை பதிவு செய்ய மறுத்தால் உயர் அதிகாரிகளை அணுகலாம். அதைப் பிறகு பார்ப்போம்)

குற்ற நிகழ்வு நடந்த இடம், நேரம் ஆகியவற்றுடன் குற்ற நிகழ்வு குறித்த முழுமையான விவரங்கள் புகாரில் இடம் பெற வேண்டும். எதிரி மிகவும் மோசமான வார்த்தைகளில் திட்டியிருந்தால் அதைக் குறிப்பிடுவது நல்லது. அதேபோல கொலை மிரட்டலோ, வேறுவகை மிரட்டலோ விடுத்திருந்தாலும் அதையும் புகாரில் தெரிவிப்பது நல்லது. தாக்குதல் நடந்திருந்தால் அந்தத் தாக்குதல் எவ்வாறு நடந்தது, எந்தப் பொருளால் தாக்குதல் நடந்தது, அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதையும் புகாரில் கூற வேண்டும். திருட்டு, கொள்ளை போன்றவை நடந்திருந்தால் இழப்புகள் குறித்த முழு விவரங்களும் அளிக்கப்பட வேண்டும்.

dc Cover j5muhimq6h6hg90jc740ufmba1 20160704065834.Mediஇவ்வகையான புகார்களில் எதிரிகளை அடையாளம் காட்டுவது, காவல்துறைக்கு மிகவும் உதவியாக இருக்கும். நமக்கு முன்பே தெரிந்த நபர்களை அவர்களுடைய பெயர், முகவரியோடு குறிப்பிட வேண்டும். பெயர் தெரியாத, ஆனால் அடையாளம் காட்டக்கூடிய நபர்களை “பெயர் தெரியாத, நேரில் அடையாளம் காட்டக்கூடிய நபர்” என்று தெளிவாகக் குறிப்பிட வேண்டும். முற்றிலும் அடையாளம் தெரியாத நபர் என்றால் அடையாளம் தெரியாத நபர் என்று சொல்லலாம்.

முதல் தகவல் அறிக்கை

தாக்குதல் போன்ற சம்பவங்களில் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது எந்த அளவு முக்கியமோ, அதே அளவுக்கு காயம் பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதும் முக்கியம். எனவே, அவர்களைத் தாமதிக்காமல் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். காயம் பட்டவர் சார்பாக வேறு எவராவது காவல்நிலையம் சென்று புகார் அளிக்கலாம்.

காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகாரில் கூறப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதால் புகாரில் இயன்ற வரை முழுமையான, உண்மையான தகவல்களை தருவது நல்லது.

புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சம்பவங்களின் இயல்புக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகளைக் காவல்துறையினர் சட்டப்படியாக மேற்கொள்ள வேண்டும். கொடுங்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதில் நடவடிக்கை தொடங்கும். சாதாரண குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணைக்கு வருமாறு அழைப்பதில் நடவடிக்கை தொடங்கும்.

Untitled 10இவ்வாறு காவல்நிலையத்தில் பதிவு செய்யப்படும் புகார்களை விசாரித்து, தகுதியுடைய அனைத்துப் புகார்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை (First Information Report) தயாரிக்க வேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் சொல்கிறது. ஆனால், நிர்வாக வசதி கருதி, தமிழ்நாடு காவல்துறையில் புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை தருவதற்கு முன்பாக சமூக சேவைப் பதிவேட்டில் (Community Service Register) பதிவு செய்து அதற்கான ரசீது வழங்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. இதனை சட்டமோ, அரசாணையோ அங்கீகரிக்கவில்லை என்றாலும் பல நேர்வுகளில் நீதிமன்றம் இந்தமுறையை ஏற்றுக் கொள்கிறது.

புகார் என்பது குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்டவரோ, அவருடைய பிரதிநிதியோ அளிக்கும் தகவல் மட்டுமே. அந்த தகவல்களைத் தாண்டியும் உண்மைகள் இருக்கலாம். அந்த உண்மைகளை விசாரித்து வெளிக்கொணரவேண்டிய கடமை காவல்துறைக்கு இருக்கிறது.

ஆனால், பல்வேறு நேரங்களில் ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி புகார்களை ஏற்றுக்கொள்ள அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல் துறையினர் மறுக்கின்றனர். அவ்வாறு மறுக்கும் சமயங்களில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

1 COMMENT

Comments are closed.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!