இந்தியாவில் பல ஆண்டுகளாக தன் பாலினச் சேர்க்கைக்குச் சட்டப்படி அங்கீகாரம் அளிக்க வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 377-வது பிரிவு தன் பாலினச் சேர்க்கையைக் குற்றமாகக் கருதுகிறது. இந்நிலையில் அந்தப் பிரிவை எதிர்த்து ஏராளமான போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்து வந்தன. இதனிடையே இன்று உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா, அரசியல் அமைப்புச் சட்டத்தின் 377 – வது பிரிவு செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு
கடந்த 2016-ஆம் ஆண்டு LGBT( Lesbian, Gay, Bisexual, Transgender) அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தனர். அதில் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான சட்டப்பிரிவு 377 ஐ நீக்க வேண்டும். மேலும், தன் பாலினச் சேர்க்கையாளர்களும் தம் விருப்படி வாழ ஆவண செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். கடந்த மாதம் இவ்வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ரோஹின்டன் நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூத் மற்றும் இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அடுத்த மாதம் தீர்ப்பளிக்கப்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை இவ்வழக்கின் தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஓரினச் சேர்க்கையை குற்றமாக்குவது பகுத்தறிவற்றது, மற்றும் சகித்துக் கொள்ள முடியாதது. எனவே, தன் பாலினச் சேர்க்கையைக் குற்றமாக வரையறுக்கும் 377 – வது பிரிவு செல்லாது என அறிவித்தார். மேலும், எல்லாக் குடிமகன்கள் போலவும், தன் பாலினச் சேர்க்கையாளர்களுக்கும் வாழ்வதற்கான உரிமை உள்ளது. அவரவருடைய தனிப்பட்ட உரிமைகளை மதிப்பது தான் உச்சபட்ச மனிதநேயம் என்றும் தன் தீர்ப்பில் அறிவுறுத்தியுள்ளார்.
விடிவு காலம்

காலங்காலமாய் அவமானப்படுத்தப்பட்டு, சிறுமைப்படுத்தப்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்கள் இனி தம் விருப்படி வாழ இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழி வகை செய்திருக்கிறது. சமூகத்தில் மற்ற குடிமகன்களைப் போலவே அவர்களுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும் என்பதை நாம் அனைவரும் உணர்ந்தே தீர வேண்டும். 150 வருடங்களுக்கு முன் இச்சட்டத்தை அறிமுகப்படுத்திய பிரிட்டன், என்றோ தன் பாலின சேர்க்கையாளர்களுக்கு அனுமதி அளித்துவிட்டது.

இனிமேலும் சட்டத்தைக் காரணம் காட்டி அவர்களைத் துன்புறுத்தும் செயல்கள் குறையட்டும். இந்தியா அவர்களுக்கும் தாய்நாடு தான். அவர்களின் விருப்பத்திற்கேற்ப வாழவிடுவது தான் நல்ல குடிமகனின் தலையாய கடமை.