எதற்காக வலைத்தளங்கள் உருவாக்கப்படுகின்றனவோ, அதைத் தவிர்த்து மற்ற அனைத்து வேலைகளுக்கும் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக 2018 ஆம் ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தையாக “Fake News” தேர்வு செய்யப்பட்டதிலிருந்தே தெரியவருகிறது போலிப் புரட்சியாளர்களின் புரட்டு. அதைத் தடுக்கும் பொருட்டு வாட்ஸ்அப்பின் புதிய திட்டங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
தேர்தல் பராக்..பராக்..
இந்தியா உட்பட பல நாடுகளில், Facebook மற்றும் இதர வலைத்தள வாசிகளின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, அந்தத் தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா (Cambridge analytical) இணைய புரோக்கர் நிறுவனம் மூலம் அந்தந்த நாட்டின் தேர்தலுக்குப் பயன்படுத்தப் படுவதாக வந்த புகாரையடுத்து மத்திய அரசும் , உச்சநீதிமன்றமும் சமூக வலைத்தளங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது. அதன்படி WhatsApp, Facebook உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் தகவல் திருட்டு மற்றும் போலித் தகவல்கள் பரப்புதல் போன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவோரையும் அச்செய்திகளின் வேகத்தை கட்டுப்படுத்துவதாகவும் சத்தியம் செய்தன. தற்போது தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் ஆணையத்தை விட WhatsApp நிறுவனத்திற்குத் தலைவலி அதிகமாயுள்ளது. தேர்தல் நேரங்களில் அரசியல் சார்ந்த போலிக்கருத்தைப் பதிவிடுவோருக்கும், பரப்புவோருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது வாட்ஸ்அப்.
ட்விட்டருக்கு வந்த சோதனை
கடந்த ஆண்டு இந்தியா வந்திருந்த Jack Dorsey (TWITTER CEO) டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு போது, யாரோ ஒரு புண்ணியகர்த்தா “பிராமண ஆதிக்கம் ஒழிக” என்று பொருள் படும்படியான பதாகை ஒன்றை கை வலிக்கிறதே என்று டோர்சே விடம் கொடுக்க, அவரும் பவ்வியமாக வாங்கிக்கொண்டு கேமாரவிற்கு போஸ் குடுத்தார். வந்ததே ஆபத்து டோர்சேவிற்கு. டரியலானது டுவிட்டர்.

ஃபேக் பிரதர்ஸ்
உலகமெங்கிலும் 200 மில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்அப் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 6 மில்லியன் போலிகளை பிசிறு தட்டிவிட்டது. அதுமட்டுமில்லாது இலவச திருமண மையத்தை நடத்தி வரும் Facebook க்கும் அதன் குழந்தை வாட்ஸப்பும் ஆதாரமற்ற வதந்திகளால் 29 உயிர்கள் பலியாவதற்கு காரணமாயின. கிடுக்குப்பிடி பிடித்த மத்திய அரசால், செய்தி ஒன்றை “ 5 பேருக்கு மேல் பகிர முடியாத “அப்டேட் கூட போடும்படியானது. மத்திய அரசும் Anti-Mob Lynching Law என்ற சட்டத்தையும் பிறப்பித்தது. மேலும் போலி செய்தி போடும் பிளாக்க்ஷிப்புகளை காலி செய்ய, அது பகிர்ந்து வைக்கும் தகவல்களை பின்தொடர வழிசெய்யுமாறு வாட்ஸ்அப்பை கேட்டுக்கொண்டது. ஏற்கனவே உள்ள விதிப்படி பதிவேற்றம் செய்யப்பட்ட தகாத கருத்துக்களை 24 மணி நேரத்திற்குள்ளாகவே நீக்கிவிட வேண்டும்.
எப்படி தடுப்பாங்க?
அதிக எழுத்துக்களை கொண்ட எந்த ஒரு தகவலும் அதற்காகவே தயாரிக்கப்பட்ட மென்பொருளால் ஆராயப்பட்டு முகாந்திரம் இருந்தால் தடை செய்யப்படும். ஆசாமியும் அலேக் செய்யப்படுவார்.
பிரச்சாரத்தை சுருக்கமாக பதிவிட்டாலும் முக்கியமான வார்த்தைகள் “ செயற்கை நுண்ணறிவால் (artificial intelligence)” அலசி ஆராயப்படும். (எ.கா : காங், மாற்றம் முன்னேற்றம், 15 லட்சம் போன்றவைகள் இருக்கலாம்)
பலகட்டமாக, அரசியல் கட்சிகளிடம் தங்களது நிறுவனங்களின் தொழில்நுட்ப கொள்கைகளை படித்துக் காட்டவும் வாட்ஸ்அப் தயார். போதாத குறைக்கு திரித்த தகவல்களுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யவும் தலைப்பட்டுள்ளது.
Facebook ம் அரசியல் சந்தேகத்திற்குரிய கருத்துக்களை பதிவேற்றும் பிரமுகர்களின் அக்கவுன்ட்டுகளுக்கு பூட்டு போட்டு சாவியை தொலைக்கவுள்ளது. டுவிட்டர் தனது தளத்தில் மோதிக்கொள்ளும் பெரிய அரசியல் தலைகளுக்கு மட்டும் வழக்கம்போல விலக்கு அளிக்கும்.
50 கோடிக்கும் மேலுள்ள ஸ்மார்ட்போன்கள், 80 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள், 2 லட்சம் தேர்தல் அதிகாரிகள், 36 (29+7)தலைமை தேர்தல் அதிகாரிகள், ஒரே தேர்தல் ஆணையர் , மற்றும் எத்தனையோ ஃபேக் ஐடிகள். கோப்பை யாருக்கு? பொறுத்திருந்து பார்ப்போம்.