மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் செல்வந்தரின் வீட்டில் பிறந்த பாபா அம்தே கருணையின் மனித சாட்சியமாக வாழ்ந்தவர். விரல் சொடுக்கும் நேரத்தில் இட்ட பணியினை சிரமேற்கொண்டு செய்யும் வேலையாட்கள், சட்டப்படிப்பு, வருமானம் கொழிக்கும் சொந்தத் தொழில் என எவ்வித பிரச்சனையும் இல்லாத அம்தே பின்னாளில் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு தலைவராக மாபெரும் சமூக மாற்றத்தினையும், ஒற்றுமையையும் முன்னெடுத்த நபராக மாறிய நாள் கொடுமையானது.

சிறு பொறி
உலகத்து புரட்சிகள் எல்லாம் எங்கோ விழுந்து துளிர்த்த சிறு பொறியின் மூலம் கிளர்ந்தவையே. அப்படி ஒரு தருணம் அம்தேவின் வாழ்விலும் நிகழ்ந்திருக்கிறது. உடம்பு முழுவதும் அழுகிய மனிதரை சாக்குகளால் சுற்றப்பட்ட நிலையில் பார்த்த அவருக்குள் நிகழ்ந்த மாற்றம் சொற்களால் விவரிக்க முடியாதவை. அன்றிலிருந்துதான் தொழுநோய்க்கு எதிராக வீடு வீடாக, தெருத்தெருவாக பிரச்சாரம் செய்யக் கிளம்பினார். வாழ்வின் உன்னத தருணம் ஏழைகளுக்கு உதவுவதே என்பது அம்தேவிற்குப் புரிந்த நேரத்தில் தன்னை பொதுச்சேவையில் அர்பணித்ததுக் கொண்டார்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியர்களே ஒன்றுபடுங்கள், ஒற்றுமையாய் இருங்கள் என்ற வாசகத்தைத் தாங்கியவாறு நடைபயணம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு வயது 72.
விருதுகள்
அம்தேவின் சேவையைப் பாராட்டி 1971 ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதினை அளித்தது. 1988 ஆம் ஆண்டு ஐநா வின் சிறந்த மனிதநேய செயல்பாடுகளுக்காக விருது பெற்றார். அமைதிக்கான காந்தி விருது 1999 ஆம் ஆண்டு அம்தேவிற்கு வழங்கப்பட்டது.
பிரம்மாண்ட வசதிகள் இருந்தும் ஏழைகளுக்கு இரங்கும் மனம் படைத்த அம்தே கடந்த 2008 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். நம்முடைய வாழ்க்கை நமக்கானது மட்டுமல்ல என்பதற்கு அம்தேவைவிட சிறந்த சான்று இருக்கமுடியாது.