இந்தியாவின் மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மொத்தம் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவானது நடைபெறுகிறது. இதனிடையே அடுத்து நாடு முழுவதும் தேர்தல்கள் நடத்தப்பட இருப்பதால் கூகுள் டூடுல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
வாக்களிப்பது எப்படி #இந்தியா / how to vote #India
இந்த டூடுல் “வாக்களிப்பது எப்படி #இந்தியா” என்று தமிழிலும் “how to vote #India” என்று ஆங்கிலத்திலும் முக்கிய சொல்லாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த டூடுலை கிளிக் செய்தால் வாக்களிப்பது எவ்வளவு முக்கியமான கடமை மற்றும் எப்படி வாக்களிக்கவேண்டும் என்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
முதல் கட்டம்
மக்களவைத் தேர்தலில் முதல் கட்டமாக 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கும் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. இந்த வாக்குப்பதிவோடு ஆந்திரா மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவைக்கும், சிக்கம் மாநிலத்தில் உள்ள 32 சட்டப்பேரவைக்கும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. ஒடிசாவில் உள்ள 142 சட்டப்பேரவையில் முதல் கட்டமாக 28 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் 25 தொகுதிகள், அருணாசலப் பிரதேசம் (2), அசாம் மாநிலத்தில் 5 தொகுதிகள், பிஹாரில் 4 தொகுதிகள், சத்தீஸ்கரில் ஒரு தொகுதி, ஜம்மு-காஷ்மீரில் 2 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 7 தொகுதிகள், மணிப்பூர், மிஸோரம், திரிபுரா, நாகாலாந்து, அந்தமான் நிகோபர் தீவுகள், லட்சத்தீவு ஆகியவற்றில் தலா ஒரு தொகுதி, மேகலாயாவில் 2 தொகுதிகள், ஒடிசாவில் 4 தொகுதிகள், உத்தப்பிரதேசத்தில் 8 தொகுதிகள், உத்தரகாண்டில் 5 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகள் என 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றிலுள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த முதல்கட்டத் தேர்தலில் 14 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.
வீடியோ
பொதுமக்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், முதல் தலைமுறை வாக்களர்களுக்கு வாக்களிக்கும் முறையையும் பற்றி கூகுளின் இந்த வீடியோ விளக்குகிறது.