காலநிலை மாற்றத்தால் இந்தியா சந்திக்க இருக்கும் சவால்கள்

0
72

அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தத் தவறினால், மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையேயான குழு தங்களது அறிக்கையில் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த காலநிலை மாற்றமானது இந்தியா மற்றும் தெற்காசியப் பகுதியில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைக் குறித்து ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.

வெப்பநிலை உயரும் அபாயம்

உலகில் வெப்பநிலை உயரும் அபாயம் குறித்து அக்குழு வெளியிட்ட அறிக்கை, இது தொடர்பான அபாயங்கள் குறித்து நமக்கு விரிவாக எச்சரிக்கிறது. உலகின் வெப்பநிலை 1.5 செல்சியஸ் உயர்ந்தால், “உணவுப் பற்றாக்குறை, உணவு பொருட்களின் விலை உயர்வு, வாழ்வாதாரம் பாதிப்பு, மோசமான சுகாதார தாக்கங்கள், மற்றும் மக்கள் இடம்பெயர்தல் போன்ற பல விளைவுகளை பின்தங்கிய மக்கள் மிக அதிகமாக சந்திக்கக் கூடும்” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

Credit : LiveMint

இப்படி மோசமாகப் பாதிக்கப்படும் பல நாடுகளில், குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட, சமத்துவம் இல்லாத மற்றும் வறுமை மிகுந்த நாடான இந்தியாவும் ஒன்று. காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் ஏற்படும் விளைவுகள் சமூகரீதியாக மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாகவும் பேரழிவை ஏற்படுத்தலாம்.

இந்தியாவில் பாதிப்பு

இந்தியா நீண்ட கடற்கரை உள்ள நாடு. கடல் மட்டம் உயரும் பட்சத்தில் இங்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும். கடற்கரை ஓரத்தில் வாழும் மக்களும், கடலைச் சார்ந்து வாழும் மக்களும் முதலில் பாதிக்கப்படுவார்கள்.

மற்றொரு பக்கத்தில், கடுமையான வெப்பக்காற்று. 2015 – ஆம் ஆண்டில் வீசிய வெப்பக்காற்றால் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் ஆயிரக்கணக்கானோர் மரணித்தனர். விரைவில் அது போன்ற காற்று தினசரி ஒன்றாகி விடலாம். இதில் கடுமையாக பாதிக்கக்கூடிய நகரங்கள் இந்தியாவில் கொல்கத்தாவும், பாகிஸ்தானில் கராச்சியும்.

2015லிருந்து 2050 வரை புவி வெப்பமாவதை கட்டுப்படுத்த சுமார் 900 பில்லியன் டாலர்கள் செலவாகலாம் என்றும் அந்த அறிக்கையில் கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால், உயரும் வெப்பநிலையைக் குறைப்பதற்கும், பாதிப்புகளைக் குறைப்பதற்கும் இன்னும் அவகாசம் உள்ளது என்றும் கூறியுள்ளது இந்த அறிக்கை. ஆனால், தெற்காசிய நாடுகளில் அப்படிச் செய்வது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் குறைவான வளங்களைக் கொண்டுள்ள இவை பெரும்பாலும் வளரும் நாடுகள்.

2015லிருந்து 2050 வரை புவி வெப்பமாவதை கட்டுப்படுத்த சுமார் 900 பில்லியன் டாலர்கள் செலவாகலாம் என்றும் அந்த அறிக்கையில் கணக்கிடப்பட்டுள்ளது.

புவி வெப்பமயமாவதைக் குறைக்க கார்பன் டை ஆக்ஸைட் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அழுத்தத்தில் இந்தியா இருக்கிறது. ஆனால், அதே நேரத்தில் அதிகரிக்கும் தண்ணீர் பற்றாற்குறை, வறட்சி, வெள்ளம், புயல் மற்றும் பிற இயற்கை பேரழிவுகளுக்கும் இந்தியா தயாராக வேண்டும்.

இந்தியாவில் பேரிடர் மேலாண்மை அமைப்பு ஓரளவிற்கு சிறந்த முறையில் இருக்கிறது என்றாலும், இதனை மேலும் மேம்படுத்த அதற்கு மேலும் வளங்கள் வேண்டும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் இந்தியா பெரிய இலக்குகள் வைத்துள்ளது.

அடுத்து என்ன என்பதே இங்கு எழுப்பப்படும் முக்கிய கேள்வியாகும்.

முன் நிற்கும் சவால்கள்

பருவநிலை அறிக்கை குறித்து மீண்டும் விவாதிக்க சர்வதேச நாடுகள் மீண்டும் அடுத்த இரண்டு மாதங்களில் போலந்தின் கடோவைசில் சந்திக்க உள்ளன. இந்த அறிக்கையில் இருக்கும் பல முக்கிய விஷயங்கள் அங்கு விவாதிக்கப்படும். குறிப்பாகத் தெற்காசிய நாடுகளின் பார்வையில் இருந்து இவை தீவிரமாகப் பார்க்கப்படும்.

தற்போது கார்பன் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை இந்தியா வகுத்து வருகிறது. அதே போல புதுப்பிக்கத்தக்க ஆற்றலையும் இலக்காக வைத்துள்ளது. ஆனால், அதற்கேற்ப இங்கு பல சவால்கள் உள்ளன.

பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றலை சேமிக்கத் தேவை இருக்கும் நிலையில், இதற்கான பேட்டரிகளின் விலை கட்டுப்படியாகும் அளவுக்கு குறையவில்லை.

இரண்டாவதாக, இந்தியாவில் அதிகமான போக்குவரத்துத் தேவை உள்ளது. தற்போது இங்கு சைக்கிள்களும், ரிக்சாக்களும் அதிகமாக உள்ளன. தனிநபர் வருமானம் அதிகரிக்க, பலரும் மோட்டர்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு மாறி வருகிறார்கள். இதனால் அதிகளவிலான கார்பன் வெளியிடப் படலாம்.

இதனைக் கட்டுப்படுத்த இந்தியா மின்சக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த வேண்டும். மேலும், பேருந்து, ரயில் சேவை உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து கட்டமைப்புகளை வலுப்படுத்தி, நீடித்த நிலைத்த போக்குவரத்து முறைக்கு வழிசெய்ய வேண்டும்.

இதற்குத் தேவைப்படும் தொழில்நுட்பம் மற்றும் நிதி எங்கு இருக்கிறது என்பது குறித்த தெளிவு இல்லாததால் இது ஒரு பெரும் சவாலாக இருக்கும்.

2050 – ஆம் ஆண்டிற்குள் கரியமில வாயு வெளியாவதைப் பெருமளவு குறைக்க வேண்டும் என்றால், இதற்கான தீர்வுகள் குறித்து இப்போதிருந்தே யோசிக்க வேண்டும்.

இந்தப் பிரச்சினைக்கான தீர்வுகளைத் தெற்காசிய நாடுகள் தாங்களாகவே தீர்த்துக் கொள்ள முடியாது என்பதினால், இலக்குகளை அடைய சர்வதேச ஒத்துழைப்பு இங்கு மிக முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.