இந்தியாவில் ஊழல் இல்லாத துறையெல்லாம் கண்டுபிடிப்பதென்பது எம்பெருமானின் முடி அடியை கண்டுபிடித்த கதைதான். அரசாங்க அலுவலகங்களில் பணத்தை நீட்டாமல் உங்களால் இந்திய அரசு வழங்கும் எந்தத் திட்டத்தையோ சலுகையையோ ஒரு சதவிகிதம் கூட அனுபவிக்க முடியாது. உங்களுக்குக் கரைவேட்டிகளைத் தெரிந்திருந்தால் நிலைமை கொஞ்சம் உங்களுக்கு சுமூகமாக இருக்கலாம். மற்றபடி பிறப்புச் சான்றிதல் முதல் இறப்புச் சான்றிதல் வரை காந்தியின் தயவு இல்லையெனின் “இன்றுபோய் நாளை வா கதைதான்”. அதெல்லாம் சரி புதிய அரசு, புதிய கட்சி, புதிய தலைவர்கள் வந்தால் இந்த நிலை மாறும் என்று நினைக்கிறீர்களா? பாவம் நீங்கள்.
இது ஒரு ஊழல் மட்டுமல்ல. பல ஊழல்களுக்கு இது பிள்ளையார் சுழி போட்டுவைக்கிறது.

உண்மையில் அரசாங்கத்தை ஊழல் கறையில்லாததாக மாற்றுவோம் என முழங்கும் எந்தக் கட்சியும் அதன்படி நடப்பதில்லை. அதோடு அரசியல் கட்சிகளின் ஊழலின் அளவைப்பார்த்து பல தனியார்துறை நிறுவனங்கள் பிரம்மிப்பில் மூழ்கியுள்ளன. சரி, இவ்வளவு பணத்தை எப்படி அரசியல் கட்சிகள் ஈட்டுகின்றன. தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு மக்களால், தனியார்துறை நிறுவனங்களால் வழங்கப்படும் நிதி பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இந்தியாவின் மிகப்பெரிய ஊழலில் இதுதான் முதலிடத்தில் இருக்கிறது. இது ஒரு ஊழல் மட்டுமல்ல. பல ஊழல்களுக்கு இது பிள்ளையார் சுழி போட்டுவைக்கிறது. ஆளும் கட்சிகளுக்கு நிதி அளித்தததானால் தங்களது சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எளிதில் அரசிடம் இருந்து அனுமதி வாங்கிக் கொள்கின்றனர். இப்படி ஒரு வழக்கம் காலங்காலமாய் இந்தியாவில் புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் தற்போது மோடி தலைமையிலான மத்தியரசு கொண்டுவந்திருக்கும் “தேர்தல் நன்கொடைப் பத்திரம்” என்னும் சட்டம் உலகத்து ஊழல்களை எல்லாம் பொறாமைப்பட வைத்திருக்கிறது.
தேர்தல் நன்கொடைப் பத்திரம்
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் பொதுமக்கள், நிறுவனங்கள் 1000 ரூபாய் முதல் ஒரு கோடி வரை பணத்தினை நன்கொடைப்பத்திரமாக வழங்கலாம். பாரத ஸ்டேட் வங்கியில் கிடைக்கும் இந்த பத்திரங்களை விருப்படுவோர் எவரும் தாங்கள் விருப்பப்படும் கட்சி எதற்கும் அளிக்கலாம். பின்னர் அக்கட்சிகள் தங்களுடைய வங்கிக் கணக்கின் மூலம் அதனை பணமாக மாற்றிக்கொள்ளும். இதனால் கறுப்புப்பணத்தினை ஒழிக்கமுடியும் என்கிறது அரசு.
நூற்றாண்டுப் பொய்
மத்திய அரசின் இந்தப் புதிய திட்டம் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்த இருப்பதாக பல அறிஞர்கள் தங்கள் கண்டனத்தைப் பதிவுசெய்து வருகின்றனர். ஏனெனில் வங்கிகளில் யார் இந்தப் பத்திரங்களை வாங்குகிறார்கள்? யாரிடம் வழங்குகிறார்கள் என்பதுபற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. மேலும் தனிநபர் நிதியாக வழங்கக்கூடிய உச்சவரம்பையும் மத்திய அரசு நீக்கிவிட்டது.

ஒரு நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் பெற்ற லாபத்தில் இருந்து 7.5% வரை மட்டுமே தேர்தல் நிதியாக அளிக்கலாம் என்ற விதிமுறையை காலி செய்திருக்கிறது மத்திய அரசு. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனம் தாங்கள் விரும்பும் எவ்வளவு தொகையையும் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பாதிப்பு எங்கே நாட்டை இழுத்துச் செல்லப்போகிறது தெரியுமா?
கரையான் புற்று
பினாமி என்று ஓர் வார்த்தை இருக்கிறதல்லவா? இந்தியாவில் உள்ள எல்லா அரசியல்வாதிகளுக்குப் பின்னாலும் அப்படி ஒரு ஆசாமி நிச்சயம் இருப்பார். அதற்கென்னவா? இனிமேல் அவர்கள் மூலமாக புதுப்புது நிறுவனங்கள் தொடங்கப்படும். அவற்றின் மூலமாக தேர்தல் நிதியாக தங்களிடம் உள்ள கறுப்புப் பணத்தை எளிதாக பயன்படுத்திக்கொள்வார்கள். ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆன நிறுவனங்களே நிதி தரலாம் என்ற கொள்கையை வேறு நீக்கிவிட்டது மத்தியரசு. இப்படி ஓர் அதிசிறந்த சட்டத்தை வைத்துக்கொண்டு கறுப்புப் பணத்தை ஒழிக்க இருக்கும் அரசிற்கு வாழ்த்துக்கள் உரித்தாகுக.