தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒரே உச்சரிப்பு வரும்படி மாற்றப்பட இருக்கும் ஊர் பெயர்கள்

0
116

ஆங்கில மொழியில் உள்ள ஊர்கள் மற்றும் சாலைகளின் பெயர்களைத் தமிழில் மாற்ற இருப்பதாக தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. முதற்கட்டமாக, சென்னையில் 220 சாலைகளின் பெயர்கள் மாற்றப்பட உள்ளன.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தமிழகத்தில் உள்ள பல ஊர்களின் பெயர்களை, தங்களின் வசதிக்கேற்ப மாற்றிக் கொண்டனர். இதனால், பழமையான பெயர்கள் கூட, ஆங்கிலத்தில் உச்சரிப்பு மாறியதால் அர்த்தம் இழந்துள்ளன. எனவே, இது போன்ற பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப மாற்றும் பணியில் தமிழ் வளர்ச்சித்துறை ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில் திருவல்லிக்கேணி, தஞ்சாவூர், தூத்துக்குடி என்ற ஊர் பெயர்கள் ஆங்கிலத்தில் முறையே  ‘Triplicane’, ‘Tanjore’, ‘Tuticorin’ என ஆங்கிலேயரின் உச்சரிப்புக்கு ஏற்ப மாற்றப்பட்டன.

வத்தலக்குண்டு என்பது Bathlagundu என்றும், திண்டுக்கல் என்பது Dindigul என்றும் பயன்பாட்டில் இருந்துவருகிறது.  அவற்றைத் தமிழில் உள்ளது போல ஆங்கிலத்திலும் மாற்ற வேண்டியுள்ளது.

சென்னையில், ‘Halls Road’ என்பது ‘தமிழ்ச் சாலை‘ என மாற்றப்பட்டுள்ளது. இதைப் போல, முதல்கட்டமாக சென்னையில் உள்ள 220 சாலைகளின் பெயர்கள் மாற்றப்பட உள்ளன.

தமிழகம் முழுவதும், இத்திட்டத்தைச் செயல்படுத்த அனைத்து மாவட்டங்களிலும், ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் குழு அமைக்கப்பட உள்ளது. தமிழறிஞர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ள இந்த குழுவினர் மாற்ற வேண்டிய ஊர்கள் மற்றும் சாலைகளின் பெயர் பட்டியலை அளிப்பர்.

இதை, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக் குழு ஆய்வு செய்யும். பின், பெயர் மாற்றம் செய்து அதை புத்தகமாக வெளியிட்டு அரசின் நிர்வாகத் துறைகளுக்கு வழங்கப்படும். என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதேபோல் தமிழகத்தில் பல ஊர்களின் பெயர்களைத் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்தில் அதன் ஒலிக்குறிப்பு மாறாது அமைத்திட மாவட்ட வாரியாக உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைய ஆவணங்களின் அடிப்படையில் அந்தந்த ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டிய ஊரின் பெயர்களைக் குறிப்பிட்டு பொதுமக்கள் ஒன்றுகூடி தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி குழப்பமில்லாமல் ஆங்கிலத்திலும், தமிழிலும் ஒரே பெயரை ஊர்ப் பெயராகக் குறிப்பிடலாம்.