59 நிமிடத்தில் தொழிற்கடன் – புதிய அரசு இணையதளம்

0
119

வெறும் 59 நிமிடத்தில் வங்கிக் கடன் பெறுவதற்கான தனி இணைய தளத்தை இன்று தொடங்கி வைத்தார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி!

சிறு, குறு மற்றும் நடுத்தர  உற்பத்தி நிறுவனங்களுக்கான வங்கிக் கடன் விண்ணப்பத்திற்கு இன்று மத்திய நிதி அமைச்சகம் தனி இணைய தளம் ஒன்றைத் தொடங்கியது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, www.psbloansin59minutes.com   என்ற இந்த இணைய தளத்தைத் தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை நிறுவனங்கள் கடன் பெற முடியும். விண்ணப்பித்த 59 நிமிடங்களில் முதற்கட்டமாக கடனுக்கான அங்கீகாரம் / தகுதிக்கு அனுமதி கிடைக்கும். பின்னர்  அதிகபட்சம் 7-8 தினங்களுக்குள் இந்தக் கடன் வழங்க  59நிமிட இணைய தளம் வழி செய்கிறது.

59 Minuit loan

மேலும், சிறு தொழிலுக்கான வங்கியான SIDBI உட்பட மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் பேங்க், விஜயா பேங்க் மற்றும் இந்தியன் வங்கி போன்ற 5 பொதுத் துறை வங்கிகள் மூலமாக இத்தகைய கடன்களை வழங்க மத்திய நிதித் துறையின் நேரடிக் கண்காணிப்பில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் உற்பத்தி மந்தமாவதைத் தடுக்கவும், இத்தகைய கடன்களுக்கு முன்பு குறைந்த பட்சம்  25 நாட்கள் ஆனதைக் குறைக்கவும்  இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது இந்த நிறுவனங்கள் தங்களது வருமான வரிச் சான்றிதழ், ஜி.எஸ்.டி, கம்பெனி சான்றிதழ் போன்ற ஆவணங்களுடன் எளிமையாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம்  இன்று தெரிவித்துள்ளது.